குமார சம்பவம் – திரையனுபவம் சுமாரா, சூப்பரா?

பத்திரிகை, தொலைக்காட்சி என ஊடகம் சார்ந்து வெவ்வேறு பணிகளைச் செய்பவர்களின் கணிசமானோர் சினிமா கனவுகளோடு சென்னைக்கு வந்தவர்களாகவோ அல்லது அந்த எண்ணத்தோடு வெவ்வேறு இடங்களில் பிழைப்பு மேற்கொள்பவர்களாகவோ இருந்து வருகின்றனர்.

அவர்களில் சிலர் திரைப்படத்துறைக்குள் நுழையும்போது ரசிகர்களுக்குக் கிடைக்கிற திரையனுபவம் வழக்கத்திற்கு மாறானதாக இருந்ததைக் கடந்த காலம் உணர்த்துகிறது.

ரேடியோ ஜாக்கியாக இருந்து, தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆகி, நடிகராகத் திரையில் இடம்பிடித்து, தற்போது இயக்குனராக உயர்ந்திருக்கும் பாலாஜி வேணுகோபாலையும் அந்த வரிசையில் சேர்க்கலாமா என்ற கேள்வியை எழுப்பியது ‘லக்கிமேன்’ திரைப்படம். அது ‘சுமாரான’ திரையனுபவத்தைத் தந்தது.

அதனைத் தொடர்ந்து, இப்போது அவர் ‘குமார சம்பவம்’ 

திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருக்கும் குமரன் தியாகராஜன் இதில் நாயகன். தமிழில் சில தொடர்களில் தலைகாட்டிய பாயல் ராதாகிருஷ்ணா இப்படத்தின் நாயகி.

இவர்களோடு குமரவேல், ஜி.எம்.குமார், பாலசரவணன், வினோத் சாகர், லிவிங்க்ஸ்டன், வினோத் முன்னா, சிவா அரவிந்த், கௌதம் சுந்தர்ராஜன், அர்ஜெய் என ஒரு பட்டாளமே இதில் நடித்திருக்கிறது. அச்சு ராஜாமணி இதற்கு இசையமைத்திருக்கிறார்.

சரி, ‘குமாரசம்பவம்’ தருகிற திரையனுபவம் சுமாரா, சூப்பரா?

‘கு.ச.’ கதை!

குமரன் (குமரன் தியாகராஜன்) திரைப்பட இயக்குனர் ஆகும் முயற்சிகளில் இருப்பவர். தாய், தங்கை, தாத்தா சுப்பையா (ஜி.எம்.குமார்) ஆகியோருடன் ஒரு பழைய வீட்டில் வசித்து வருகிறார்.

அதே வீட்டில் வரதராஜன் (குமரவேல்) என்பவர் வாடகைக்கு இருந்து வருகிறார். ஆனால், அவரைத் தனது சொந்த மகனாகப் பாவிக்கிறார் சுப்பையா. அது குமரனுக்குக் கொஞ்சம் கூடப் பிடிப்பதில்லை.

வரதராஜன் ஒரு சமூக ஆர்வலர். தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தில் நிகழ்கிற தவறுகளைக் கேள்வி கேட்பவர். அவற்றைச் சரி செய்வதற்கான வழிவகைகளைக் கண்டறிந்து செயல்படுத்துபவர். அவரால் பல தொழிலதிபர்கள் நீதிமன்றங்களுக்குச் செல்ல நேரிட்டிருக்கிறது.

ஒருநாள் அந்த வரதராஜன் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சடலத்தை முதலில் பார்த்தவர்கள் தொடங்கி, தியாகராஜன் சம்பந்தப்பட்ட அனைவரும் போலீசின் சந்தேகப் பார்வையில் சிக்குகின்றனர்.

அப்போது, வரதராஜனுக்கும் தனக்குமான சம்பந்தம் பற்றி இன்ஸ்பெக்டரிடம் (சிவா அரவிந்த்) சொல்லத் தொடங்குகிறார் குமரன்.

அதன் வழியே வரதராஜன் எப்படிப்பட்டவர்? குமரன் குடும்பத்திற்கும் தன்னைச் சுற்றியுள்ள இதர மனிதர்களுக்கும் அவர் எப்படிப்பட்ட நன்மைகளைச் செய்தார் என்பது நமக்குத் தெரிய வருகிறது.

அதோடு, அவர் எப்படி இறந்தார் என்பதற்கு இக்கதை என்ன பதில் சொல்கிறது? அதுவே இப்படத்தை ரசிப்பதற்கான யுஎஸ்பி ஆக உள்ளது.

வசனங்கள் ஊட்டும் ‘கிச்சுகிச்சு’!

‘குமார சம்பவம்’ படத்தில் வரும் நடிகர்களின் இருப்பும் கேமிரா முன்பாக அவர்கள் நிறுத்தப்பட்டிருக்கும் விதமும் ‘நாடக பாணி’யை நினைவூட்டுகின்றன. ஏன், சில பாத்திரங்களின் உடல்மொழியும் வசன உச்சரிப்பும் கூட அப்படித்தான் இருக்கின்றன.

அதனை மீறி, காட்சிகள் நகர நகர ‘காமெடி த்ரில்லர்’ பார்த்த அனுபவத்தைத் தருகிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால் அதுவே இப்படத்தின் பலம். அந்த அனுபவம் ‘கிளாசிக்’ ஆக தோன்றுகிறதா என்பது அவரவர் மனதைப் பொறுத்தது.

நாயகன் குமரன் தியாகராஜனுக்கு இது முதல் படம். அதனால், ‘பெர்பெக்ட்’ என்று சொல்லும்படியாக அவரது நடிப்பு இல்லை.

