ஆலய வழிபாடு அனைவருக்குமானது!

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள ஶ்ரீவேத மாரியம்மன் கோவிலின் தேர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் வருவதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி, அந்த கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் தேர் வருவதை உறுதி செய்ய ஆட்சியர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், குறிப்பிட்ட தெருவுக்குள் தேர் செல்ல முடியுமா? சாலையின் அகலம், தேரின் நீள, அகலம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், குறிப்பிட்ட தெருக்களில், எந்த இடையூறும் இல்லாமல் தேர் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, கோவிலில் திருவிழா நடக்கும்போது, பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களின் வழியே தேர் செல்ல வேண்டும் என்றும், அதற்கு தேவையான பாதுகாப்பைக் காவல்துறையினர் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதோடு, கோயில் விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அதிகாரிகள் கட்டப்பஞ்சாயத்து நடத்தினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெய்வங்கள் வழிபடும் இடத்திற்கு அனைத்து தரப்பினரையும் எந்த பாரபட்சமுமின்றி அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

You might also like