அன்றே வழிகாட்டிய தமிழக மாணவர்கள்!

டெல்லியில் நீதிமன்றம் உருவாக்கிக் கொடுத்த ஒரு சொல்லின் வழியே இயக்கமாக உருப்பெற்று, சமூக வலைத்தளங்களில் தன்னை நிலைநிறுத்தி, அதுவே நாடு முழுக்கப் பரவி போராட்ட வடிவமும் எடுத்திருக்கிறது.

இதற்கு காரணமான மூலச்சொல், ‘கரப்பான் பூச்சி’.

எந்தவிதமான அரசியல் சார்புகள் அற்றுதான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்கின்ற இயக்கம் உருவாகி, போராட்ட வடிவம் எடுத்தபோது, அது கையாண்டது இந்திய சுதந்திரப் போராட்ட மரபை அனுசரித்த காந்திய வழியில் தான்.

அதை சாட்சியப்படுத்தும் விதமாக அந்தப் போராட்டத்தை நடத்தியவர்கள் உண்ணாவிரதம் என்கின்ற செயல்பாட்டை முன்னிறுத்தினர்.

பிறகு அந்தப் போராட்டம் அடுத்தக் கட்டத்துக்கு நாடாளுமன்ற முற்றுகை என்கின்ற அளவுக்கு நகர்ந்தபோது கூட, எந்தவிதமான அரசியல் கட்சிகளும் அந்தப் போராட்டத்தில் இணைய வேண்டியதில்லை என்பதைத் தான் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தினார்கள்.

ஆனால், அந்தப் போராட்டம் படிப்படியாக பலம் பெற்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியபோது, அவர்கள் மீது இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது.

அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், பொதுவுடமைக் கட்சிகள், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தன.

அவர்களுக்காக குரல் கொடுக்கவும் செய்தன. போராட்டத்தில் பங்கு கொள்ளவும் செய்தன.

ஆனால், இதுவரை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது அவையிலிருந்து வெளிநடப்பு செய்யப்படுவது நடந்தாலும், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சில நபர்கள் ஆலோசிப்பதாகச் சொல்லப்பட்டாலும்,

தற்போது நடக்கும் போராட்டத்தில் முக்கிய மையமாக முன்வைக்கப்படும் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகுவதற்கான எந்த நகர்வும் இதுவரை தென்படவில்லை.

மத்திய அரசு இதற்கு எதிர்வினையாக என்ன செய்கிறது என்றால், போராடுகிற மாணவர்கள் மீது கடுமையான அடக்கு முறையை கையாள்கிறது.

அதோடு அந்தக் கூட்டத்தில் சிலர் பிரதமர் குறித்தும், 370 விதி குறித்தும் முழக்கங்களை முன்வைப்பதாக காட்சிப்படுத்துகிறது அல்லது சில நபர்களை கூட்டத்திற்கு இடையே ஊடுருவ வைத்து காட்சிப்படுத்துகிறது.

போராடும் மாணவர்களை பயங்கரவாதிகளாகவும், பாகிஸ்தான் ஆதரவாளர்களாகவும் சித்தரிக்கிறது.

இத்தகைய எதிர்நிலைக்கு நமது நாட்டில் கல்வி மற்றும் நீதித்துறை சார்ந்த பொதுநலனை முன் வைத்து போராடிக் கொண்டிருக்கும் மாணவர்கள் மீது தனது வழக்கமான பாணியில் முன்பு விவசாயிகளின் போராட்டத்தைக் கையாண்ட மாதிரியே தற்போதும் கையாண்டு கொண்டிருக்கிறது மத்திய அரசு.

இத்தகைய மத்திய அரசை பிரபலமான காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் பெரிதாக வெளிப்படுத்தாத நிலையில், என்னதான் கட்டுப்படுத்தினாலும், சமூக வலைத்தளங்கள் தான் போராட்டங்களில் காவலர்கள் நடத்தும் அத்துமீறல்களை வெளிக்கொண்டு வருகின்றன.

ஆணி பதிக்கப்பட்ட லத்திகளைப் பயன்படுத்தி இளைஞர்களையும் இளம் பெண்களையும் தாக்குகிற அளவுக்கு காவல்துறையின் போக்கு நீடித்துக் கொண்டிருக்கிறது.

அத்தகைய லத்திகளை கைவசம் வைத்திருக்கும் காவல்துறையை பாஜக தன் கைவசம் வைத்திருக்கிறது.

