மாறும் கூட்டணி பேரங்கள்!

இதுவரை நடந்த தேர்தல்களில் எப்படிப்பட்ட கூட்டணிகள் அமைந்ததோ இல்லையோ, இனிவரும் தேர்தல் அது உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி, இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி என்ன மாதிரியான கூட்டணி அமையப்போகிறது என்பதில், சில குழப்பங்கள் நீடிக்கின்றன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக கூடுதல் எண்ணிக்கையுடன் ஜெயித்த பிறகு பல கூட்டணிகளிலிருந்து கூட்டணிக் கட்சிகள் ஸ்பேர் ஸ்பார்ட்சை போல கழற ஆரம்பித்துவிட்டன.

திமுக கூட்டணியிலிருந்து பொதுவுடமைக் கட்சிகள் முதலில் இடம்பெயர்ந்து தவெகவிற்கு ஆதரவளித்தன.

தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அதைத் தொடர்ந்து தாமதமாக விடுதலைச் சிறுத்தைகளும் தவெக அணியில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கின்றன.

இதனிடையே, மதிமுகவில் புதுக் குழப்பம் உருவாகி கட்சி தவெகவை ஆதரித்து முடிவெடுக்க, மதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா பண்ண முடியாது என்று அறிவித்திருக்கிறார்கள்.

அதிமுக கூட்டணியிலிருந்த சிலர் ராஜினாமா செய்தும் சிலர் ராஜினாமா செய்யலாமா என்று யோசித்தபடியும் திரிசங்கு நிலையில் இருக்கிறார்கள்.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த ஜான் பாண்டியன் போன்றோர், அதையொட்டி விலகியிருக்கிறார்கள்.

பாமகவில் மருத்துவர் ராமதாசும், அன்புமணி ராமதாசும் இணைந்து ஒன்றான பிறகு அவர்கள் தரப்பில் உள்ள 4 எம்எல்ஏக்கள் எப்போது வேண்டுமானாலும், தவெக ஆட்சிக்கு ஆதரவு தந்து, அமைச்சரவையிலும் பங்கேற்கலாம் என்கிற மாதிரி செய்திகள் ஒருபுறம் கசிகின்றன அல்லது கசிய விடப்படுகின்றன.

அப்படி ஒரு நிலை உருவானால், தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்கின்ற குழப்பம் இப்போதே தொல்.திருமாவளவனின் பேச்சில் தெரிய ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் மனித நேயக் கட்சி போன்றவையும் தங்களுடைய நிலைப்பாடு குறித்து யோசிக்க ஆரம்பித்துவிட்டது.

கடந்த தேர்தலுக்கு முன்பு கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதிலும் சிக்கல் இருந்தது.

குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டன.

அண்ணா அறிவாலயம் வாசலிலேயே சிலர் மயங்கி விழுந்ததெல்லாம் நடந்தது.

திமுக தனது கூட்டணியில் அங்கம் வகிக்க வந்தக் கட்சிகளை அவர்களுடைய சொந்த சின்னத்தில், போட்டியிட விடாமல் தங்களுடைய சின்னத்தில் போட்டியிட வைத்ததுதான் பல கட்சிகளின் மனப்புழுக்கத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

தேர்தலுக்கு முன்பே இந்த அழுத்தத்தை உணர்ந்த கமல்ஹாசனை மக்கள் நீதி மய்யம் தேர்தலுக்கு முன்பே தெளிவடைந்ததைப் போல தேர்தலுக்கு முன்பே ஒதுங்கிவிட்டது.

திமுக வலியுறுத்தியபடி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கப்பட்ட கட்சிகள் தற்போது யோசித்துக் கொண்டிருக்கின்றன. 

இப்போதிருக்கிற நிலையில், இனி எந்தக் கூட்டணியிலும் அந்தந்தக் கட்சிகள் தனது சொந்த சின்னத்திலேயே போட்டியிட விரும்பும். அதோடு கூட்டணி ஆட்சியிலும் பங்கேற்க விரும்பும்.

இதற்கு ஒப்புக் கொள்ளும் கட்சிகளுடன் மட்டும்தான் இனி கூட்டணி பேரம் எடுபடும். இதுதான் தற்போதுள்ள கூட்டணி நிலவரம்.

அந்த விசயத்தில் தற்போது தவெக தான் அதிகபட்சமான கூட்டணி பேரங்களுக்கான சாத்தியத்துடன் இருந்து கொண்டிருக்கிறது என்பதுதான் எதார்த்தம்.

– மணா

You might also like