நினைவலையில் ‘மதராசப்பட்டினம்’ – 2
‘ஹிந்து’ நாளிதழில் 1911-ம் வருடம், பிப்ரவரி 3-ம் தேதியில் ஒரு செய்தி காணப்படுகிறது. இதில்தான் முதன்முதலாக மதராசபட்டினத்துச் செய்தியில் ஆகாய விமானம் குறித்துப் பேசப்படுகிறது.
அன்றைக்கு முதல் நாள், பெங்களூரில், பேரன் பியர் டி கேடர்ஸ் (Baron Pierre de Caters) என்பவர் 25,000 பார்வையாளர்களுக்கு முன்னர் விமானத்தில் ஆகாயத்தில் பறந்தார்.
இந்த நிகழ்ச்சி மிஸ் டாசன் என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் மதராசபட்டினத்து மனிதர் ஒருவரும் அதைப் பார்க்க நேர்ந்தது. அவர் பெயர் வில்லிஸ்; அடிசன்ஸ் கம்பெனியைச் சேர்ந்தவர்.
இந்த நிகழ்ச்சியால் தாக்கம் பெற்ற சிலரது முயற்சியால், மதராசபட்டினத்தில் இதே போன்ற நிகழ்ச்சி அதே வருடம் அதே மாதம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதைக் குறித்து ஹிந்து ஒரு செய்தியை பிப்ரவரி 15-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, ஜே. டைக் என்பவர் தனது விமானத்தில் அப்போதைய மதராஸ் கனவான்களுக்கு முன்னிலையில் பறந்தது ஒரு பெரிய அதிசயமாகப் பார்க்கப்பட்டது.
அது பிளெரியாட் (Mr. J Tyck’s Bleriot) என்ற கம்பெனியின் விமானம். அங்கிருந்து வந்திருந்த உதவியாளர்கள் அந்த விமானம் சுமார் இருபது கஜம் முன்னோக்கி ஓடி ஆகாயத்தில் மிதக்க ஆரம்பித்தது.
ஆனால், காற்று சரியாக இல்லாததால் உடனே இறங்கிவிட்டது. மறுநாள் இந்த டைக் என்பவர் டி ஆஞ்சலிஸ் என்ற ஹோட்டலில் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த விருந்தின்போது, சிவகிரி ஜமீந்தார் கலந்துகொண்டார். அப்போது டைக் மறுபடியும் பறந்து காட்டப்போவதாகச் சொன்னார். அதே மாதம் சில நாட்களில் இந்நிகழ்வு நடந்தேறியது. இதையும் ஹிந்து இவ்வாறு குறிப்பிட்டது: (ஹிந்து, பிப்ரவரி 18).
காலையில் நல்ல கூட்டம் நிறைந்திருக்கையில், சுமார் ஏழு மணியளவில் டைக் தனது விமானத்தை ஒட்ட ஆரம்பித்தார். அப்போதைய கவர்னரும் தனது மனைவியுடன் வந்திருந்தார்.
எல்லோருடைய முகங்களிலும் ஆச்சரியமும் ஆவலும் நிறைந்திருக்க, அந்த விமானம் 2400 அடி உயரம்வரை பறந்து திரும்பியது! இது கோட்டையில்தான் நடந்தது. டைக் கவர்னரால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டார்.
அன்றிரவு, சிவகிரி ஜமீந்தார் ஒரு விருந்து, டி ஏஞ்சலீஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார். அன்றைய விமானத்து எஞ்சின், ஏழு சிலிண்டர்களைக் கொண்டதாக இருந்தது.
விமானம் பறப்பதைப் பார்க்க, அன்றைய கவர்னரும் வாரது மனைவியும், (லாலி தம்பதிகள்) அடிசன் கம்பெனியின் ஆரல் ஜான்சன் காரில் வந்தனர்!
டைக்குக்குக் கவர்னர் பதக்கம் அணிவித்தார். இந்தப் பதக்கங்கள் சிவகிரி ஜமீந்தாரால் கொடுக்கப்பட்டது.
ஆகையால் மதராசபட்டினம் ரைட் சகோதரர்கள் தமது கிட்டி ஹாக்கில் பறந்த எட்டு வருடங்களுக்குள் மதராசிலும் விமான அரங்கேற்றம் ஆயிற்று!
- நரசய்யா எழுதிய ‘மதராசபட்டினம்’ நூலிலிருந்து…