பொதுவாக மத்தியிலும் மாநிலத்திலும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊடகங்களை கண்காணிப்பது என்பது எங்கு இயல்பாக நடக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
அவர்களுக்கு ஆதரவான குரல் ஊடகத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதையே பொதுவாக ஆட்சிக்கு வருகிறவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை ஒட்டியே இங்கு ஊடகங்களின் செயல்பாடு, மத்தியிலும், மாநிலத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.
பிரிட்டிஷார் காலத்தில் இருந்தே ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது என்பது அவர்களுக்கு முக்கியமான ஒன்றாக இருந்திருக்கிறது.
ஆங்கிலத்தில் வெளி வருகின்ற ஊடகங்களைவிட மாநில மொழிகளில் வருகிற ஊடகங்களை கட்டுப்படுத்துவதில் அவர்கள் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார்கள் என்பதை இங்குள்ள வரலாறு உணர்த்துகிறது.
இந்தியா, சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளில் மகாகவி பாரதி பணியாற்றியபோது அவர் அப்போதே எழுதிய கட்டுரைகளுக்காக அவரைப் படாத பாடு படுத்தியது பிரிட்டிஷ் அரசு.
அன்றைய காலகட்டத்தில் சுதந்திரப் போராட்டத்திற்கான குரலை எந்தெந்த ஊடகங்கள் வெளிப்படுத்தினவோ அந்த ஊடகத்தை நடத்தியவர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதெல்லாம் கடந்த கால வரலாறு.
சுதந்திரம் அடைந்த பிறகும்கூட இங்கு பொதுவுடமை இயக்கங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
அதாவது, காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகும் பொதுவுடமைக் கட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு கராரான அணுகுமுறை இருந்தது.
பொதுவுடமை இயக்கங்களில் இருந்த தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பொதுவுடமைப் பார்வையை முன்னிறுத்திய ஊடகங்கள் அதாவது அன்றைய அன்றைக்கு பொதுவுடமைச் சித்தாந்தத்தை வெளிப்படுத்திய இதழ்கள் தடை செய்யப்பட்டன.
அதனால் அவர்கள் அதை ரகசியமாக விற்க வேண்டிய சூழலும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தமும் உருவானது.
இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்கனவே இருந்திருந்தாலும் இந்திராகாந்தி எமர்ஜென்சி நிலையை அறிவித்த பிறகு, ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு மிகவும் அதிகரித்தது.
அகில இந்திய அளவில் இந்தக் கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்தாலும் தமிழகத்திலும் அதனுடைய வெவ்வேறு செயல்பாட்டைக் காண முடிந்தது.
முக்கியமாக சென்சாரின் அனுமதிக்குப் பிறகே எந்த ஒரு நாளிதழோ, வார இதழோ அச்சுக்கு போக வேண்டிய நிர்பந்தம் உருவானது.
நெருக்கடி நிலை தளர்ந்த பிறகு ஜனாதா கட்சி ஆட்சிக்கு வந்து, ஆட்சிகள் மாறின பிறகும் ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்ந்து இருந்துகொண்டே தான் இருந்திருக்கிறது.
இதனுடைய நீட்சியாகத்தான் அண்மைக் காலங்களில் குறிப்பாக பாஜக மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு ஊடகங்கள் மீதான வெளிப்படையான மற்றும் மறைமுகமான கட்டுப்பாடுகள் அதிகரித்தன.
சில எழுத்தாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிலர் உயிரிழந்தும் போனார்கள். அந்த அளவுக்கு எழுத்தையோ அல்லது ஒரு காட்சியையோ மக்களிடம் கொண்டு செல்வதற்கு நிறைய இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன.
ஏற்கனவே இருந்து வருகின்ற இத்தகைய கட்டுப்பாடுகள் அல்லது அடக்கு முறையின் இன்னொரு பகுதியாகத் தான் தற்போது எல்லா ஊடகங்களும் நவீனத் தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிக்கப்படுகின்றன.
ஏதாவது விமர்சனம் வெளிவந்தால் அவற்றை தொழில்நுட்ப ரீதியாக அதை முடக்குகிறார்கள். அல்லது மற்றவர்களுக்கு அந்தக் கருத்தைப் பரப்புவதற்கு தடை விதிக்கிறார்கள்.
இத்தகைய சூழல்தான் தற்போது எல்லா மாநிலங்களிலும் நடந்து வருகிறது. ஆனால் அதே சமயத்தில், கடந்த பத்து ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
வெகுஜன ஊடகங்கள் கொண்டு செல்லத் தவறியவற்றை, இன்னொரு விதத்தில், மக்களின் குரலாக மக்களிடமே கொண்டு சேர்க்கிற ஒரு வடிவங்களாக நவீன சமூக வலைத்தள ஊடகங்கள் இருக்கின்றன.

அவற்றில் பலர் துணிந்து எழுதுகிறார்கள். பல காட்சி வடிவங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகின்றன.
அவை பெரும் சலனங்களை உருவாக்கி, ஒரு மாநிலத்தின் தேர்தல் முடிவையோ அல்லது அரசியல் சூழ்நிலையையோ மாற்றக் கூடிய அளவுக்கு வலிமை பெற்றிருக்கின்றன.
இந்த அளவுக்கு சமூக வலைத்தளங்களில் செயல்பாடு அதிகரித்திருக்கிற நிலையில், அதில் பேசுகிற சிலர் வரம்பு மீறி அநாகரிகமாகவோ, சில சமயங்களில் ஆபாசமாகவோ பேச முற்படுகிறார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
ஆனால், இப்படிப்பட்ட அநாகரீகமான பேச்சை, ஜனநாயக உணர்வுள்ள யாரும் ஏற்றுக் கொள்ள முடியாதது தான்.
அதே சமயம் இவர்களைப் போன்ற ஒரு சிலரின் பேச்சுக்களையோ, எழுத்துக்களையோ மையப்படுத்தி அந்த சமூக வலைத்தளங்களின் செயல்பாட்டைக் கட்டுக்குள் வைக்க முனைவது எந்த ஒரு அரசுக்கும் ஜனநாயகப் பண்புக்கும் நல்லதல்ல.
மக்களின் குரல் வெளிப்படுவது ஆட்சியாளர்கள் மூலமாக மட்டுமல்ல. சமூக வலைத்தளங்களிலும் அவை வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
அந்தக் குரலை கட்டுப்படுத்த முனைவது, உண்மையைப் பிரதிபலிக்கின்ற மக்களின் வாயைக் கட்டிப் போடுவதற்கு சமமான ஒன்றுதான்.
– அகில் அரவிந்தன்