இரவு நேரங்களில் வானத்தில் நட்சத்திரங்களைப் பார்ப்பது மனதிற்கு அமைதியாகவும் ரசிகத்தக்கதாகவும் இருக்கும்.
ஆனால், அந்த நட்சத்திரங்கள் வானத்தில் இல்லாமல் பூமிக்கு அடியில் இருந்தால் எப்படி இருக்கும்?
அப்படிப்பட்ட ஒரு இடம் உண்மையிலேயே உள்ளது. அதுதான் நியூசிலாந்தில் இருக்கும் Waitomo Glowworm Caves.
‘Waitomo’ என்ற பெயரே அந்த இடத்தின் தனித்துவத்தைச் சொல்கிறது. Māori மொழியில் “Wai” என்றால் தண்ணீர், “Tomo” என்றால் பள்ளம் அல்லது குகை. அதாவது, “நீர் ஓடும் குகை” என்பதே அதன் பொருள்.
இன்று உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இந்த இடத்தைப் பார்க்க வருவதற்கு காரணம், குகையின் மேற்கூரையில் நட்சத்திரங்களைப் போல ஒளிரும் ஆயிரக்கணக்கான glowworms.
சுமார் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பகுதி கடலுக்கு அடியில் இருந்தது. கடல்வாழ் உயிரினங்களின் ஓடுகள் மற்றும் எலும்புகள் சேர்ந்து சுண்ணாம்புக் கற்களாக (Limestone) மாறின.
காலப்போக்கில் மழைநீரும் நிலத்தடி ஆறுகளும் அந்தப் பாறைகளை மெதுவாகக் கரைத்து, இன்று நாம் பார்க்கும் பிரம்மாண்டமான குகைகளை உருவாக்கின.

தற்போது Waitomo பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குகைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தக் குகை பல நூற்றாண்டுகளாக Māori மக்களுக்குத் தெரிந்திருந்தாலும், அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதை யாரும் முழுமையாக ஆராயவில்லை.
1887-ஆம் ஆண்டு Māori தலைவர் Tane Tinorau மற்றும் ஆங்கில நில அளவையாளர் Fred Mace, flax செடியின் தண்டுகளால் ஒரு சிறிய படகை உருவாக்கி, மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை மட்டும் நம்பி அந்த இருண்ட குகைக்குள் பயணம் செய்தனர்.
அவர்கள் உள்ளே சென்ற சில நிமிடங்களில், அவர்களின் கண்களுக்கு நம்ப முடியாத ஒரு காட்சி தெரிந்தது.
குகையின் மேலே ஆயிரக்கணக்கான நீல-பச்சை நிற ஒளிப்புள்ளிகள் மின்னிக் கொண்டிருந்தன.
முதலில் அது நட்சத்திரங்கள் என்று நினைத்த அவர்கள், பின்னர் அவை சிறிய உயிரினங்கள் என்பதை உணர்ந்தனர்.
அந்த தருணம்தான் Waitomo Glowworm Caves உலக வரலாற்றில் இடம்பிடித்த தருணமாக மாறியது.
1889-ஆம் ஆண்டில் Tane Tinorau மற்றும் அவரது மனைவி Huti இந்தக் குகையை சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறந்தனர். சிறிய கட்டணம் வாங்கி மக்களை படகில் அழைத்துச் சென்றனர்.
பின்னர் 1906-ஆம் ஆண்டு நியூசிலாந்து அரசு குகையின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டது.
ஆனால் 1989-ஆம் ஆண்டு, குகையின் உரிமை மீண்டும் அதன் பாரம்பரிய Māori உரிமையாளர்களின் வாரிசுகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்றும் அங்கு பணிபுரியும் பலர் Tane Tinorau மற்றும் Huti-யின் சந்ததியினரே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குகையின் நட்சத்திரம் போல ஒளிர்வது glowworms. பெயரில் “worm” இருந்தாலும், இவை உண்மையில் புழுக்கள் அல்ல.
Arachnocampa luminosa என்ற அறிவியல் பெயர் கொண்ட, நியூசிலாந்தில் மட்டுமே வாழும் ஒரு வகை fungus gnat-இன் இளம் பருவம் (larva).
இவற்றின் வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது. முட்டையிலிருந்து வெளிவந்த பிறகு, larva ஆக இருக்கும் காலத்தில்தான் இவை ஒளிர்கின்றன.
பின்னர் pupa ஆக மாறி, இறுதியில் சிறிய ஈ போன்ற adult fungus gnat ஆக வெளிவரும். adult ஆன பிறகு வெறும் இரண்டு முதல் ஐந்து நாட்கள் மட்டுமே உயிருடன் இருக்கும்.
அந்தக் குறுகிய காலத்தில் இனப்பெருக்கம் செய்து, அதன் வாழ்க்கை முடிந்துவிடுகிறது.
இவை தனது உடலில் இருந்து பட்டு போன்ற இழைகளை உருவாக்கி, அவற்றை குகையின் மேலிருந்து கீழே தொங்கவிடுகிறது. அந்த இழைகளில் ஒட்டும் தன்மை கொண்ட திரவம் இருக்கும்.
அதன் வால் பகுதியில் உருவாகும் நீல-பச்சை நிற ஒளியைப் பார்த்து சிறிய பூச்சிகள் அருகில் பறந்து வரும். பின்னர் அந்த ஒட்டும் இழைகளில் சிக்கிக்கொள்ளும்.
Glowworm அந்தப் பூச்சிகளை உணவாக உண்ணும். இது ஒரு புத்திசாலித்தனமான வேட்டையாடும் தந்திரமாக பார்க்கப்படுகிறது.

