“போன்சாய்” என்ற வார்த்தையைக் கேட்டவுடன் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வருவது ஒரு குட்டி மரம். ஆனால், உண்மையில் போன்சாய் என்பது ஒரு தனி வகை மரம் அல்ல. காட்டில் வளரும் அதே மரம்தான்.
அதை மனிதனின் பொறுமை, கலை உணர்வு மற்றும் இயற்கையின் மீது இருக்கும் மரியாதை ஆகியவை சேர்ந்து சிறிய வடிவத்தில் வாழ வைப்பதுதான் போன்சாய்.
ஜப்பானிய மொழியில் Bon என்றால் தட்டு அல்லது தொட்டி (Tray / Shallow Pot) என்றும், Sai என்றால் நடுதல் அல்லது வளர்த்தல் (Planting / Cultivating) என்றும் பொருள். அதாவது “தொட்டியில் வளர்க்கப்படும் மரம்”.
இதன் பின்னால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறும், ஒரு தனித்துவமான வாழ்க்கைத் தத்துவமும் இருக்கிறது.
இன்று உலகம் முழுவதும் போன்சாய் என்றாலே ஜப்பான் நினைவுக்கு வந்தாலும், அதன் ஆரம்பம் சீனாவில், அங்கு பென்ஜிங் (Penjing) என்ற கலை உருவானது.
சிறிய தட்டுகளில் மலைகள், கற்கள், பாசி, மரங்கள் ஆகியவற்றை வைத்து முழு இயற்கைக் காட்சியையே சிறிய வடிவில் (Miniature Landscape) உருவாக்கினர்.

தோராயமாக கி.பி. 6–7 ஆம் நூற்றாண்டுகளில் சீனாவுடன் ஜப்பான் கொண்டிருந்த கலாச்சார மற்றும் மதத் தொடர்புகள் மூலம், சீனாவின் பென்ஜிங் (Penjing) கலை ஜப்பானுக்கு அறிமுகமானது.
பின்னர் ஜப்பானியக் கலைஞர்களும் ஜென் புத்த மதச் சிந்தனையும் இணைந்து அதை இன்று உலகம் அறியும் போன்சாய் (Bonsai) கலையாக மாற்றினர்.
இது மரத்தின் ஒரு குட்டி இனமோ அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்ட மரமோ அல்ல.
விதையிலிருந்து வளர்ப்பது மிகவும் நீண்ட காலம் எடுப்பதால், பெரும்பாலும் ஒரு ஆரோக்கியமான மரத்தின் கிளையை வெட்டி புதிய செடியை உருவாக்குவார்கள். அதன் பிறகுதான் உண்மையான பயணம் ஆரம்பமாகிறது.
ஒவ்வொரு நாளும் அந்த மரத்தை கவனிக்க வேண்டும். சரியான அளவு தண்ணீர், சூரிய ஒளி, கிளைகளை வெட்டுதல், கம்பியால் மெதுவாக வளைத்தல், வேர்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை சீரமைத்தல் என தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
ஒரு போன்சாய் கலைஞரின் வேலை, மரத்தை கட்டுப்படுத்துவது அல்ல; அதன் இயல்பை புரிந்துகொண்டு அதனுடன் சேர்ந்து வளர்வதுதான்.
அதனால்தான் போன்சாய் என்பது ஒருபோதும் முடிவடையாத கலை என்று சொல்கிறார்கள்.

ஒரு ஓவியத்தை வரைந்து முடித்துவிடலாம். ஒரு சிலையை செதுக்கி முடித்துவிடலாம்.
ஆனால் ஒரு போன்சாய் உயிருடன் இருக்கும் வரை அது வளர்ந்துகொண்டே இருக்கும்.
அதனுடன் சேர்ந்து கலைஞரின் பயணமும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
சில போன்சாய் மரங்கள் 50 ஆண்டுகள் வாழ்கின்றன. சில 100 ஆண்டுகளைத் தாண்டுகின்றன.
ஜப்பானில் பாதுகாக்கப்படும் சில போன்சாய்கள் 500 ஆண்டுகளுக்கும் மேலானவை.
பல ஜப்பானிய குடும்பங்களில், ஒரு தலைமுறை வளர்த்த போன்சாயை அடுத்த தலைமுறை பராமரிக்கும் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது.
போன்சாயில் பல வடிவங்கள் உள்ளன. Chokkan (Formal Upright) – நேராக வளரும் மரம், Moyogi (Informal Upright) – இயற்கையாக வளைந்த மரம், Kengai (Cascade) – மலையிலிருந்து கீழே தொங்கும் மரம்,
Han-Kengai (Semi-Cascade) – ஓரளவு கீழிறங்கும் மரம், Bunjingi (Literati) – உயரமான எளிய வடிவம், Fukinagashi (Windswept) – பலத்த காற்றால் சாய்ந்த மரம் போல.

