பீகார் தேர்தல் குளறுபடி: தமிழகத்திலும் பிரதிபலிக்குமா?

பீகார், மேற்குவங்கம் என்று இரு மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடக்க இருக்கின்றன.

பீகாரில் வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்கின்ற செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், இன்னமும் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில் பீகார் தேர்தலைப் பொருத்தவரை சில விஷயங்கள் கவனத்திற்கு வந்திருக்கின்றன.

முதலாவதாக பீகாரை ஆளும் நிதிஷ்குமார் தான் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவு தருகிற முக்கியக் கட்சித் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.

ஏற்கனவே பலமுறை பீகாரில் அவர் முதல்வராக இருந்தும், அந்த மாநிலத்தைப் பொருளாதார ரீதியாக முன்னேற்ற அவரால் முடியவில்லை. வேலை இல்லாத் திண்டாட்டமும், பொருளாதார வறுமையும் பீகாரிலிருந்து பல லட்சக்கணக்கான இளைஞர்களை வெளி மாநிலங்களை நோக்கி வேலைக்குப் படையெடுக்க வைக்கிறது.

அப்படி தமிழகத்திற்கு வேலை தேடி வந்த வட மாநிலத்தவர்களில் பீகாரைச் சேர்ந்த இளைஞர்களின் பங்கும் அதிகம் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

இந்தச் சமயத்தில் பீகாரில் நடக்க இருக்கும் தேர்தலையொட்டி இரண்டு விஷயங்களைச் சொல்ல வேண்டும். முதலாவது அங்கு ஈவிஎம் இயந்திரம் மீது அங்குள்ள சில கட்சிகள் நம்பிக்கை இழக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

அதாவது வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாக இல்லாமல், வாக்குச்சீட்டு மூலமாக தேர்தலை நடத்த வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் அங்கு வலுப்பட்டிருக்கின்றன.

இரண்டாவதாக வாக்காளர்கள் கணக்கெடுப்பில் கடந்தத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களின் பெயர்கள் திட்டமிட்டு வாக்காளர்கள் பட்டியலிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் பரவலான புகார் எழுந்திருக்கிறது.

அதோடு வாக்காளர்கள் பலர் புலம்பெயர்ந்து மற்ற மாநிலங்களுக்கு சென்றிருப்பதால், அவர்கள் குறித்து என்ன முடிவெடுப்பது என்கின்ற குழப்பநிலையும் அங்கு நிலவுகிறது.

ராகுல் காந்தி உட்பட பலர், வாக்காளர்கள் விஷயத்தில் நடந்துவரும் ஆரம்பகட்ட முறைகேடுகளைப் பற்றி வெளிப்படையாக குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதெல்லாம் பீகாரைப் பற்றி, பீகாரில் நடக்க இருக்கும் தேர்தலைப் பற்றி தான் என்று நாம் ஒதுங்க வேண்டியதில்லை.

இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடக்க இருக்கிற தேர்தலிலும் எந்த அளவில் பிரதிபலிக்க வாய்ப்பிருக்கிறது என்பதையும் இங்கு பார்த்தாக வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வட மாநிலத்திலிருந்து வரும் வேலை தேடி வரும் இளைஞர்களின் எண்ணிக்கை, லட்சக்கணக்கிலிருந்து தற்போது ஒன்னேகால் கோடிக்கு மேல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தரும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

உண்மையிலேயே, தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு வடமாநில இளைஞர்களின் பங்கு அதிகரித்திருக்கிறது என்பதைப் பற்றிய சரியான நம்பகமான புள்ளிவிவரங்கள் அரசு தரப்பில் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

தோராயமாக தமிழ்நாட்டில் பீகார், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், நாகாலாந்து வரை பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து வெவ்வேறு வேலைகளில் பங்கேற்றிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை ஒன்னேகால் கோடி என்று எடுத்துக் கொண்டால், அவர்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல் என்பதை முன்னிறுத்தி வரும் பாஜக அரசு, நாடு முழுக்க ஆதார் அட்டை யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள் அந்தந்த மாநிலத்தில் வாக்களித்துக் கொள்ளலாம் என்கிற உரிமையை தேர்தல் ஆணையம் மூலம் வலியுறுத்தி, அதை அமல்படுத்திவிட்டால் தமிழ்நாட்டின் நிலை என்ன?

