உலக சினிமாவில் பெண் இயக்குநர்களின் பங்களிப்பு குறைவே என்றாலும் தங்களின் தன்னிகரில்லா படைப்பாற்றலால் ஆழத்தடம் பதித்து அனைவரையும் உற்றுநோக்க வைத்தவர்கள்.
சமூக அவலங்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளை காட்சி பதிவுகளாக்கி கண்முன்னே உலவ விட்டு உலகின் கவனத்தை ஈர்த்த ஒரு சிலரின் கலை பயணத்தைப் பார்ப்போம்.
தீபா மேத்தா
இந்திய இயக்குனரான தீபா, பஞ்ச பூதங்களில் முக்கியமான நீர், நிலம், நெருப்பு போன்றவற்றை மையமாக வைத்து Elements Triology எனப்படும் மூன்று வெவ்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் சினிமாக்களை இயக்கியதால் உலகின் கவனத்தை ஈர்த்தவர்.
சமூகம் பேச தயங்கும் விஷயங்களை கதை களமாக அமைத்து சினிமாக்களை உருவாக்குவது இவரின் தனிப் பெரும் திறமை.
ஃபயர் திரைப்படம் ஓரினச் சேர்க்கையை பற்றி பேசியதால் சர்ச்சைக்கு உள்ளானது.
பாப்சி சித்வா என்பவர் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட வாட்டர் திரைப்படம் இளம் வயதில் விதவையான ஒரு பெண், முதிய விதவைகள் வாழும் இல்லத்தில் வாழ்நாள் முழுக்க வசிக்க வைக்க முற்படும் சமூகத்தை பற்றி காட்டமாக பேசியது.
சில அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு திரையிடப்பட்ட இடங்களில் மிரட்டல்கள் விடப்பட்டன. ஆனாலும் படம் உலகம் முழுவதும் பல விருதுகளை குவித்தது.
1998 ஆம் ஆண்டு இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது இவரின் Earth திரைப்படம்.
இது, 1947-இல் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
சோபியா கப்போலா
The God father படத்தின் இயக்குநரின் மகளான சோபியாவின் இரண்டாவது படம் Lost in Translation. 2003இல் வெளிவந்து பலத்த வரவேற்பைப் பெற்றது.
பெரும் வசூலை வாரிக் குவித்த இந்தத் திரைப்படம், சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த திரைக்கதை பிரிவில் ஆஸ்கர் விருது பட்டியலில் பரிந்துரை செய்யப்பட்டது.
முதன்முதலாக சிறந்த இயக்குநருக்கான பிரிவில் ஒரு பெண் இயக்குநர் பரிந்துரைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இயக்கத்துக்கான விருது கிடைக்காவிட்டாலும் சிறந்த திரைக்கதை பிரிவில் விருதை வாங்கிப் பெருமை பெற்றார் சோபியா.
மீரா நாயர்
பத்மபூஷன் விருது பெற்ற இந்தியப் பெண் இயக்குநரான மீரா, மும்பை மாநகரின் அழுக்கு பக்கங்களைப் படம் பிடித்து காட்டியவர்.
இவரின் Salam Bombay திரைப்படம் மும்பையில் வாழும் சாலையோர சிறுவர்களைப் பற்றியதாகும்.
உலகத் திரைப்பட விழாக்களில் இந்தியாவின் மீது கவனம் திரும்பக் காரணமாக அமைந்தது இந்தத் திரைப்படம்.
Kamasutra, A tale of love, Monsoon wedding, Name sake, Vanity fair போன்ற முக்கிய படங்களை இயக்கிய இவர், சமூக அக்கறை கொண்ட பெண் இயக்குனராக அறியப்படுகிறார்.
சமீரா மக்மல்பப்
ஈரானிய சினிமாவின் முக்கிய இயக்குனராக திகழ்ந்தவரின் மகளான சமீரா, தனது எட்டாவது வயதில் அப்பாவின் புகழ்பெற்ற படமான The Cyclist – ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
தனது 17 வது வயதில் The Apple என்ற படத்தை இயக்கினார்.
ஈரானில் தன் பெற்றோர்களால் 11 வருடங்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு பின்பு பக்கத்து வீட்டினரின் உதவியால் மீட்கப்பட்ட இரண்டு சிறுமிகளின் கதை இது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகின் இளம் இயக்குநர் இயக்கிய படம் என்கிற பிரிவில் 1998 ஆம் ஆண்டில் இந்தப் படம் தேர்வானது.
அதோடு, இரண்டே ஆண்டுகளில் நூற்றுக்கும் அதிகமான உலக திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்று தந்தது இந்த திரைப்படம்.
Blackboards, September 11, At 5 in the afternoon, என பெண் கல்வியையும் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களையும் களமாக கொண்ட படங்களை தொடர்ந்து இயக்கினார்.
2008 ஆம் ஆண்டில் வெளியான Two legged horses என்ற படத்திற்குப் பிறகு எந்த புதிய படைப்பையும் இவர் இயக்கவில்லை.
ஈரானில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக 2011-ம் ஆண்டு முதல் லண்டனில் வசித்து வரும் இவர் நாடு கடத்தப்பட்ட வாழ்க்கை முறையால் திரைப்படங்களை இயக்குவதில் இருந்து விலகியுள்ளார்.
கத்ரின் பீகலோ
2008 ஆம் ஆண்டில் வெளியான கத்ரின் இயக்கிய The Hurt Locker படம் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் 42 உயரிய விருதுகளைக் குவித்தது.
அமெரிக்க பாம் ஸ்குவாட் ஈராக்கில் புதைத்து வைக்கப்பட்ட கன்னிவெடிகளை அழித்து ஒழிக்கும் சம்பவங்களின் கோர்வையான இத்திரைப்படம்
வித்தியாசமான திரைக்கதை யுக்தியால், பணியில் இருக்கும் வீரர்களின் நுண்ணுணர்வை எடுத்துச் சொல்லி இந்த விருதினை வென்றது.
2001 செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல் சம்பவம் தொடங்கி பாகிஸ்தானின் அபோடாபாத்தில் மே 2, 2011 -ல் ஒசாமா பின் லேடனை சுற்றி வளைத்து சுடப்பட்டது வரை
அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறையின் பணிகளை கேண்டிட் கேமரா பாணியில் விவரித்திருந்தது இவருடைய இன்னொரு திரைப்படமான Zero Dark Thirty.
கற்பனைக்கு எட்டாத உழைப்போடு உருவாக்கப்பட்ட இந்தப் படம், கடும் விமர்சனத்திற்கும் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டது.
அந்த அளவிற்கு தத்ரூபமாக பின்லேடன் வேட்டையைப் படமாக்கி இருந்தார் கத்ரின்.
– S. வாணி