ஆகஸ்ட் 9 : சர்வதேச பழங்குடிகள் தினம்
காடும் மலையும் அதிலிருந்து கிடைக்கும் பலன்களுமாகத் தங்களது வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள் பழங்குடியினர்.
இன்று இயற்கைக்கும் இவர்களுக்குமான பிடிமானம் மெல்ல அருகி வருகிறது. உலகம் முழுக்க இதுதான் சூழல் என்ற நிலையில், பழங்குடிகளின் வாழ்வையும் வாழ்க்கைமுறைகளையும் காக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
உலகம் முழுக்க 90 நாடுகளில் சுமார் 47.6 கோடி பழங்குடியினர் வாழ்கின்றனர். மொத்த மக்கள்தொகையில் இது 6.2% ஆகும்.
உலகம் முழுக்க இவர்களது வாழ்க்கை முறையின் அடிப்படை மட்டும் ஒன்றாகவே உள்ளது. இன்று வெகுவாகப் பலரால் சொல்லப்படும் ‘தற்சார்பு’ வாழ்வு முறையைத் தக்க வைத்துக்கொண்டிருப்பவர்கள் இவர்கள் மட்டுமே.
பழங்குடியினர் என்றால் காடு மேடுகளில் வசிப்பவர்கள், காட்டுமிராண்டித்தனமான செயல்பாடுகளைக் கொண்டவர்கள் என்ற பிம்பம் பொதுவெளியில் உள்ளது.
அதற்கு மாறாக, மிகுந்த ஒழுங்கோடும் கட்டுப்பாடுகளோடும் வாழ்வதோடு பெண்கள், முதியவர்கள், குழந்தைகளுக்கான முக்கியத்துவத்தைக் கைவிடாத தன்மை இவர்களிடம் தொடர்ந்து வருகிறது.
இயற்கையோடு இயைந்த வாழ்வு!
பிறப்பு முதல் இறப்பு வரை இயற்கையின் சுழற்சியை ஏந்திப் பிடிப்பவர்கள் பழங்குடியின மக்கள். உண்மையைச் சொன்னால், இயற்கைக்கும் தமக்குமான பந்தத்தை ஒரு கண்ணி போல தலைமுறை தலைமுறையாகக் கடத்துபவர்கள்.
உணவு, உடை, உறைவிடப் பழக்க வழக்கங்கள் மற்றவர்களிடம் இருந்து பெருமளவு வேறுபடுவதால், தனித்துவமிக்க கலாசாரத்தைக் கொண்டவர்கள்.
பல்வேறு மொழிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், அறிவுசார் பதிவுகள் போன்றவற்றைக் கொண்டிருக்கின்றனர் பழங்குடிகள். மண்ணுடன் நெருங்கிய உறவைப் பேணும் இம்மக்கள், தங்களுக்கென்று தனித்த நிர்வாக முறைகளையும் கொண்டுள்ளனர்.

இந்தியாவில் மட்டும் 705 பழங்குடி இனங்கள் உள்ளன; கிட்டத்தட்ட 10.4 கோடி பேர் வசிக்கின்றனர்.
இது, இந்திய மக்கள்தொகையில் 8.6%. ராஜஸ்தான், காஷ்மீர், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளம் மட்டுமல்லாமல் அந்தமான் நிகோபர் தீவுகள் வரை பல்வேறு பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.
இப்போதும் இம்மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வையே மேற்கொள்கின்றனர். அன்றாட உணவு முதல் எதிர்காலத்துக்கான சேமிப்பு வரை, இவர்கள் அதீத நுகர்வை ஊக்குவிப்பதில்லை.
இவர்களது வாழ்க்கை முறை குறைவான ஆசைகளையே ஊக்குவிப்பதால், இன்று புளகாங்கிதத்துடன் கொண்டாடப்படும் ‘மினிமலிச’ வாழ்க்கைக்கு முன்னோடிகளும் இவர்கள்தான்.
பல்வேறு சிறப்புகள்!
ஒவ்வொரு பழங்குடியினக் குழுவுக்கும் பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன. அதனை வழிவழியாகக் காக்கும் எண்ணத்தில், இவர்கள் காதல் திருமணங்களை ஊக்குவிப்பதில்லை. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இதிலும் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டன.
தமிழகத்தைப் பொறுத்தவரை இருளர், பளியர், புலையர், படுகர், தோடர், குறும்பர் உட்பட 40க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வசிக்கின்றனர்.
