“சட்டசபைக்குள் விஜய் நுழைந்தால் அவரது எலும்பை உடைப்போம்” என்கிற அளவுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினராக மார்க்கண்டேயன் பேசி அதன் விளைவாக கைதாகி ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், இன்றுவரை சிறையில் இருக்கிறார்.
இதையடுத்து சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த முன்னாள் திமுக அமைச்சரான செந்தில் பாலாஜி திடீரென்று செய்தியாளர்களைச் சந்தித்து, தனக்கும், கட்சியில் தனக்கு முன்னோடிகளான எ.வ.வேலு மற்றும் கே.என்.நேரு மீதும் திட்டமிடப்பட்ட வகையில் தவெக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவித்திருக்கிறார்.
கரூர் செந்தில் பாலாஜி, ஏற்கனவே தவெக-க்களை பேரம் பேசி அணி மாறுவதற்கு முயற்சித்தார் என்கின்ற குற்றச்சாட்டு நிலுவைகள் இருக்கும்போது, அவர் செய்தியாளர்களிடம் “ரொம்ப நாளைக்கு” என்று எதோ சொல்ல முயன்றவர் அதோடு அந்த வரியை முடிக்காமல் நிறுத்தி இருக்கிறார்.
செந்தில் பாலாஜி “ரொம்ப நாளைக்கு” என்று சொன்னதற்கு என்ன அர்த்தம்?
அதே நேரத்தில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரான ஆர்.பி.உதயகுமார் “தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன, ரொம்ப நாளைக்கு நீடிக்காது” என்று அதே குரலை முன்வைத்திருக்கிறார்.
இதோடு மட்டுமல்லாமல், திமுக பல சமூக வலைத்தளங்களில் பட்ஜெட் கூட்டத்தொடர் எப்படி அமையப்போகிறது என்பதைப் பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த சமயத்தில் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே தமிழக சட்டசபையில் பட்ஜெட் உரையின்போது திமுக தலைவரான கலைஞருக்கு எதிராக, அதிமுக பொதுச்செயலாளரான ஜெயலலிதா குரல் கொடுத்து சட்டசபைக்குள்ளேயே நடந்த களேபரங்கள் நம் நினைவுக்கு வரலாம்.
ஜனநாயக ரீதியில் தவெக அரசு தனக்கான பெரும்பான்மை எண்ணிக்கையுடனும் கூடுதலாக சில கட்சிகளின் ஆதரவுடனும் பதவியில் இருக்கும் நிலையில், அவரது ஆட்சியின் முதல் பட்ஜெட் உரையை அமைதியாக நடத்த திமுக உள்ளிட்ட கட்சிகள் அனுமதிப்பார்களா என்கின்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்த விதமாக பரப்பப்படும் செய்திகள் வதந்தியாக இருக்க வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் விருப்பமாக இருக்கிறது.
ஆனால், இதையும் மீறி அவையில் சில சிக்கல்கள் உருவாக்கப்படுமானால், அதை ஏற்படுத்துகிற கட்சிதான் பொதுமக்கள் மத்தியில் மிக மோசமான பெயரைச் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
எதிர்க்கட்சிகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால், ஜனநாயக ரீதியான முறையிலும் அநாகரிகம் இல்லாத வழியிலும் அந்த மாற்றம் நிகழ வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக இருக்கிறது.
– யூகி