மதிப்பிற்குரிய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளரான திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு,
வணக்கம்!
1972-ல் அதிமுக என்கிற இயக்கத்தை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கியதிலிருந்து அதிமுகவிலேயே தொடர்ந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தொண்டன் என்கிற முறையில் இந்தத் திறந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
தமிழக அரசியல் வரலாற்றில் அபூர்வமான நிகழ்வாக தொண்டர்களால் ஆர்வத்துடன் துவக்கப்பட்ட கட்சி அதிமுக.
பெருந்தன்மையுடன் தலைமைப் பொறுப்பை ஏற்று நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அரவணைத்து வழிகாட்டியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்.
ஒரு காலத்தில் ‘விசிலடிச்சான் குஞ்சுகள்’ என்கிற அடைமொழியால் அழைக்கப்பட்ட தொண்டர்களை அரசியல் மயப்படுத்தி அவர்களை அதிமுக என்கின்ற பேரியக்கத்தின் வேராக மாற்றியமைத்தவர் புரட்சித்தலைவர்.
தொண்டர்களை நம்பியே இந்த இயக்கத் தலைமை இருக்க வேண்டும் என்பதற்காக பொதுக்குழுவை எப்படிக் கூட்ட வேண்டும்.
அதில், தொண்டர்களின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதையெல்லாம், கட்சியின் சட்ட விதிகளாக இணைத்து தொண்டர்களுக்கும் கட்சிக்கும் இடையில், பிணைப்பை உருவாக்கியவரும் மக்கள் திலகம் அவர்கள்தான்.
1977-ம் ஆண்டில் புரட்சித்தலைவர் சட்டமன்றத் தேர்தலில் நின்று மகத்தான வெற்றியைப் பெற்று முதல்வரான போது, சென்னையில் மாபெரும் தொண்டர்கள் கூட்டத்திற்கு முன் உரையாற்றியதை அதிமுக தொண்டர்கள் என்றும் மறந்துவிட முடியாது.
தொண்டர்கள்தான் தனது கட்சிக்கு அடிப்படை ஆதாரம் என்பதை தன்னுடைய ஒவ்வொரு அரசியல் நகர்விலும் அவர் உறுதிப்படுத்தினார்.
அதிமுக அமைச்சரவை முதலில் அமைந்தபோது, அதிமுகவுடன் பயணித்த தொண்டர்களை அதிகார பொறுப்பிலும் அமர வைத்தார் புரட்சித் தலைவர்.
தனது கட்சியிலேயே தன்னிடம் கருத்து வேறுபட்டு தனித்துப்போய் விமர்சித்து தனி இயக்கம் காண முயற்சித்த எஸ்.டி.சோமசுந்தரம் போன்றவர்களைக் கூட பாகுபாடு காட்டாத உணர்வுடன் அவருடைய வீட்டிற்கே சென்று,
எந்த ஈகோவும் பார்க்காமல் கட்சியில் அரவணைத்து, தொண்டர்களுக்கான தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணமாக திகழ்ந்தவர் மக்கள் திலகம்.
அமெரிக்காவிலிருந்து உடல்நல சிகிச்சைப் பெற்று தமிழ்நாட்டிற்குத் திரும்பியதும் மதுரையில் நடத்திய எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டில் கூட தொண்டர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை தொண்டர்களுக்கு முன்பு அவர் உச்சரிக்க சிரமப்பட்ட நிலையில் அவர் பேசியபோது, எதிரே கூடியிருந்த அவரது தொண்டர்கள் பதைபதைத்துப் போனார்கள்.
தான் இறுதிக் காலத்தில் அனுபவித்த சிரமத்தை நன்கு உணர்ந்து, வாய்ப்பேச முடியாத, காதுகேளாத குழந்தைகளுக்கான பள்ளியாக, தன்னுடைய ராமவரம் இல்லத்தையே மாற்றி வழிகாட்டிய புரட்சித் தலைவரைத் தொண்டர்கள் எத்தனை வருடங்கள் கழிந்தாலும் பசுமையாக நினைவில் வைத்திருப்பார்கள்.
ஆனால், அதிமுக என்கின்ற பேரியக்கத்தைத் தற்போது வழிநடத்திவரும் நீங்கள் அதை உருவாக்கிய புரட்சித் தலைவருக்கு எப்படிப்பட்ட மதிப்பளித்திருக்கிறீர்கள்?
உங்களுடைய விளம்பரங்களில் கூட அவருக்கு எப்படிப்பட்ட இடத்தைக் கொடுத்திருக்கிறீர்கள்?
மெரினா கடற்கரையிலுள்ள அவரது கல்லறையை இப்போது போய்ப் பார்க்கும் தொண்டர்கள் அதில் சிதிலமடைந்த கற்களைப் பார்த்து வேதனைப்பட்டிருக்கிறார்கள்.
தொண்டர்கள் நினைவில் என்றும் வாழும் தலைவரை நீங்கள் ஆட்சிப் பொறுப்பிலிருந்தபோதும், கட்சிப் பொறுப்பில் இருந்தபோதும் எப்படி மதிப்புடன் நடத்தியிருக்கிறீர்கள்?
