இளங்கவிஞர் தம்மை வாயார வாழ்த்துகின்றேன்!

பாவேந்தர் பாரதிதாசன்

பாவேந்தர் பங்குபெற்ற கடைசிக் கவியரங்கம்
 
தலைமைக் கவிதை: பாவேந்தர் பாரதிதாசன்
 
வரலாற்றுப்புகழ் வாய்ந்த காஞ்சியில்
இச்சை எப்படி அப்படி ஈந்த பச்சையப்பன் கல்லூரிப் பாங்கில்
தமிழ்த்துறைத் தலைவரின் தமிழன்பென்னும் அமிழ்தில் முளைத்த தாகும் இந்நாள்
நடக்கு மிந்த நற்றமிழ்க் கவியரங்கு!
தமிழ்த்துறைத் தலைவரைப் பாராட்டுகின்றேன்!!
கல்லூரி முதல்வரும்
கவியரங்கு நல்லாறு நடைபெற ஒப்பினாரன்றோ அவரையும் செந்தமிழ் அன்னை வாழ்த்தினாள்!
 
தமிழ்மன் றத்தினர் தாமும் கவியரங்கு நடத்தத் தலைவ ரிடத்தே படைத்த விண்ணப் பமோநம் கண்ணொப்ப தாகும்!
கவியரங் கேறக் கடவோம் என்று
கச்சை சுட்டிய
பச்சை யப்பன்
கல்லூரி இளங் கவிஞர் தம்மைநான் வாயார நூறுமுறை
வாழ்த்து கின்றேன்!
 
செந்தமிழ்க் கவிஞர் தேவைஇந் நாட்டில்! எலியுள் ளத்தில் புலியுள்ளம் சேர்க்கக் கணக்கிலாக் கவிஞர்கள் கட்டாயந் தேவை.
 
தூங்கும் தமிழர் சுருக்கென விழிக்க ஈங்குக் கவிஞர்கள் எண்ணிலார் தேவை,
தமிழைத் தமிழரைத் தமிழ கத்தைத்
தமக்கென்று குதிக்கும் சழக்கரை ஒழிக்கச்
சிங்கத் தமிழரைச் செய்பவர் கவிஞரே!
ஆக்கலும் அழித்தலும் காத்தலும் செந்தமிழ்
மாக்கவி ஞர்க்கலால் மற்றவர்க் கியலுமோ?
ஒற்றுமை பாடி உயர்உல கொன்றை
அற்றைநாள் ஆக்கினும் ஆக்குவர்.
கவிஞர் வேற்றுமை மதம்பல விளைத்து மக்களைக் காற்றில் துரும்பெனக் காட்டினும் காட்டுவர்.
 
காஞ்சிக் கல்லூரி போலப் பிறவும்
வளர்த்துத் தமிழ்க்கவி வளர்க்க!
 
பல்கலைக் கழகம் இரண்டு பார்க்கின்றோம்.
நல்ல தலைமை இல்லவே இல்லை.
ஆங்கி லத்தின் அழகுங் காணிகள்
செந்தமிழ்க் கவிஞர் செத்தால் மகிழ்வர். சொந்தத் தாயைத் தூக்கில் இடுபவர்
தலைமையை மாற்றி நிலையு ய ர்த்திடுக!
 
கவிஞர் தோன்றிடக் கடுந்தவம் புரிவோம்!
உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன அவற்றின் அயர்நிலை நீங்க வேண்டும்.
அந்தமிழ்க் கவிஞரைப் படைக்கும் கருத்து வேண்டும்.
எல்லாப் பள்ளியும் இன்பத் தமிழைக்
கல்லார் இலை என்று காட்ட வேண்டும்!
 
செல்வர்கள் கவிஞர் செய்யும் நூற்களை வெளியிட வேண்டும்.
அவ்வப் போதே
அவர்கள் அடைந்துள செல்வம் அனைத்தும் பைந்தமிழ் வளர்க்கப் பயன்பட வேண்டும்!
 
ஈத்து வக்கும் இன்பம் பெரிதென
எண்ணிச் செயல்செய வேண்டும் செல்வர்!
 
ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்லெனப் புகல்வோம்.
எல்லா உலகும் திருவாரூர்தேர்
இழுத்து நிலையில் நிறுத்துதல் போலத்
தமிழர் எல்லாம் சரிநிகர் ஒன்றாய்த்
தமிழர்கள் தொல்சீர் தங்கத் தேரை
உளமெலாம் உற்றிடச் செய்தல் வேண்டும்! தமிழரைத் தமிழரே மறந்தநாள் இந்நாள்.
 
தமிழரின் தொல்சீர் சாகும் வண்ணம்
எதிரிகள் தவங்கள் இயற்றுநாள் இந்நாள்! தெற்கிலுள்ள சீரலை வாய்க்குத்
தெற்கில் ஏழ்மதுரை ஏழ்தெங்கம் என்ன நாற்பத் தொன்பது நாடுகள் இருந்தன.
அவைகள் கடலுள் ஆழ்ந்தன அதனால்
அங்கி ருந்த அந்தமிழ்ச் சங்கமும்
மறைந்தது.
 
தமிழ்நான் மறையும் மறைந்தன.
இந்த உண்மையைக் கவிஞர் எல்லாம்
அடிக்கடி நொடிக்குநொடி அந்தமிழ்க் கவிகளால் உலகுக் கெடுத்துக் காட்ட வேண்டும்!
கொடுங்கடல் கொண்ட குமரி நாடுமுதல்
இமையம் வரைக்கும் எங்கள் தமிழகம்
என்ற உண்மையைக் கவிஞர் எல்லாம் அடிக்கடி நொடிக்குநொடி அழகுறப் பாடுக!
 
தெலுங்கெனில் வேறு மொழி என்று செப்புவர். மலையாள மொழி என்று மற்றொன்று கூறுவர். கன்னட மொழி என்று ஒன்று கழறுவர். துளுவென என்று சொல்லி யிருந்தனர்.
 
இவையெலாம் தமிழே என்ற உண்மையை அடிக்கடி நொடிக்குநொடி அந்தமிழ்க் கவிஞர் எங்கணும் முழக்க மிடுதல் வேண்டும்!
 
முந்தா நாள் தோன்றிய சிங்கள மூடர்
செந்தமி ழர்தம் சிறிய திட்டைத்
தமதென்று சொல்லித் தலைதுள்ளு கின்றனர்.
குமரி நாட்டின் குளிர்தமிழ் நாட்டின்
சிறிய திட்டே அந்தத் திட்டெனக் கவிஞர் எடுத்துக் காட்ட வேண்டும்! செந்தமிழ்க் கென்று வந்துள தீமையைத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து தடுக்க
அஞ்சாது கவிஞர் ஆவன பாடுக!
இவற்றை இயம்பி அரங்கைத் துவக்கம் செய்யச் சொன்னேன் நன்றே!
 
– 29/11/1963 அன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரித் தமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற கவியரங்கத்திற்குத் தலைமையேற்றுப் பாடிய கவிதை.
 
நன்றி: தமிழாலயம், மார்ச் – ஏப்ரல் 2004.
You might also like