வாசகரின் கேள்வி: சொந்த ஊரை விட்டு வெளியூரில் குடியேற விரும்பாத நீங்கள் சென்னையில் பிறந்திருந்தால் இன்னும் எவ்வளவோ உயரங்களை தொட்டிருப்பீர்கள். அது பற்றி என்றாவது வருத்தப்பட்டது உண்டா?
(அ.பேச்சியப்பன், இராசபாளையம்)
எழுத்தாளர் ராஜேஷ்குமார் பதில்:
சிறிது கூட வருத்தப்பட்டதில்லை. ஏனென்றால் திறமை எங்கே இருந்தாலும் சரி வாய்ப்புகள் அங்கே தேடி வரும் என்று நான் நினைத்ததுதான் காரணம்.
மறைந்த இயக்குநர் பாக்யராஜ் அவர்கள் என்னை கோவையில் சந்திக்கும் போதெல்லாம் தவறாமல் சொல்லும் வார்த்தை இது.
“என்னங்க நீங்க? இங்கே உக்காந்துட்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க? சென்னைக்கு வாங்க. அங்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. உங்களுக்கு இப்ப இருக்கிற பேரும் புகழைக் காட்டிலும் நாலு மடங்கு கிடைக்கும்.
உங்க கிட்ட நிறைய கதைகள் இருக்கு. அதை பயன்படுத்தக்கூடிய இயக்குனர்கள் அங்கே இருக்காங்க. நீங்க இங்கேயும் அவங்க அங்கேயும் இருந்தா நீங்க எப்படி சாதிக்க முடியும் என்று கேட்டு கோபப்படுவார்.
நான் சிரித்துக்கொண்டே “பார்க்கலாங்க” என்று சொல்லிவிடுவேன்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு பாக்யராஜ் அவர்கள் என்னை சந்தித்த பொழுது விரக்தியான குரலில்,
“நீங்க நம்ம ஊர்லயே இருங்க. அங்கே வராதீங்க. வந்தீங்கன்னா இங்க கிடைக்கிற நிம்மதி அங்கே கிடைக்காது. நிறைய பிரச்சனைகள் வருது.
அதை எல்லாம் உங்களால எதிர்கொள்ள முடியாது. இங்கயே இருங்க. தேவைப்பட்டா தேடப்படுவீங்க.” என்று சொன்னார்.
பாக்யராஜ் மட்டுமல்ல, சென்னைக்கு வந்து என்னைச் செட்டிலாகச் சொன்னவர்கள் எல்லாம், “இன்றைக்கு நீங்க உங்க ஊர்லயே இருந்துகிட்டு உங்க வேலையைப் பாருங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரைக்கும் இருக்கிற இந்தப் பேரும் புகழுமே எனக்குப்போதும். இது தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வரும் என்று நினைக்கின்றேன்.
இந்தக் கோவை, இந்த சீதோஷ்ண குளிர்ச்சி, சிறுவாணித் தண்ணீர், மக்களின் மரியாதை, இந்த மண்ணுக்கே உரித்தான உணவு இவையே சொர்க்கம் என்று நினைக்கின்றேன்.
– நன்றி: எழுத்தாளர் ராஜேஷ்குமார் முகநூல் பதிவு