பாயல் ராதாகிருஷ்ணா சில காட்சிகளில் வசீகரிக்கிறார். அவருக்கான இருப்பும் குறைவாகவே உள்ளது.

பாலசரவணன் முதலில் அடிக்கிற சில ‘ஒன்லைனர்கள்’ சிரிப்பை வரவழைக்காவிட்டாலும், போகப் போக நம்மையும் அறியாமல் வாய்விட்டுச் சிரிக்கிறோம். அதுவே அவரது பாத்திரத்திற்கான வெற்றி.

அவருக்கு ஈடாக, இதில் வினோத் சாகர் அசத்தியிருக்கிறார். இனி அவரை ‘சைக்கோ வில்லனாக’ யாரும் பார்க்க மாட்டார்கள்.

லிவிங்ஸ்டன், ஜி.எம்.குமார், குமரவேல் போன்றோர் தங்களது பல ஆண்டு கால நடிப்பனுபவத்தால் நம்மைப் புன்னகைக்க வைக்கின்றனர்.

இவர்களோடு வினோத் முன்னா, சிவா அரவிந்த், அர்ஜெய், சார்லஸ் வினோத், விஜய் ஜாஸ்பர், சரவணன், கே.கோபால், டெலிபோன் ராஜ் என்று சுமார் இரண்டு டஜன் பேர் இதில் தோன்றியிருக்கின்றனர். அவர்கள் முகங்கள் தெளிவாகத் தெரிகிற வகையில் இதில் காட்சிகள் வார்க்கப்பட்டிருக்கின்றன.

குறும்படம் அல்லது சீரியல் போன்ற காட்சியாக்கம் தெரிந்தாலும், காட்சிகளில் இருக்கிற ஒவ்வொரு அசைவையும் திரையில் சரியாகக் காட்டுவதற்கு மெனக்கெட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜகதீஷ்.

பிரேமுக்குள் தெரிகிற விஷயங்கள் யதார்த்தமாகவும் திரும்பத் திரும்ப உற்றுநோக்கும் வகையிலும் அமைய வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார் கலை இயக்குனர் கே.வாசுதேவன்.

ரொம்பவே ‘ஷார்ப்’ ஆக கதை சொல்ல வேண்டுமென்ற நோக்கில் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் மதன்.

அச்சு ராஜாமணி தந்திருக்கும் பின்னணி இசை நிறையவே நம்மைச் சிரிக்க வைக்கிறது, நெகிழ்வூட்டியிருக்கிறது.

காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப அமைந்திருக்கும் டிஐ, ஒலி வடிவமைப்பு, விஎஃப்எக்ஸ், ஒப்பனை, ஆடை வடிவமைப்பு என்று பல விஷயங்கள் ஒன்றிணைந்து, நாம் பெறும் திரையனுபவத்தை மெருகேற்றியிருக்கின்றன.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாலாஜி வேணுகோபால். வசனங்கள் நமக்கு கிரேஸி மோகன், எஸ்.வி.சேகர் ‘வகையறா’ மேடை நாடகங்களை லேசாக நினைவூட்டுகின்றன.

ஒருகட்டத்தில் அந்த எண்ணம் மங்கி மறைந்து, கதையோடு கதாபாத்திரங்களோடும் நம்மை ஒன்ற வைத்து, பின்னர் கிச்சுகிச்சு மூட்டுகிறது சில வசனங்கள்.

அவற்றில் சில ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளில் இருக்கும் ஒரே உச்சரிப்பு சார்ந்ததாக இருக்கின்றன; சில இடங்களில் பாத்திரங்கள், சம்பந்தப்பட்ட நடிகர் நடிகையரை ‘கலாய்க்கிற’ விதத்தில் இருக்கின்றன. காட்சிச் சூழலை சில வசனங்கள் கிண்டலடிக்கின்றன.

இத்தனைக்குப் பிறகும், இந்தக் கதையில் வரும் மையக்கேள்வியான ‘வரதராஜன் செத்தது எப்படி’ என்ற கேள்வி நம் மனதில் அப்படியே நீடிக்கிறது.

அதற்கேற்றவாறு காட்சிகளை அடுக்கியிருப்பதில், கதை சொன்ன வகையில் நம்மை வசீகரிக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.

குமரன், பாயல் சம்பந்தப்பட்ட பாடலொன்றில் ஒரு பாட்டியின் புகைப்படத்தை அவர்கள் கையில் வைத்திருப்பதாகச் சூழல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாயகனின் செய்கைகளுக்கு ஏற்ப அந்தப் பாட்டி ரியாக்ட் செய்வது போன்று அந்தப் புகைப்படத்தை மாற்றி மாற்றிக் காட்டியிருப்பது ‘பழைய டெக்னிக்’ என்றாலும் ஈர்க்கிறது.

வெறுமனே சிரிக்க வைப்பது மட்டுமல்லாமல் சமூகத்தை, அரசு நிர்வாகத்தை, கார்ப்ரேட் நிறுவனங்களை, தனி மனித குரூரங்களை விமர்சிக்கிற வகையிலான சித்தரிப்பு இப்படத்தில் ஆங்காங்கே வந்து போகிறது.

‘குமார சம்பவம்’ தருகிற திரையனுபவம், தியேட்டரை விட்டு வெளியே வரும்போது ‘இது ஒரு அண்டர்ரேட்டட் மூவி ஆகிவிடக் கூடாது’ என எண்ண வைக்கும்.

டீசர், ட்ரெய்லர் என்று எதையும் பார்க்காமல், எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் சென்றால், இப்படம் நிச்சயம் ‘கூஸ்பம்ஸ்’ மொமண்ட்களை அள்ளியிறைக்கும். அதன்பிறகு, ‘குமார சம்பவம்’ சூப்பரா, சுமாரா என்று நீங்களே சொல்லிவிடலாம்..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like