உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எத்தனையோ வழிகளை நாம் தேடுகிறோம்.
ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, வாக்கிங், யோகா, டான்ஸ் தற்போது இந்த வரிசையில் இணைந்துள்ளது சவுண்ட் ஹீலிங். இதை ஒலி சிகிச்சை என்று அழைக்கின்றனர்.
பெரும்பாலான மேல்தட்டு மக்களிடம் மட்டுமே அறியப்பட்ட சவுண்ட் ஹீலிங் தற்போது எல்லா தரப்பு மக்களிடமும் பரவி வருகிறது.
இது பற்றி விரிவாக விளக்குகிறார்கள் சவுண்ட் ஹீலிங் பயிற்சியாளர் வைஷ்ணவி மற்றும் செந்தில்.
சவுண்ட் ஹீலிங் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பல்வேறு கலாச்சாரங்களில் பயன்படுத்தப்பட்ட பழங்கால நடைமுறைகளில் ஒன்று.
பண்டைய எகிப்தில் ஒலிக்கும் அதிர்வு அறைகள் எல்லாம் அப்போது இருந்திருக்கிறது.
அந்த வழியில் தான் நாகரிகங்கள் ஒலிக்கு மாற்றப்பட்டு திறனை அங்கீகரித்து வெளியில் கொண்டுவந்துள்ளது.
திபெத்திய பாடும் கிண்ணங்கள், பூர்வீக டிரம்ஸ் மேலும் சில கருவிகளின் இசையால் உடல், மனம் அமைதிப்படுத்தவும், நோய்களை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றது இதைத்தான் ஒலி சிகிச்சை (சவுண்ட் ஹீலிங்) என்று அழைக்கின்றோம்.
அதன் வரலாறு என்று பார்த்தால் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒலி சிகிச்சை முறையாகும் அவ்வளவாக யாரும் அறியப்படாத ஒன்றாகவே இருக்கிறது.
இசை கருவிகள் மூலம் உடலையும், மனதையும் அமைதி அடைய செய்து தியான நிலைக்கு கொண்டு செல்வது ஆகும்.
சவுண்ட் ஹீலிங் என்றால் என்ன?
சவுண்ட் ஹீலிங் என்பது ஒரு பழங்கால வழக்கத்தில் இருந்த ஒலி சிகிச்சை முறையாகும்.
இது தியானம் மற்றும் இசை போன்ற ஒலிகளைப் பயன்படுத்தி உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்த உதவுகிறது.
இதற்கான சில கருவிகள் இருக்கின்றன.
1. உலோகக் கிண்ணம்: உலோகத்தால் செய்யப்பட்ட கிண்ணங்கள் இதை நாங்கள் (Singing bowls) என்று அழைப்போம்.
அவை ஒலிக்கப்படும்போது அதன் ஒலி அதிர்வாக ஒலிக்கப்பட்டு மெல்ல மெல்ல அடங்கும்.
2. காங்ஸ் (Gongs): பெரிய, வட்டமான உலோகத் தட்டுகளில் இருந்து வெளிப்படும் ஒலியானது அவை ஒலிக்கப்படும்போது ஆழமான, அதிர்வுறும் ஒலிகளை உருவாக்குகிறது. அதன் சத்தம் அடி மனதின் ஆழம் வரை சென்று எண்ணங்களைக் கட்டுப்படுத்துகிறது.
3. டிரம்ஸ் (Drums): நமது மூளை நரம்புகளை சுறுசுறுப்பு அடையச் செய்து உச்சாகத்தைத் தூண்டுகிறது. இதிலிருந்து வரும் லயமிக்க தாளங்கள் மனத் தளர்வை சரிசெய்து, அமைதியை ஊக்குவிக்க உதவி செய்கிறது.
4. பைனரல் பீட்ஸ் (Binaural beats): ஒவ்வொரு காதிலும் வெவ்வேறு ஒலிகளை எழுப்புகிறது. இந்த ஒலியானது மூளையில் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும். இதனால் தியானம், தூக்கம் மற்றும் கவனம் செலுத்துதல் போன்ற வேலையைச் செய்கிறது.
சிகிச்சை முறைகள் என்ன?
இந்த சிகிச்சைக்கு வருபவர்களை முதலில் சாந்தப்படுத்தி பாயில் அமரச் செய்கிறோம்.
அதன் பின் எந்த ஒரு கருவியோ, உபகரணங்கள் எதுவும் அவர்களது கையில் இருக்கக் கூடாது. அவர்களை பாய் அல்லது டவலில் படுக்க வைத்து தியான நிலைக்கு கொண்டு செல்கிறோம்.
பின் ஒவ்வொரு கருவியாக இசைக்கப்படும். ஒவ்வொருவரின் மனநிலைக்கு ஏற்றது போல் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு உடல் பாகங்களில் உணரமுடியும். இந்த சிகிச்சைக்கான நேரம் 45 நிமிடங்கள்.
இந்த சிகிச்சையானது மூன்று நிலைகளாக வழங்கப்படுகிறது. முதல் நிலையில் ஆழமான மூச்சு இழுக்கப்பட்டு பின் மெதுவாக வெளியிடப்பட வேண்டும். அதன் பின்னே ஒவ்வொன்றாக இசைக்கருவிகள் இசைக்கப்படும்.
சவுண்ட் ஹீலிங்கின் நன்மைகள்:
இந்த சிகிச்சையானது உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்ள இந்த தெரப்பி உதவுகிறது.
மன அழுத்தம் குறைக்கப்படுதல், உடல் நிலையை சீராக வைத்தல், நேர்மறை எண்ணங்கள் ஊக்குவித்தல் போன்ற வேலைகளை ஒலி சிகிச்சை தூண்டுகிறது.
சவுண்ட் ஹீலிங் மூலம் உடலை தளர்த்தி அமைதியான உணர்வுகள் தூண்டப்பட்டு மன அழுத்தத்தைக் குறைக்க உதவி செய்ய முடியும்.
மனச் சோர்வில் இருந்து விடுபட வைத்து ஆழ்நிலை தூக்கத்தைக் கொடுக்கிறது. இந்தக் கிண்ணங்களில் இருந்து எழுப்பப்படும் ஒலியானது ஆழ்மனது வரை ஊடுருவிச் செல்கிறது.
இதனால் மூளையின் நரம்புகள் சமநிலை படுத்தப்பட்டு நிம்மதியான மனநிலையுடன் ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுக்கிறது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல தீர்வாக இந்த ஒலி சிகிச்சை பயன்படுகிறது.
உணர்வுகளைச் சமநிலைப்படுத்துதல்:
பதற்றமான மனநிலையில் இருந்து விடுபட்டு சமநிலையோடு இருக்கச் செய்கிறது இந்த ஒலி சிகிச்சை.

எதிர்மறை உணர்ச்சிகளை சமநிலைப்படுத்தும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்துதல், தேவையில்லாத எண்ணங்களை கட்டுப்படுத்துதல், நேர்மறை உணர்வுகளை ஊக்குவிப்பதே இந்த சிகிச்சையின் நோக்கமாகும்.
மன அழுத்தத்தை கொடுக்கக் கூடிய ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி மகிழ்ச்சியான ஹார்மோன்களை சுரக்கச் செய்கிறது.
இந்த சிகிச்சை என்பது முழுக்க முழுக்க இயற்கை சார்ந்தது.
இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒலிகளால் உடலை சமநிலப்படுத்துதல் என்றார்கள் சவுண்ட் தெரப்பி பயிற்சியாளர்கள்.
– யாழினி சோமு