மனிதனின் அடிப்படை தேவைகளில் முதலாவதும் உலக இயக்கத்திற்கு முழுமுதற் காரணமாகவும் விளங்குவது உணவு.
உடலுக்கு ஆற்றலை வழங்கும் அட்சயப்பாத்திரமாக இருக்கும் அதே நேரம், நோய்களிலிருந்து காப்பாற்றும் கேடயமாகவும் இது உள்ளது.
ஆரோக்கியம் குறித்த தேடல் அதிகரித்து வரும் இவ்வேளையில் பாரம்பரிய உணவுகளின் பக்கம் மக்களின் கவனம் திரும்புவது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
பல்வேறு ஊட்டச்சத்துக்களை அள்ளித் தந்து நல்வாழ்விற்கு வித்திடும் இவற்றின் மருத்துவப் பயன்களையும் அதிகம் அறியப்படாத, ஆனால், புழக்கத்தில் உள்ளவற்றைப் பற்றியும் அறிவது அவசியம்.
‘உணவே மருந்து’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் நம் முன்னோர்கள் பருவ கால மாற்றங்களுக்கு ஏற்பவும் உடலின் தேவைக்கேற்பவும் உணவுகளை வடிவமைத்தனர்.
அந்த வகையில் ஜீரண மண்டலத்தை பாதிக்காத உணவுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சிறுதானியங்கள், நார்ச்சத்துள்ள காய்கறிகள், கீரைகள் ஆகியவை செரிமானத்தை எளிதாக்கி பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கின்றன.
வழக்கத்தில் உள்ள அரைக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, முளைக்கீரை ஆகியவை தவிர மருத்துவ குணம் மிக்க பல்வேறு கீரை வகைகள் நம் தமிழகத்தில் பயிரிடப்படுகின்றன.
ஆனால், அவைகள் பற்றிய போதிய அறிமுகம் இல்லாததால் பெரும்பாலும் வழக்கத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்ட அவற்றைப் பற்றி பார்ப்போம்.
கல்யாண முருங்கை / முள் முருங்கை கீரை :
இதன் இலைகள், பூக்கள் மற்றும் பட்டை ஆகிய அனைத்தும் பயன் தருபவை. வாயுத் தொல்லையை நீக்குவதோடு பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
கருப்பையை வலுப்படுத்தவும் பிரசவத்திற்கு பின் ஏற்படும் உடல் சோர்வை போக்கவும் இது சிறந்து விளங்குகிறது. இது சற்று கசப்பு சுவை கொண்டிருப்பதால் பருப்புடன் சேர்த்து சமைத்து உண்ணலாம்.
முசுமுசுக்கை கீரை:
இது வேலிகள் மீது படர்ந்து வளரும் ஒரு பாரம்பரிய மூலிகைக் கொடி ஆகும். சொரசொரப்பான நுண்ணிய ரோமங்களை கொண்டிருப்பதால் இப் பெயர் பெற்றது. சுவாசக் கோளாறுகளுக்கு சிறந்த தீர்வை அளிக்கவல்லது.
நீண்ட கால இருமல், சளி மற்றும் இரைப்பு நோயைக் குணப்படுத்தவும் உதவுகிறது.
பசியைத் தூண்டி, கபத்தை சமநிலைப்படுத்துகிறது. இதனை துவையலாகவும் இலைகளை அரைத்து மாவுடன் சேர்த்து தோசையாகவும் உண்ணலாம்.
வல்லாரைக்கீரை:
பாரம்பரிய மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கும் ஒரு மூலிகைக் கீரையாகும்.
ஞாபகசக்தி கீரை என்று அழைக்கப்படும் இது, மூளையின் செயல்பாட்டை தூண்டி நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
மேலும் நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. இதற்கென்று தனி சுவை கிடையாது எனவே துவையலாகவோ பொடி வகைகளில் சேர்த்தோ உண்ணலாம்.
முடக்கத்தான் கீரை:
முடக்கு + அறுத்தான் என்பது முடக்குகளை நீக்கும் தன்மை கொண்டது என்ற பொருளில் அறியப்படும் இந்த கீரையானது மூட்டு வலிகள், வீக்கம், நரம்பு கோளாறுகள் மற்றும் வாத நோய்களுக்கு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.
மேலும் தோல் அழற்சி மற்றும் சரும பராமரிப்புக்கும் உதவுகிறது. இதனை அரைத்து சேர்த்து தோசையாகவோ அல்லது சூப்பாகவோ உட்கொள்ளலாம்.
எலும்பொட்டிக் கீரை:
உடைந்த எலும்புகளை ஒன்று சேர்க்கும் மருத்துவக் குணம் கொண்ட ஒரு ஒப்பற்ற கீரையாகும்.
இதில் கால்சியம் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால் பலவீனமான எலும்புகளை விரைவாக குணப்படுத்தவும் மூட்டு இணைப்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
வெளிப்புறப் பயன்பாட்டிற்கும் இது பெரிதும் உதவுகிறது. இதனை உணவில் சேர்த்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
உணவாகவும் மருந்தாகவும் பயன் தரும் இவற்றை உட்கொள்வது ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.
S. வாணி