புரட்சித் தலைவர் மறைந்தபிறகு கட்சியில் இரு பிளவுகள் உண்டானபோது, மக்கள் திலகத்தின் மனைவியான திருமதி. ஜானகி அம்மையார் கட்சி இணைப்பிற்கு காட்டிய உயர் பண்பை அதிமுக தொண்டர்கள் அறிவார்கள்.
அதிமுகவின் தலைமை அலுவலகமான கட்டிடத்தை கட்சிக்குத் தந்து காத்தவரும் அதே ஜானகி எம்ஜிஆர்தான்.
இரட்டை இலை சின்னத்தை மீட்டு புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் பொறுப்பிலேயே கட்சியை ஒப்படைத்து, அதை ஒன்றிணைந்த பேரியக்கமாக மாற்றிய பண்பாளரும் அவர்தான்.
அதன்பிறகு கட்சியிலும் ஆட்சியிலும் பொறுப்புக்கு வந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் தன்னை கடுமையாக விமர்சித்தவர்களைக் கூட அதிமுக இயக்கத்தை பெருந்தன்மையுடன் இணைத்துக் கொண்டார்.
பல சம்பவங்களை ஒவ்வொரு அதிமுக தொண்டரும் நினைவு கூர முடியும்.
கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறவர்கள் ஈகோ பார்க்காமல் தன்னைமட்டும் முன்னிலைப்படுத்தி ஆணவத்தை தலைக்கேற்றாமல் எப்படியெல்லாம் பரிவும் பாசமும் காட்டி அதிமுக என்கின்ற இயக்கத்தை வழிநடத்திய அதிமுக தலைவர்களை இப்போதும் நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா?
திருமதி. சசிகலா அவர்களால் பதவிக்கு வந்த நீங்கள், பிறகு அவரையே கட்சியை விட்டு நீக்கினீர்கள்.
கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலரை கட்சியைவிட்டு விலக்கினீர்கள். அல்லது விலக வைத்தீர்கள்.
இன்றைக்கும் தமிழகத்திலுள்ள முன்னணிக் கட்சிகளில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் சில தலைவர்கள் அதிமுகவிலிருந்து போனவர்கள்தான்.
உங்களுக்கு முன்பு அதிமுக என்கின்ற பேரியக்கத்தில் தலைவர்கள் கட்டிக் காத்துவந்த பொறுமையும் பாகுபாட்டை மறந்து அரவணைக்கும் தாயுள்ளமும் உங்களுக்கு இருக்கிறதா என்கிற கேள்விக்கான பதிலை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
இதே அதிமுக, தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தபோது, மறுபடியும் எழுச்சிப்பெற்று அதை ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்தர்வர்கள் அதிமுக தொண்டர்கள்தான்.
கட்சித் தலைமை மாறியிருக்கலாம். நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள்கூட மாறியிருக்கலாம், ஆனால், அதிமுக தொண்டர்கள் இப்போதும் அதிமுக தொண்டர்களாகத்தான் இருக்கிறார்கள்.
எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காத உயர்ந்த மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறார்கள்.
அதிமுகவின் வாக்கு வங்கியாக தொடர்ந்து இருந்து கொண்டிருப்பவர்களும் அவர்கள்தான்.
அடுத்தடுத்த தேர்தலில் பல தோல்விகளை நீங்கள் சந்தித்திருந்தாலும், முக்கியமான அரசியல் முடிவுகளை எடுக்கத் தவறியிருந்தாலும் கூட இன்றுவரை அதிமுக என்ற பேரியக்கம் உயிரோட்டத்துடன் இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் நினைக்கிறான்.
அந்த உணர்வைத்தான் அண்மையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட அதிமுகவின் உண்மையான தொண்டரான பூக்கடை மகேந்திரனும் உணர்த்திவிட்டுச் சென்றிருக்கிறார்.
அவர் வெளிப்படுத்திய ஒற்றுமை உணர்வைத்தான் அதிமுக தொண்டர்களாகிய நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
வேர்கள் அப்படிக் கருதுவதில் ஒன்றும் பிழையில்லையே! இனியாவது சுயநலமான எண்ணத்தை ஒதுக்கிவைத்து தன்னலமற்ற பெருந்தன்மை உணர்வுடன் கட்சியை பலப்படுத்துவோம்.
கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றுசேர முயற்சி எடுங்கள்.
அதிமுகவில் நமக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர்களின் தலைமைப் பண்பை உங்களுக்கான முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
நிகழ்காலம் உணர்த்துவது இதைத்தான்.
தொண்டர்கள் எதிர்பார்க்கும் ஒற்றுமை உணர்வை நீங்கள் நடைமுறைப்படுத்தினால், புரட்சித் தலைவரின் மொழியில் சொன்னால் “நாளை நமதே”.
இப்படிக்கு… இயக்கத்தின் மீதான பேரன்புடன் அதிமுக தொண்டன்.