இவர்கள் பேசும் மொழிகள் வெவ்வேறுவிதமாக ஒலித்தாலும், அடிப்படையில் இவற்றின் உள்ளடக்கம் மலையாளம், கன்னட மொழிகளைப் பெருமளவு கொண்டிருக்கின்றன. அதனால், இவர்களது மூல மொழி தமிழ் என்றும் கொள்ளலாம்.
மலைக்கிராமங்களில், போக்குவரத்து வசதியற்ற இடங்களில் வசிக்கும் காரணத்தால், இன்றும் கூட சில பழங்குடியின குழந்தைகள் குறைவான அளவிலேயே கல்வியறிவு பெறுகின்றனர். அதைச் சரி செய்யும் நடவடிக்கைகளும் அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில், வளர்ச்சியின் பெயரால் காடுகளும் மலைகளும் அழிக்கப்படுவதால் தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டுப் புலம்பும் பழங்குடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த எண்ணம் பல்லாண்டுகளாக வேரூன்றியிருப்பதாலோ என்னவோ, சில பழங்குடியின குழுக்கள் வசிக்குமிடத்துக்கு அந்நியர்கள் செல்ல முடியாத நிலை இன்றும் நிலவுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னால், அந்தமான் தீவுகளில் வசிக்கும் சென்டினல் மக்களை சந்திப்பதற்காகச் சென்ற இளம் பாதிரியார் ஒருவர் கொல்லப்பட்டதற்குக் காரணமும் இதுதான்.
அங்கு ஓங்கே, ஜாரவா, ஜாங்கில் என்று வேறு சில பழங்குடிகளின் வாழ்க்கை முறை வெளிநாட்டவர்களின் வருகையால் மாறிவிட்டது. ஆனால், சென்டினல் மக்கள் அப்படிப்பட்ட குரல்களுக்குச் செவி சாய்ப்பதில்லை.
இம்மக்கள் இப்போதும் நிர்வாணமாக வாழ்கின்றனர். கிட்டத்தட்ட ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்கப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகளைப் பிரதிபலிக்கின்றனர்.
இவர்களை தொலைவில் இருந்து காணும் நம் பார்வை, இன்றளவும் ஒட்டுமொத்த பழங்குடிகளின் உடையலங்காரம் பற்றி பல்வேற்று தவறான கற்பிதங்களைச் சுமந்து கொண்டிருக்கிறது.
தற்சார்பு வாழ்க்கை!

ஒரு மனிதன் தனக்குத் தேவையானதை தானே உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்பதே தற்சார்பு வாழ்வின் அடிப்படை.
பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் ஒரு குழந்தை நடை பயிலத் தொடங்கியதுமே, இதற்கான பயிற்சிகள் தொடங்கி விடுகின்றன.
அது மட்டுமல்லாமல் வானவியல், நிலவியல், நீர்மையியல், பறவையியல், விலங்கியல் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து இவர்களுக்கு இருக்கும் அறிவுதான், இப்பூமியில் பழங்குடியினத்தைத் தொடர்ந்து தற்சார்புடன் வாழச் செய்கிறது.
இன்று, மத்திய மற்றும் மாநில அரசுகள் பழங்குடியின மக்களின் வாழ்வைச் சீரமைக்கப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதோடு, அவர்களது தனித்துவத்தை மற்றவர்களும் பின்பற்றும்விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பழங்குடிகள் சீரான ஆரோக்கியத்தை வாழ்வு முழுவதும் அனுபவிக்க விரும்புபவர்கள். அது கெட்டுவிடாமல், அவர்களுக்கு விருப்பமானதைச் செய்யும் வகையில் பிற மக்கள் உதவுவதும் அவசியம்.
பழங்குடியின மக்களின் தனித்துவமான கலாசாரத்தை முன்னிறுத்தியும், அருகிவரும் அவர்களது வாழ்வைக் காப்பதை வலியுறுத்தியும், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 ஆம் தேதியன்று ‘சர்வதேச பழங்குடியின தினம்’ கொண்டாடப்படுகிறது.
அவர்களது தனித்தன்மையைப் போற்றுவதோடு, உடன் கைகோர்த்து ஒன்றாகப் பயணிப்பதே இத்தினத்தின் நோக்கம்!
– பா. உதய்