ஒவ்வொரு வடிவமும் இயற்கையின் ஒரு கதையைச் சொல்கிறது.
மரங்களும் பல வகைகள்.
Shohaku (Conifer Bonsai) – Pine, Juniper போன்ற எப்போதும் பசுமையாக இருக்கும் மரங்கள். Zoki (Deciduous Bonsai) – பருவத்திற்கு ஏற்ப மாறும் மரங்கள்.
இதில் Hamamono (Leaf Bonsai), Hanamono (Flowering Bonsai), Mimono (Fruit Bonsai) ஆகிய வகைகள் அடங்கும்.
போன்சாயின் பின்னால் இன்னொரு அழகான ஜப்பானிய தத்துவம் இருக்கிறது. அதுதான் Wabi-Sabi (侘寂). இதற்கு ஒரே ஒரு தமிழ் வார்த்தையில் சரியான பொருள் சொல்ல முடியாது.
எளிமையாகச் சொன்னால், “முழுமையற்றதிலும், பழமையிலும் இருக்கும் இயற்கையான அழகை ஏற்றுக்கொண்டு ரசிப்பது” (Finding beauty in imperfection, age and the natural passage of time) என்பதே Wabi-Sabi.
அதனால்தான் ஒரு சிறந்த போன்சாய் ஒருபோதும் முற்றிலும் சமச்சீராக இருக்காது.
சற்று வளைந்த கிளைகளும், பழைய பட்டைகளும், வெறுமையாக இருக்கும் இடங்களும் கூட குறைகள் அல்ல; அந்த மரத்தின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் அழகான அடையாளங்கள்.
அதேபோல் Shibui (渋い) என்ற இன்னொரு ஜப்பானிய அழகியல் கருத்தும் உள்ளது. (Subtle, Understated Beauty).

முதல் பார்வையில் சாதாரணமாகத் தோன்றும் ஒரு போன்சாய், அதை நிதானமாக ரசித்தால் அதன் உண்மையான அழகு மெதுவாக வெளிப்படும். அதுவே Shibui.
உலகின் மிகவும் பிரபலமான போன்சாய்களில் ஒன்றாக ஜப்பானிய வெள்ளை பைன் (Japanese White Pine) கருதப்படுகிறது.
இந்த மரம் 1625 முதல் தொடர்ந்து வளர்க்கப்பட்டு வருகிறது.
மேலும் ஒரு ஆச்சரியமான வரலாறும் உள்ளது. 1945-ல் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்தபோது, யமாகி (Yamaki) குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு Japanese White Pine Bonsai அந்தப் பேரழிவைத் தாண்டி உயிர் பிழைத்தது.
பல ஆண்டுகள் அந்த உண்மை வெளியில் தெரியாமலேயே இருந்தது.
பின்னர் 1976-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் இருநூறாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்த போன்சாய் U.S. National Bonsai & Penjing Museum-க்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இன்று வரை அது அமைதிக்கும், மீண்டெழும் மன உறுதிக்கும் ஒரு உயிருள்ள அடையாளமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஜப்பானின் கலாச்சாரம் உலகம் முழுவதும் பரவியபோது, போன்சாயும் உலக நாடுகளுக்கு சென்றது.
இன்று 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் போன்சாய் வளர்க்கப்படுகிறது. 26-க்கும் மேற்பட்ட மொழிகளில் அதைப் பற்றிய நூல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பானில் நடைபெறும் Kokufu Bonsai Exhibition உலகின் மிக முக்கியமான போன்சாய் கண்காட்சியாக கருதப்படுகிறது.
அதேபோல் Omiya Bonsai Village மற்றும் Shunka-en Bonsai Garden போன்ற இடங்கள் உலகம் முழுவதிலிருந்தும் வரும் போன்சாய் ஆர்வலர்களின் கனவு இடங்களாக உள்ளன.
போன்சாய் என்பது ஒரு மரம் அல்ல… காலம், பொறுமை, இயற்கை, கலை, தத்துவம் ஆகிய அனைத்தும் ஒன்றாக உயிருடன் வாழும் ஒரு அற்புதமான படைப்பு.
– சங்கீதா