அமெரிக்க அதிபரான டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50 சதவிகித அளவுக்கு வரி விதித்ததிலிருந்தே இந்தியாவின் பல மாநிலங்களில் பொருளாதாரச் சூழல் பாதிக்கப்பட ஆரம்பித்துவிட்டது.
தமிழ்நாட்டிலும் அப்படியே. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சென்னை என்று ஏற்றுமதியை அதிகமாக நம்பியிருந்த பல மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இத்தகைய நிறுவனங்களில் பணியாற்றி வருகிறவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறது.
டிரம்பின் வரிவிதிப்புக்கு அமெரிக்காவில் உச்சநீதிமன்றம் உட்பட பல தரப்பில் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.
இதுவரை எந்த அமெரிக்க அதிபரும் நடைமுறைப்படுத்தாத அளவுக்கு வரிவிதிப்பையும் மற்ற நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு சிக்கலையும் ஒரு சேர ஏற்படுத்தியிருக்கிறார் டிரம்ப்.
இதனால், இதுவரை இருந்துவந்த இந்தியாவின் நிலைப்பாடும் மாறியிருக்கிறது. ரஷ்யா மட்டுமல்ல சீனா போன்ற நாடுகளுடன் நட்பைப் பேண வேண்டிய அவசியமும் இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கிறது.
மோடியின் சீனப் பயணம் அதைத்தான் எடுத்துக்காட்டுகிறது.
அதேசமயம் இந்தியாவில் பலதரப்பட்ட தொழில் நிறுவனங்கள், குறிப்பாக ஏற்றுமதியைச் சார்ந்தே இயங்கிவந்த நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
இந்த நெருக்கடிகள் மேலும் அதிகரிக்கிறபோது இந்தியாவின் வெளிநாட்டுப் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படலாம்.
ஏற்கனவே, ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் நெருக்கடியைச் சந்தித்து வந்த நிறுவனங்கள், சற்றே ஆசுவாசப்படுத்தும் விதத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் ஒரு தளர்வை அமல்படுத்துவதான அறிவிப்பை தீபாவளிக்கு முன்பு மோடி வெளியிடுவார் என்கின்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருக்கிறது.
மத்திய ஆளுங்கட்சி தரப்பினரும் இதுகுறித்து பட்டும்பாடாமலும் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால், அப்படி ஒருவேளை ஜிஎஸ்டி தளர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி, உடனே அமல்படுத்தப்பட்டால் இந்திய உள்நாட்டுத் தொழில் நிறுவனங்கள் எந்தளவுக்கு பழைய நிலையை அடைய முடியும் என்பது தெரியாது.
எந்த அளவுக்கு சரிவிலிருந்து தங்களை மீட்டெடுக்க முடியும் என்கின்ற கணக்கீடுகளையெல்லாம், பொருளாதார நிபுணர்கள் சொல்லிவந்தாலும் கூட மோடியின் அறிவிப்பு ஏற்கனவே நலிந்த தொழில் நிறுவனங்களைக் கொஞ்சமாவது நிலைப்படுத்த உதவ வேண்டும் என்பதே பரந்துபட்ட மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
டிரம்ப் உருவாக்கிய உலகளவிலான நெருக்கடி, மோடி ஏற்கனவே உருவாக்கிய ஜிஎஸ்டி நெருக்கடி, இதுதவிர மாநில அளவில் உருவாகும் நெருக்கடிகள் என என்னென்ன விதமான நெருக்கடிகளையெல்லாம் இங்குள்ள தொழில் நிறுவனங்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது?
– யூகி