இதே மாதிரி தமிழகத்தில் 1965-ல் நடந்த மாணவர்கள் போராட்டத்தையும் சற்றே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

அப்போது இந்தியை வலுக்கட்டாயமாக திணிக்க அன்றைய காங்கிரஸ் அரசு முற்பட்டபோது, அந்தத் திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் மாணவர்களிடையே கடுமையான எதிர்ப்புக் குரல் எழுந்தது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட அந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தார்கள்; நடு வீதிகளில் இறங்கி மாணவர்கள் போராடினார்கள்.

இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டன. மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ரயில் நிலையங்களில் மறியல் நடந்தன. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்து, கல்லூரி மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டார்கள்.

அவர்களைத் தூண்டிவிட்டதாக கல்லூரி பேராசிரியரே கைது செய்யப்பட்டதெல்லாம் இதே தமிழ்நாட்டில்தான் நடந்திருக்கிறது.

ஏற்கனவே மொழிப் போராட்டத்திற்காக நடராசன், தாளமுத்து போன்றவர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக 1965-களில் சின்னச்சாமி துவங்கி அடுத்தடுத்து பல மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டது அன்றைய ஊடகங்களில் பெரும் அதிர்ச்சியை ஊட்டும் சம்பவங்களாக பதிவாகி இருக்கிறது.

அப்படி உயிரிழந்த மாணவர்கள் இறக்கும் தருவாயில் சில தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இருந்த வீரியமான ஒரு வாசகம் தான் – “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு”.

போராட்டம் நடத்திய அவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நிகழ்ந்தது; பலர் சுடப்பட்டு இறந்தார்கள்.

அந்த அளவுக்கு கடுமையான ஒடுக்கு முறையைக் கையாண்டது அன்றைக்கு தமிழகத்தை ஆண்ட பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு.

இந்தித் திணிப்பை எதிர்த்து விஷம் அருந்தி இறந்த ஒரு மாணவரைப் பற்றி அன்றைய முதல்வர், “அவர் வயிற்று வலியால் தற்கொலை செய்து கொண்டார்” என்று சொன்னார்.

இதேபோல் உயிரிழந்த இன்னொரு மாணவரை பற்றி, “அவர் சரியா படிக்கத் தெரியாத மாணவர்” என்று சொன்னபோது உயிரிழந்த அந்த மாணவரின் தந்தை தனது மகனுக்கு நன்றாகப் படிக்கத் தெரியும் என்று சொல்ல வேண்டிய அவசியம் இருந்தது.

அந்த அளவுக்கு மிகக் கடுமையான எதிர்வினையை அன்றைய காங்கிரஸ் அரசு நிகழ்த்தியது இன்றும் வரலாற்றுப் பதிவாக எஞ்சி இருக்கிறது.

நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலி கொடுக்கும் அளவுக்குப் போன அந்த மாணவர்களின் போராட்டம் அன்றைக்கு வெளிநாட்டு ஆங்கிலப் பத்திரிகைகளிலும் வரும் அளவுக்கு கவனம் பெற்றது.

ஆனால், மாணவர்களின் போராட்ட உணர்வை காங்கிரஸ் அரசு சரிவர உணரவில்லை என்பதை 1967-ல் தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் நிரூபித்தது.

அதுவரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் பெரும் சரிவைச் சந்தித்தது; தேசிய அளவில் பெரும் தலைவராக இருந்த காமராஜரே தனது சொந்த தொகுதியான விருதுநகரில் மாணவர் தலைவர் பெ. சீனிவாசனிடம் தோற்றுப் போனார்.

அன்றைக்கு ஆட்சிப் பொறுப்பிலிருந்து வீழ்ச்சி அடைந்த காங்கிரஸ் இன்றுவரை தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வர முடியவில்லை.

ஏன் அத்தகைய சூழ்நிலை உருவானது? ஏன் மாணவர்கள் போராட்டத்தை அன்றைய அரசு குறைத்து மதிப்பிட்டது?

அதன் விளைவாக அவர்கள் எப்படிப்பட்ட எதிர்வினையை மக்களிடமிருந்து பெற்று இன்றுவரை அதிலிருந்து மீளாத நிலையில் இருக்கிறார்கள்.

இந்த கேள்விகள் காங்கிரசுக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் அதே மாதிரி மாணவர்கள் போராட்டத்தை உணரத் தவறி இருக்கிற மத்திய பாஜக அரசுக்கும் பொருந்தும்.

– லியோ

You might also like