தமிழகத்தைப் பாலைவனமாக்கும் மேகதாட்டு; தீர்வு என்ன?

பத்திரிகையாளர் டி.வி. சோமு

தற்போதைய கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், “காவிரி உற்பத்தியாவது எங்கள் மாநிலத்தில்தான், மேகதாட்டு அணை கட்ட எவரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை” எனப் பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

@ திட்டமும் எதிர்ப்பும்

தமிழ்நாடு எல்லையிலிருந்து 15 கி.மீ. தொலைவில், 9,000 கோடி ரூபாய் மதிப்பில், 67.16 டி.எம்.சி. கொள்ளளவில் இந்த அணை திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூரு குடிநீர் மற்றும் மின்சாரத்திற்காக இது அவசியம் என்கிறது கர்நாடகா.

ஆனால், தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் புறக்கணித்து, நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல் தொடர்ந்து செயல்படுகிறது கர்நாடகா.

அதாவது, வறட்சிக் காலத்தில் மேல்மடை அணைகளிலிருந்து நமக்குரிய தண்ணீரைத் திறந்துவிடுவதில்லை.

அதற்குப் பின்னுள்ள இடைப்பட்ட நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழையால்தான் கொஞ்சம் தண்ணீராவது தமிழ்நாட்டுக்கு வருகிறது.

அந்தப் பகுதியில் மேகதாட்டு அணையைக் கட்டி, அந்தச் சொச்ச நீரையும் தன்வசப்படுத்த முயற்சிக்கிறது கர்நாடகா.

@ பொருளாதார, வாழ்வாதாரப் பாதிப்புகள்

அணை கட்டப்பட்டால் டெல்டாவில் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாகி, 40 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி பாதிக்கப்படும்.

இதனால் ஆண்டுக்கு 12,000 கோடி ரூபாய் நேரடி இழப்பும்; அரிசி ஆலை, கால்நடை, போக்குவரத்து முடக்கத்தால் 3,000 கோடி ரூபாய் மறைமுக இழப்பும் ஏற்படும்.

மேலும், 10 லட்சம் விவசாயத் தொழிலாளர்களும், விவசாயம் சார்ந்த இதரத் துறைகளில் 2 லட்சம் பேரும் வேலை இழப்பார்கள்.

ஆற்றில் நீர் வராததால் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உவர்ப்பாகும். காவிரியையே நம்பியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடுமையான குடிநீர்ப் பஞ்சமும் ஏற்படும்.

@ தீர்ப்புகளும் பன்னாட்டு விதிகளும்

கீழ்மடை மாநிலமான தமிழகத்தின் அனுமதியின்றி அணை கட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றமும் காவிரி ஆணையமும் தெளிவுபடுத்தியுள்ளன.

மேலும் உலக அளவில், 1966-ல் ஹெல்சின்கி விதிகள், 1997-ல் ஐ.நா.

நதிநீர் உடன்படிக்கை மற்றும் பெர்லின் விதிகள் ஆகியவை “நதி பாயும் அனைத்து நாடுகளுக்கும் அதில் சம உரிமை உண்டு” என்றே கூறுகின்றன.

டான்யூப் நதியை ஜெர்மனி, ஹங்கேரி ஆகிய நாடுகளும் ரைன் நதியை சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் அமைதியான முறையில் இப்படிப் பகிர்ந்து கொள்கின்றன.

அதேநேரம், டான்யூப் நதியில் ஸ்லோவாக்கியாவின் அணை முயற்சியையும், உருகுவே நதியில் உருகுவேயின் ஆலை முயற்சியையும் சர்வதேச நீதிமன்றம் தடுத்து, கீழ்மடை நாடுகளின் உரிமையை நிலைநாட்டியுள்ளது.

@ தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியவை

பன்னாட்டு நீதிமன்றத் தீர்ப்புகளை (டான்யூப், உருகுவே வழக்குகள்) முன்மாதிரியாகக் காட்டி, தமிழகத்தின் ஒப்புதலின்றி அணை கட்டுவது கூட்டாட்சிக்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தில் வாதிட வேண்டும்.

ஒன்றிய அரசு எவ்வித இறுதி அனுமதியையும் கர்நாடகாவிற்கு வழங்கிவிடக் கூடாது என்பதில் அனைத்து வழிகளிலும் அரசியல் அழுத்தம் தர வேண்டும்.

@ உள்நாட்டு நீர் மேலாண்மை

தமிழ்நாட்டுப் பகுதிக்குள் காவிரி வரும் இடத்தில் உள்ள ராசிமணல் பகுதியில், சமன்படுத்தும் அணை ஒன்றைக் கட்ட வேண்டும்.

சமன்படுத்தும் அணை என்பது வழக்கமான பெரிய அணைகளைப் போல தண்ணீரை மிக நீண்ட காலத்திற்குத் தேக்கி வைப்பதற்காகக் கட்டப்படுவதில்லை;

தண்ணீரைச் சீராக விநியோகிக்கக் கட்டப்படும் ஒரு இடைக்காலச் சேமிப்பு அணை ஆகும்.

வெள்ளக் காலங்களில் கர்நாடகா தனது அணைகளிலிருந்து திறந்துவிடும் உபரி நீர், மேட்டூர் அணையும் நிரம்பிய பிறகு பெருமளவில் வீணாகக் கடலில் கலக்கிறது.

இதை ராசிமணல் அணையில் தேக்கி வைத்து, மேட்டூரில் நீர் குறைந்த பிறகு அங்கு அனுப்பலாம்.

ராசிமணல் பகுதியில் அணை அமைப்பதன் மூலம் கணிசமான அளவில் நீர்மின்சாரம் (Hydroelectric Power) தயாரிக்க முடியும்.

அத்துடன் தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து, அப்பகுதிகளின் குடிநீர்த் தேவையும் பூர்த்தியாகும்.

காவிரியின் குறுக்கே தடுப்பணைகள், கதவணைகள் மூலம் வெள்ள நீரைச் சேமிப்பது மற்றும் டெல்டா நீர்நிலைகளைத் தூர்வாருவது போன்ற பணிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.

@ வரலாறு சொல்லும் செய்தி

காவிரியைத் தடுத்து அணை கட்ட முயற்சித்த மன்னனைச் சோழர் படை வென்று, அணையைத் தகர்த்ததாகச் சொல்வார்கள். ஆனால், 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தை நினைவில் கொள்வது அவசியம்.

அப்போது மைசூர் மன்னன் சிக்கதேவராயன் காவிரியின் குறுக்கே அணை கட்ட முயன்றான்.

உடனே, தஞ்சை மன்னர் ஷாஜியும், மதுரை அரசி ராணி மங்கம்மாளும் இணைந்து போருக்குத் தயாரானார்கள்.

அதற்குள் பெருவெள்ளம் வந்து அணை தகர்ந்ததால் படையெடுப்பு தவிர்க்கப்பட்டது.

இதில் நாம் அறிய வேண்டிய விஷயம் என்னவென்றால், தஞ்சை மன்னர் ஷாஜியும், மதுரை அரசி ராணி மங்கம்மாளும் கடும் விரோதப்போக்குடன், எதிரெதிர் துருவத்தில் இருந்தவர்கள்.

எனினும், வாழ்வாதாரப் பாதிப்பு என்றவுடன் தங்கள் பகையை மறந்து இணைந்து செயல்படத் தீர்மானித்தார்கள்.

இது போர்க்காலம் அல்ல, அரசியல் காலம். தமிழ்நாட்டின் கட்சிகளும் தங்களுக்கான விரோதப் போக்கை மறந்து, காவிரி உரிமைக்காக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்!

You might also like