இந்த ஒளி Bioluminescence எனப்படும் இயற்கை நிகழ்வால் உருவாகிறது.
Glowworm-ன் உடலில் உள்ள luciferin, luciferase, ATP மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை ஒன்றுடன் ஒன்று வினைபுரிவதால் வெப்பமில்லாத ஒளி “Cold Light” உருவாகிறது.
அதனால்தான் அவை சிறிய நட்சத்திரங்களைப் போல மின்னுகின்றன.
Waitomo குகைகள் glowworms வாழ மிகவும் ஏற்ற இடமாக இருக்கின்றன.
எப்போதும் இருட்டாக இருக்கும் சூழல், அதிக ஈரப்பதம், குளிர்ச்சியான வெப்பநிலை, நிலத்தடி ஆறு மற்றும் தொடர்ந்து உள்ளே வரும் சிறிய பூச்சிகள் ஆகியவை glowworms வளர சிறந்த சூழலை உருவாக்குகின்றன.
இன்று இந்தக் குகைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் முதலில் குகைக்குள் நடந்து சென்று அதன் அற்புதமான சுண்ணாம்புப் பாறை அமைப்புகளைப் பார்ப்பார்கள்.
பின்னர் சிறிய படகில் அமைதியாக நிலத்தடி ஆற்றில் மிதந்து செல்வார்கள்.
அந்த நேரத்தில் மேலே பார்த்தால் ஆயிரக்கணக்கான glowworms ஒளிரும் காட்சி தெரியும்.
அது பூமிக்கு அடியில் உருவான ஒரு நட்சத்திர வானம் போல இருக்கும். அதனால்தான் பலர் இதை “Underground Starry Sky” என்று அழைக்கிறார்கள்.
இந்தக் குகைக்குள் Flash Photography பெரும்பாலும் அனுமதிக்கப்படாது.
இந்த அரிய உயிரினங்களையும் அவற்றின் வாழ்விடத்தையும் பாதுகாக்க பல கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

Waitomo Glowworm Caves என்பது வெறும் சுற்றுலாத் தலம் மட்டுமல்ல.
பல மில்லியன் ஆண்டுகள் பழமையான புவியியல் வரலாறு, Māori மக்களின் பாரம்பரியம், மற்றும் உலகிலேயே அரிதாகக் காணப்படும் உயிரியல் அதிசயம் ஆகிய மூன்றும் ஒன்றாகச் சந்திக்கும் இடம்.
நியூசிலாந்துக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால், பூமிக்கு அடியில் இருக்கும் இந்த நட்சத்திர உலகத்தை ஒரு முறையாவது கண்டுகளிக்கத் தவறாதீர்கள்.
– சங்கீதா