வி.கே.ராமசாமியை கதாசிரியராக்கிய ஏ.பி.நாகராஜன்!

‘நாம் இருவர்’ படத்தில் வி.கே.ராமசாமி ஏற்றிருந்த ‘பிளாக் மார்க்கெட்’ சண்முகம் பாத்திரம் மிகச் சிறந்த பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தாலும் அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் பட வாய்ப்புகள் எதுவும் அவரைத் தேடி வரவில்லை.

‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் அவரது ‘நல்ல தம்பி’ திரைப்படத்தில் வாய்ப்பு தந்ததற்குப் பிறகுதான் வி.கே.ராமசாமியின் வாழ்க்கையில் வசந்தம் வீசத் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து ‘கிருஷ்ண பக்தி’, ‘வன சுந்தரி’, ’லைலா மஜ்னு’ ஆகிய படங்களில் நடித்த வி.கே.ராமசாமிக்கு, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவான ‘திகம்பர சாமியார்’ படத்திலும் ‘சர்வாதிகாரி’ படத்திலும் நல்ல வேடங்கள் அமைந்தன.

அதற்குப் பிறகு அவரது திரையுலக வாழ்க்கை ஏறுமுகமாகவே அமைந்தது.

1947-ம் ஆண்டில் நடிகராக தமிழ்த் திரையுலகில் கால் பதித்த வி.கே.ராமசாமி 1957-ம் ஆண்டிலேயே திரைப்படத் தயாரிப்பாளராக உயர்ந்தார்.

யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் குழுவிலே இருந்தபோது விகே.ராமசாமிக்கும், ஏ.பி.நாகராஜனுக்கும் இடையே உருவான நட்பு அவர் தயாரிப்பாளராக உதவியது.

நாடக வாழ்க்கைக்குப் பிறகு ‘நால்வர்’ படத்தின் மூலம் திரை உலகில் கதாசியராக அறிமுகமாகி ‘நல்ல தங்காள்’, ‘பெண்ணரசி’, ‘டவுன் பஸ்’ ஆகிய பல திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி புகழ் பெற்றிருந்த ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும், சேர்ந்து ஸ்ரீலஷ்மி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.

ஏ.பி.நாகராஜனின் கதை, வசனத்தில் ‘மக்களைப் பெற்ற மகராசி’ என்ற படத்தை எடுக்க முடிவு செய்த அவர்கள் படத்தின் இயக்குநராக கே.சோமுவை ஒப்பந்தம் செய்தார்கள்.

ஏ.பி.நாகராஜன் கதை, வசனம் எழுதிய பல படங்களை இயக்கியவர் என்பதால் கே.சோமு, அவர்களது முதல் படத்தை இயக்க ஒப்புக் கொண்டார்.

கதாநாயகனாக யாரை ஒப்பந்தம் செய்யலாம் என்றெல்லாம் அவர்கள் இருவரும் யோசிக்கவே இல்லை. அவர்களுடைய ஒரே தேர்வாக இருந்தவர் சிவாஜி கணேசன்.

‘பராசக்தி’ படத்தில் நடித்தபோது வி.கே.ராமசாமிக்கு, சிவாஜி கணேசனுடன் நல்ல பழக்கம் இருந்ததால் அவர்கள் கேட்ட மறு நிமிடமே எந்த மறுப்பும் சொல்லாமல் அவர்களது படத்திலே நடிக்க ஒப்புக் கொண்டார் சிவாஜி.

ஏபி.நாகராஜன் கதை வசனம் எழுதிய அந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக பானுமதி நடித்தார். கேவி.மகாதேவனின் இசையில் அருமையான பாடல்களைக் கொண்ட ‘மக்களைப் பெற்ற மகராசி’ மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவாஜி கணேசன்-சாவித்திரி ஜோடியாக நடிக்க ‘வடிவுக்கு வளைகாப்பு’ என்ற படத்தை அவர்கள் தொடங்கினார்கள்.

அந்தப் படம்தான் ஏ.பி.நாகராஜன் இயக்கிய முதல் படம். அந்தப் படம் ஐந்தாயிரம் அடிகள் வளர்ந்த நிலையில் ஜெமினி கணேசனை மணம் முடித்திருந்த ‘வடிவுக்கு வளைகாப்பு’ படத்தின் நாயகி சாவித்திரிக்கு நிஜ வாழ்க்கையிலேயே வளைகாப்பு நடந்தது.

சாவித்திரியின் கர்ப்பம் காரணமாக அந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை உருவாயிற்று.

