தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய், சினிமாவில் தான் ஏற்படுத்திய தாக்கம், அரசியலில் எந்த அளவு எடுபடும் என்பதை அளவீடு செய்யும் வகையில் விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் இரு மாநாடுகளை நடத்தினார்.
இரண்டு மாநாடுகளிலும் லட்சக்கணக்கானோர் திரண்டனர். வடக்கிலும், தெற்கிலும் தனக்கு சமமான ஆதரவும், செல்வாக்கும் இருப்பதைத் தெரிந்து கொண்டார் விஜய்.
மாநாடுகளின் தொடர்ச்சியாக மக்களை நேரில் சந்திக்க முடிவு செய்து, திருச்சியில் தனது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த சனிக்கிழமை தொடங்கினார்.
இந்த பயணத்தை ‘திருச்சி குலுங்கியது’ என பல இதழ்கள் சிலாகித்து இருந்தன. திருச்சி மரக்கடையில் விஜய் காலை 10.30 மணிக்கு பேசுவதாக திட்டம்.
ஆனால், விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்ட மைதானத்துக்கு அவரது வாகனம் ஊர்ந்தே வரவேண்டி இருந்தது. சாலையின் இரு மருங்கிலும் அவ்வளவு ஜனத்திரள். மரக்கடைக்கு அவர் மதியம் 2.30 மணிக்குத்தான் வர முடிந்தது.
எனினும் காலை 6 மணியில் இருந்து மக்கள் காத்திருந்தனர். மைக் மற்றும் ஸ்பீக்கர் கோளாறால் அவரது பேச்சை கேட்க முடியவில்லை. அடுத்த பிரச்சாரம் – அரியலூரில். அங்கு அவர் மதியம் 1.30 மணிக்கு பேசுவதாக இருந்தார்.
திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் வழி நெடுகிலும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதால், இரவு 8.30 மணிக்கு அரியலூர் வந்து சேர்ந்தார்.
இப்போது அவரது மைக் சரி செய்யப்பட்டிருந்தது. திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய விஜய், மத்திய – மாநில அரசுகளை வறுத்தெடுத்தார்.
இதனை முடித்துக்கொண்டு, குன்னம் சென்றார். இரவு வெகு நேரமாகிவிட்டதால் அங்கு விஜய் பேசவில்லை. முகத்தை மட்டும் காட்டி விட்டுச் சென்றார்.
அவரது நான்காவது பிரச்சாரக் கூட்டம். பெரம்பலூரில் நடப்பதாக இருந்தது. நள்ளிரவு நேரம் ஆகி விட்டதால் அங்கு அவர் செல்லவே இல்லை. இன்னொரு நாளில் பெரம்பலூர் செல்வதாக அறிவித்துள்ளார்.
விஜய்யின் மாநாடுகள், பிரதான கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது என்றால், அவரது ‘ஒன் டே டூர்’, பீதியையும் அச்சத்தையும் ஒரு சேர உருவாக்கியுள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்
இதுநாள் வரை விஜய்யை விமர்சிக்காமல் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதன் முறையாக மவுனம் கலைத்தார்.
“பழைய எதிரிகள், புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுப் பார்க்க முடியாது.
கொள்கையில்லா கூட்டத்தை சேர்ந்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல திமுக” என தவெகவை நேரடியாகவே விமர்சித்தார்.
அவரது அமைச்சரவை சகாக்களும் கூட, மற்ற பிரச்சினைகளை விட்டுவிட்டு விஜய்யை குறி பார்த்து சுட ஆரம்பித்துள்ளனர். சென்னையின் மா.சுப்பிரமணியன் முதல் தூத்துக்குடியின் கீதா ஜீவன் வரை விஜய்யை துவம்சம் செய்துள்ளனர்.
சம்மந்தமில்லாமல் இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகமும் மூக்கை நுழைத்துள்ளார்.
“கம்யூனிஸ்ட் அரசியல் வரலாற்றைப் படியுங்க மிஸ்டர் விஜய்” என அவர் அட்வைஸ் செய்ய காரணமே இல்லை. விஜய் தனது பரப்புரையில் கம்யூனிஸ்டுகளை தொடவே இல்லை. அப்புறம் ஏன் சண்முகம் குதிக்கிறார் எனப் புரியவில்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தன் மீது வீசப்படும் ஏவுகணைகளை எதிர்கொள்ள விஜய் முழு வீச்சில் தயாராகி விட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை அதற்கு ஓர் உதாரணம்.
விஜய் அறிக்கையின் சாராம்சம்:
“விஜய் வெளியே வரவே மாட்டான். மக்களைச் சந்திக்கவே மாட்டான் என்று ஆள் வைத்துக் கதையாடல் செய்தோர், இப்போது வெவ்வேறு விதங்களில் புலம்பத் தொடங்கி உள்ளனர்.
இதை முன்கூட்டியே ஒப்புக்கொள்வது போலத்தான் தங்களது கதறலை முப்பெரும் விழா என்கிற கடிதம் ஒன்றின் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தனர்.
புதிய எதிரிகள் என்று பெயர் சொல்லாமல் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. பழையன கழிதலும் புதியன புகுதலும் தானே பழந்தமிழ் மரபு? இன்னும் என்னென்னவோ வெறுப்பையும் விரக்தியையும் கக்கும் வார்த்தைகள் அக்கடிதத்தில் அழுதுகொண்டிருந்தன.
இடையறாமல் ஊறுகள் செய்வதையே கொள்கையாகக் கொண்ட இதயமற்ற இந்தத் திமுகவிற்கு, கொள்கை கோட்பாடுகளோடு மக்கள் விரும்பும் இயக்கம் ஒன்று எப்போது வந்தாலும் அதன் மீது கொள்கையற்ற கூட்டம் என்ற நமைச்சலையும் குமைச்சலையும் கொட்டுவது ஒன்றும் புதிதில்லை தானே?” என்று விஜய் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருந்தாலும், திமுக – தவெக இடையே வார்த்தை யுத்தம் ஆரம்பமாகிவிட்டது.
– பாப்பாங்குளம் பாரதி.