விஜய் தலைமையிலான தவெக அரசு தமிழகத்தில் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்” மற்றும் “ஒரு புதிய தொடக்கம்” என்ற காலப்பேழை புத்தகத்தை முதலமைச்சர் விஜய் இன்று (17.08.2026) தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.
இந்த சாதனை மலரில், அரசின் 100 நாள் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், துறைவாரியான சாதனைகள், முதலமைச்சரின் கள ஆய்வுப் பணிகள், துறை ஆய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
“ஒரு புதிய தொடக்கம்” என்ற காலப்பேழை புத்தகத்தில் முதலமைச்சர் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசு மேற்கொண்ட மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து, தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டு முதலமைச்சர் விஜய் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.
அதில், “100 நாள் ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி”என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு. அ.அருண் தம்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
– வைஷ்ணவி பாலு