என்னதான் நமது நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி இருப்பதாக நாம் சொல்லிக் கொண்டாலும், மத்திய தர வர்க்கத்துக் குடும்பத்தையோ, அடித்தட்டு மக்களின் வாழ்நிலையையோ சற்றே கவனித்துப் பார்த்தால், நாம் உரத்துக் கூறுகிற பொருளாதாரப் புள்ளி விவரங்கள் மங்கலாகத் தெரியும்.
ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி என்று அடுத்தடுத்து நம் நாட்டில் நிகழ்ந்த பொருளாதார மாற்றத்தினால், பெரு வசதிப் படைத்தவர்களைத் தவிர மற்றவர்கள் திணறிப் போனார்கள்.
கொரோனா வெகுவாகப் பரவி தன் பங்கிற்கு பெரும் பாதிப்பை உண்டாக்கி உடல் ரீதியாகப் பலரை அவதிப்படுத்தியது.
ஆக, அடுத்தடுத்து பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு தங்களுடைய உடல்நலமும் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும்போது தான், மத்திய – மாநில அரசுகள் தங்கள் நிதிநிலை அறிக்கையை வாசிக்கிறார்கள்.
வருமானவரி கெடுபிடிகள் முன்பிருந்ததைவிட தற்போது அதிகப்பட்டிருக்கின்றன. ‘பணமில்லாப் பரிவர்த்தனை’ என்பதை ஆரம்பத்தில் வலியுறுத்திய அதே மத்திய அரசுதான் தற்போது, பணமில்லா பரிவர்த்தனையை ஜீபே மூலமாக பணமில்லாப் பரிவர்த்தனையை நிகழ்த்தியவர்களை பாதிக்கும்விதத்தில், கூடுதலான வரிகளை விதிக்கிறது.
உதாரணமாக அண்மையில், கர்நாடகா மாநிலத்தில் ஜீபே மூலமாக அதிகமாகப் பரிவர்த்தனையை மேற்கொண்ட பல வியாபாரிகளுக்கு, சிறு, குறு தொழில் செய்பவர்களுக்குக் கூட வரி விதிக்கப்பட்டதன் விளைவாக அங்குள்ளவர்கள் “ஜீபே அனுப்புவதைவிட நேரடியாக பணத்தைக் கொடுங்கள்” என்று சாதாரண ஆட்டோ ஓட்டுநரிலிருந்து கால் டாக்ஸி ஓட்டுபவர்கள், சிறு கடைக்காரர்கள் என்று அனைவரும் பணமில்லாப் பரிவர்த்தனையிலிருந்து நேரடியான பண பரிவர்த்தனைக்கு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில், இம்மாதிரியான பணமில்லா பரிவர்த்தனைக்கு வரி விதிக்கப்பட்டிருப்பதையடுத்து தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் பொதுவெளியில், “ஜீபே அனுப்புவதைவிட பணமாக கொடுங்கள்” என்கின்ற குரல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன.
நல்லவேளையாக தமிழ்நாடு அரசு இன்னும் அப்படிப்பட்ட வரி செலுத்துகிற முறையை கட்டாயப்படுத்தி அமலாக்கவில்லை. மாறாக, சமீபத்தில் கிராமப்புறங்களில் இருக்கும் சிறு மளிகைக் கடைகள், டீ கடைகள் என்று யார் என்ன தொழிலோ, வணிகமோ மேற்கொண்டாலும் அவர்கள் அதற்கு முறையான லைசென்ஸை எடுத்தாக வேண்டும் என்கிற கெடுபிடியான உத்தரவைப் பிறப்பத்திருக்கிறது.
வியாபாரிகள் சங்கம் சார்பில் இதற்கான எதிர்ப்புக் குரல்கள் இதுவரை இங்கு எழவில்லை. ஏற்கனவே, நகர்ப்புறத்தில் உள்ள டீ கடைகள், மளிகைக் கடைகளுக்கெல்லாம் லைசன்ஸ் முறையைக் கொண்டுவந்து, மாநகரட்சிகளுக்கான நிதி ஆதாரம் பெருக்கப்பட்டது.
தற்போது, அதே முறையை கிராமங்கள் வரை அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.
ஏற்கனவே, மத்திய அரசு விதிக்கிற ஜிஎஸ்டி வரி என்று பல்வேறு விதமான பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வரும் சிறு வியாபாரிகள் மற்றும் சிறு குறு தொழில்களைச் செய்யும் சாதாரண பொதுமக்கள் மீது தற்போது மாநில அரசு விதித்திருக்கும் கூடுதலான லைசென்ஸ் முறையும் அமலுக்கு வந்தால், அவர்கள் எத்தனை சுமைகளைத்தான் தாங்க முடியும்?
– யூகி