சர்வதேசக் கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் சாதனை!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதன் முதலாவது போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றது. வெற்றியைத் தீர்மாணிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி செஸ்டர்- லீ- ஸ்டிரீட்டில் நேற்று நடைபெற்றது.

இதில், 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இந்த ஆட்டத்தில் தனது 7-வது சதத்தை பூர்த்தி செய்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 102 ரன்கள் எடுத்தார்.

முன்னதாக 34 ரன்கள் எடுத்த போது, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை கடந்த 17-வது வீராங்கனை என்ற சிறப்பை ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார்.

இந்திய அளவில் மிதாலிராஜ், மந்தனா ஆகியோருக்குப் பிறகு இந்த சாதனையைக் கடந்தவர் ஹர்மன்பிரீத் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு
‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருது வழங்கப்பட்டது.

You might also like