தமிழ்த் திரையின் சிரிப்பு ஜோடி என்.எஸ்.கிருஷ்ணன் & மதுரம்.
இந்தக் காதல் தம்பதியரின் வாழ்க்கையைத் தொடாமல் தமிழகத்தின் அரசியலையும், வரலாற்றையும் யாரும் சொல்லி முடிக்க முடியாது என்பதே இவர்களது பெருமையைச் சொல்லும்.
எல்லா ஆண்களின் வெற்றிகளுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள்.
அப்படி கலைவாணர் என்ற கலைமேதை பெற்ற வெற்றிகளுக்கெல்லாம் திரையிலும் நிஜத்திலும் பின்னால் இருந்தவர் டி.ஏ மதுரம்.
சம்பாதித்ததையெல்லாம் மக்களுக்குக் கொடுத்து வாழ்ந்த அந்த கலைமேதைக்கு எல்லாமுமமாக இருந்தவர் டி.ஏ. மதுரம்.
இருவரும் இணைந்து ஈட்டிய சம்பாத்தியங்கள் கணவரால் வள்ளல் குணத்தால் அள்ளிக் கொடுக்கப்பட்ட போதெல்லாம் எந்த மறுப்புமின்றி தானும் அதை பின்பற்றிய பெருந்தகை மதுரம்.
ஒருமுறை தன் மனைவி மதுரத்திடம் இப்படிச் சொன்னார் கலைவாணர்:
“நான் ஐம்பது வயசுக்குள்ள இறந்துடணும் மதுரம். ஒரு கலைஞன் தன்னோட கலை வறண்டு போறதுக்கு முன்னாடி இறந்துடணும்!”
– சொன்னபடியே நாற்பத்தி ஒன்பது வயதில் மரணமடைந்தார் கலைவாணர்!
கிருஷ்ணன் தனது சொந்த ஊரான நாகர்கோவிலில் ‘மதுரபவனம்’ என்ற நவீன மாளிகை கட்டினார்.
மதுரத்தின் சொந்த ஊரான ஸ்ரீரங்கத்தில், அம்மா மண்டபம் அருகில் அவருக்கு ஒரு வீடு கட்டிக் கொடுத்து, அதற்கு ‘கிருஷ்ண பவனம்’ என்று பெயரிட்டார்.
நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்ற அவர், டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும், கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடகக் கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித் தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும்!
நன்றி – பிரசாந்த் முகநூல் பதிவு