தமிழகத்தில் சிறிதும் பெரிதுமாக பல்லாயிரம் ஸ்டார்ட்-அப்-கள் உருவாகி வருகின்றன.
பல நிறுவனங்கள் தொடங்கிய வேகத்திலேயே மிகப்பெரும் இலக்கை முன்வைத்து நகரத் தொடங்கி இருக்கின்றன.
பாரம்பரியத்தை புத்தாக்க வடிவில் கொடுக்கும் மாற்றுச் சிந்தனைகளுடன் கூடிய இளைஞர்களை பெருமளவில் காண முடிகிறது.
பார்வைக்கு புலப்படாத சாதாரணமாக கடந்து போகிறவற்றை எல்லாம் புத்துலகின் தேவைக்கேற்ப வகைப்படுத்தி வணிகமாக்குகிற உத்தியை இந்த தலைமுறை புரிந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய வழக்கொழிந்து போன ஒரு விஷயத்தை மீட்டெடுத்து அதன் மூலம் பெரும் பொருள் ஈட்டிக் கொண்டிருக்கும் நிறுவனம்தான் Arola bamboo products.
நம் மரபு சார்ந்த புழங்கு பொருட்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே இதனை தொடங்குவதற்கு காரணம் என்கின்றனர், இதன் நிறுவனரான சுதாகர் தர்ஷனா தம்பதியினர்.

மதுரையைச் சேர்ந்த இவர்களது Arola நிறுவனம், அனைவரும் வசீகரிக்கும் வடிவங்களில் மூங்கில் பொருட்களை உருவாக்குகிறது.
பெரும் ஆரோக்கிய சவால்களை சந்தித்து வரும் இந்த தலைமுறையில், காற்றில் இருந்து உணவு வரை அனைத்தும் மாசுபட்டு நிற்கும் சூழலில், புழங்கு பொருட்களின் பெரும் பகுதியை பிளாஸ்டிக் பொருட்கள் ஆக்கிரமித்ததிருப்பதால்
அதற்கு மாற்றாகவே தொடங்கப்பட்டது இந்நிறுவனம் எனக் கூறும் இவர்கள் – வீட்டு உபயோகப் பொருட்கள், இருக்கைகள், கட்டில்கள் என 64 வகை மூங்கில் பொருட்களை தங்கள் தொழிற்சாலையில் தயாரிக்கின்றனர்.
மூங்கில் என்பது மரம் அல்ல. இது மிகப்பெரிய புல் வகையைச் சேர்ந்த தாவரமாகும். இது மரங்களை விட அதிகமான ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.
காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உறிஞ்சி சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது.
இதன் உறுதித் தன்மை காரணமாக கட்டுமான துறையில் கூரை வேய்வதற்கும் தடுப்புச் சுவர்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
மூங்கில் குருத்துகள் உணவாகவும் இதன் அரிசி மருத்துவப் பயன் கொண்டதாகவும் உள்ளது.
பல வகையிலும் பயன் தரக்கூடிய சிறந்த இயற்கைப் பொருளாக விளங்குவதால், மூங்கிலை மட்டுமே மூலப்பொருளாக வைத்து செயல்பட முடிவெடுத்தது இந்நிறுவனம்.
ஈகோ டூரிசம் நிறுவனம் மூலமாக நகரங்களில் உள்ளவர்களை கிராமப் புறங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று அங்கு நிலவும் வாழ்வியலை காண்பதன் மூலம் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையும் அவர்களின் மூங்கில் பயன்பாட்டின் முக்கியத்துவமும் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது என்கிறார் நிறுவனர் சுதாகர்.

வடகிழக்கு மாநிலங்களில் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கும் அதே சமயம், வெளிநாட்டு சந்தையில் மிகப்பெரிய தேவை உள்ள பொருளாகவும் உருவெடுத்துள்ளது மூங்கில்.
ஆகையால் இப் பொருட்களை செய்யும் கைவினைஞர்களை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டது என கூறும் இவர் படித்தது வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே.
தன்னுடைய திறமை மற்றும் அயராத உழைப்பின் காரணமாக கல்லூரிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக சென்று எம்.பி.ஏ மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் அளவுக்கு தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையில்லை.
கொரோனா காலகட்டத்தில் மூங்கில் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவர், சிறுசிறு பொருட்களை உற்பத்தி செய்து சந்தை வியாபாரத்தை தொடங்கினார்.
சிறந்த தரத்தின் காரணமாக குறுகிய காலத்தில் பெரிய ஆர்டர்கள் கிடைக்கப்பெற்றன.
வீட்டு உபயோகப் பொருட்கள் மட்டுமல்லாமல் மூங்கிலைக் கொண்டு செய்யப்படும் தேயிலை, ஊறுகாய், அரிசி, புட்டு, சோப்பு, பற்பசை, மதிப்பு கூட்டு பொருட்கள் என உணவு உற்பத்தியிலும் கால் பதித்துள்ளது இவரின் நிறுவனம்.

தவிர, இரண்டரை லட்சம் ரூபாயில் மூங்கில் வீடுகளும் அமைத்துத் தரப்படுகின்றன.
உள் அலங்கார வடிவமைப்பும் செய்து தரப்படுகிறது.
இன்று இந்தியா முழுவதும் இவர்களது தயாரிப்புகள் கிடைக்கின்றன.
ஸ்டார்ட் அப் டி.என். நிறுவனம் 10 லட்சம் ரூபாய் ஊக்க தொகையாக வழங்கியது மட்டுமின்றி 85 லட்ச ரூபாயை பங்கு தொகையாகவும் வழங்கி இந்நிறுவனத்தை அங்கீகரித்துள்ளது.
இன்று இந்தியா முழுவதும் வியாபாரத்துக்கு பொருட்கள் அனுப்பப்படுகின்றன. தவிர ஆன்லைன் விற்பனையும் நடைபெறுகிறது.
மேலும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் தன்னிறைவு பெற பயிற்சி அளித்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு விற்பனை கூடம் அமைத்துக் கொடுத்தல் என, சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பை தருவதன் மூலம் பிறருக்கு முன்னுதாரணமாகவும் விளங்குகிறது Arola நிறுவனம்.
S. வாணி