மீண்டும் அந்தப் படத்தின் படப்பிடிப்பில் சாவித்திரி கலந்து கொள்ள குறைந்தது எட்டு மாதங்களாவது ஆகும் என்பதால் அதற்கிடையில் பெரிய நட்சத்திரங்கள் யாரும் இல்லாமல் ஒரு படத்தைத் தயாரிக்கலாம் என்று ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் முடிவெடுத்தனர்.

“அதற்கு ஏற்றார்போல ஏதாவது கதை வைத்திருக்கிறீர்களா?” என்று ஏ.பி.நாகராஜனிடம், வி.கே.ராமசாமி கேட்டபோது,

“நம்முடைய அடுத்த படத்திற்கு கதை எழுதப் போவது.. நான் இல்லை.. நீங்கள்” என்றார் ஏ.பி.நாகராஜன்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வி.கே.ராமசாமி. “என்ன விளையாடுகிறீர்களா? நானாவது கதை எழுதுவதாவது…” என்று நீட்டி முழக்கியபோது “கதை எழுதத் தேவையான எல்லா தகுதிகளும் உங்களிடம் இருக்கிறது.

நாடகத்தில் நடிக்கும்போது காட்சிக்கு ஏற்ற மாதிரி நீங்க வசனம் பேசி நடித்ததை நான் பல முறை ரசித்திருக்கிறேன்.

அதே போன்று நான் கதை சொல்லும்போது அந்தக் கதையில் எந்த இடம் தொய்வாக இருக்கிற தென்று மிகச் சரியாக கண்டுபிடித்து சொல்லக்கூடிய ஆற்றல் உங்களிடம் இருப்பதையும் நான் என் அனுபவத்தில் தெரிந்து வைத்திருக்கிறேன்.

அவ்வளவு திறமையும், கற்பனை சக்தியும் உள்ள நீங்கள் கதை எழுத ஆரம்பித்தீர்கள் என்றால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். ஒரு எழுத்தாளனுக்கு முக்கியமான தேவை அனுபவம். அது உங்களிடம் நிறைய இருக்கு.

அதனால் இன்றைக்கே பிள்ளையார் சுழி போட்டு கதையை எழுத ஆரம்பியுங்கள்” என்றார் ஏ.பி.நாகராஜன்.

அவர் அப்படி சொல்லிவிட்டுப் போனவுடன் ஒரு கதையை எழுதித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்தில் இரவு பத்து மணிக்கு கதை எழுத உட்கார்ந்த ராமசாமி முதலில் அந்தக் கதைக்கு ‘நல்ல இடத்து சம்பந்தம்’ என்று மங்களகரமான பெயரை சூட்டினார்.

அறிஞர் அண்ணா ‘ஓர் இரவு’ கதைக்கு ஒரே இரவில் வசனம் எழுதி முடித்ததைப்போல விடியற்காலை ஐந்து மணிக்குள் கதையை முழுவதுமாக எழுதி முடித்த வி.கே.ராமசாமி அடுத்து அவரது அலுவலகத்துக்கு பக்கத்திலே இருந்த பாண்டி பஜாருக்குப் போய் கீதா ஹோட்டலில் காபியை குடித்துவிட்டு வந்து படுத்துவிட்டார்.

காலை ஒன்பது மணிக்கு அலுவலகம் வந்த ஏ.பி.நாகராஜன் வி.கே.ராமசாமி எழுதி வைத்திருந்த கதையைப் படித்துப் பார்த்துவிட்டு அசந்து போனார்.

வி.கே.ராமசாமியை நடிகனாக ஆக்கியதில் மொத்த பங்கும் அவரது அண்ணனான மாரியப்பனையும், டி.கே.ராமச்சந்திரனையும் மட்டுமே சாரும்.

தன்னை நடிகனாக்கிய டி.கே.ராமச்சந்திரன் மீது வி.கே.ராமசாமிக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உண்டு என்பதால் அவரது கதாபாத்திரத்தைச் சுற்றியே ‘நல்ல இடத்து சம்பந்தம்’ கதையை எழுதியிருந்தார் அவர்.

காலையில் வி.கே.ராமசாமி எழுந்தவுடன் “கதை ரொம்பவும் பிரமாதமாக இருக்கு. அதனால் உடனே ஷூட்டிங்கிற்கு போய்விடலாம் என்று நினைக்கிறேன்.

நாளைக்கே எல்லோரிடமும் பேசி அட்வான்ஸ் கொடுத்துவிட்டால் ஒரு மாதத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்து விடலாம்…” என்றார் ஏ.பி.நாகராஜன்.

– நன்றி: டூரிங் டாக்கீஸ்

You might also like