இன்னும் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடத்துவதற்கு 8 மாத கால அவகாசம் இருக்கிறது. தற்போதே தினமும் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் வந்திறங்கும் வடமாநில இளைஞர்கள் பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வமற்று சேகரிக்கும் பணிகள் துவங்கிவிட்டன. அவர்களை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் சென்னை துவங்கி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் வரை நீக்கமர  பரவி இருக்கிறார்கள் வடமாநில தொழிலாளர்கள். தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் வெவ்வேறு அரசு பணிகளை செய்யக்கூடிய தொழிலாளர்களாகவும் அவர்கள் தான் இருக்கிறார்கள். இதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் பங்கு மிக மிகக் குறைவு.

அதோடு இங்கு கட்டுமானத் தொழில்கள் துவங்கி ஹோட்டல்கள், சலோன்கள் ஏன் டீ கடைகள் வரை வட மாநிலத்தவர்களின் பங்கு அதிகபட்டிருக்கிற நிலையில் அவர்களுக்கு ஒரே ரேஷன் கார்டு ஒரே வாக்காளர் அட்டை என்கின்ற மத்திய அரசின் “ஒரே“ முடிவு அமல்படுத்தப்பட்டால் அந்த அதிகப்படியான எண்ணிக்கையில் வெவ்வேறு பகுதிகளில் குடியிருக்கும் வடமாநிலத்தவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்?

அவர்கள் பெரும்பாலானவர்கள் ஹிந்தி பேசக்கூடியவர்கள் அல்லது ஹிந்தியைத் தெரிந்தவர்கள், ஹிந்தி மொழியை அறிந்தவர்கள் என்பதால் பெரும்பாலும் வடமாநில ஆதிக்கத்தை முன்னிறுத்தக்கூடிய பாஜகவுக்கு அவர்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்பும் கூடுதலாகவே இருக்கிறது.

தேர்தல் ஆணையத்தை தனது இஷ்டத்திற்கு பயன்படுத்துவது, தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில், தற்போது மத்திய அரசின் ஒரு பகுதி நேர வேலை ஆகி விடுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள வட மாநிலத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டால், அவர்கள் யாரை தங்கள் பிரதிநிதியாக கருதுவார்கள்? யாரைத் தேர்ந்தெடுப்பார்கள்? என்கிற கேள்விகள் தமிழகத்தின் அரசியல் சூழலையே மாற்றிவிடும் என்பதை இங்குள்ள கட்சிகள் இதுவரை சரிவர உணர்ந்ததாக தெரியவில்லை.

தற்போது நடக்கும் எந்தத் தேர்தலிலும் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமான வாக்குசதவீத வித்தியாசம் என்பது மிகக் குறைந்த அளவில்தான் இருந்துவருகிறது.

தற்போது ஒரே தேர்தல் அட்டை என்பது ஒரு வேளை தேர்தல் ஆணையம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அப்படிப்பட்ட சூழல் எழும்பட்சத்தில் பீகாரில் தற்போது எழுந்து கொண்டிருக்கிற இதே மாதிரியான பிரச்சனைகள் தமிழகத்திலும் எழ வாய்ப்பிருக்கிறது.

தமிழகத்து வாக்காளர்களுக்கென்று இதுவரை கிடைத்து வந்த தனித்துவமான அடையாளங்களை இனி அவர்கள் இழக்க நேரிடலாம். வாக்காளர் எண்ணிக்கையும் சட்டென்று அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இதுபற்றி எந்த விவாதமோ இது வரை தமிழகத்தில் உள்ள எந்த இயக்கங்களிலும் நடக்கவில்லை, தொலைக்காட்சிகள் விவாதிக்கவில்லை, ஊடகங்கள் இதுகுறித்து பேசவில்லை.

ஆனால், பீகாரில் தற்போது நடந்து வரும் வாக்காளர்கள் சம்பந்தமான குளறுபடிகள், தமிழ்நாட்டில் நடக்காமல் இருப்பதற்கு, தகுந்த ஏற்பாடுகளை கூடுதலான ஒற்றுமையை இங்கு காண முடிகிறதா? என்பதுதான் கேள்வி.

– யூகி

You might also like