2026-ம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடந்து முடிவுகள் வெளிவரும் என்பது ஒருபுறம் இருந்தாலும், இப்போதே வெவ்வேறு காட்சி ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் ‘சட்டமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்?’ என்கிற ஆரூடங்கள் துவங்கி விட்டன.
தொலைக்காட்சிகளில் விவாதிக்கிறார்கள், சமூக வலைத்தளங்களில் காரசாரமாக சண்டையிடுகிறார்கள், அச்சு ஊடகங்களிலும் அதற்கான புகைச்சல் தெரிகிறது.
இந்த நிலையில் ஊடகவியலாளரான ரங்கராஜ் பாண்டே நடத்தும் ‘சாணக்யா’ வலையொளியில் சட்டமன்றத் தேர்தல் குறித்த ஒரு சர்வே முதலில் வெளிவந்தது.
அதில், திமுக கூட்டணியைவிட அதிமுக-பாஜக கூட்டணிக்கான வாய்ப்புகள் அதிகபட்டிருக்கின்றன என்பதை உணர்த்தியது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கான செல்வாக்கும் அதிகரித்து வருவதாக, அந்த சர்வே உணர்த்தியது.
தற்போதைய நிலையில் ‘சத்தியம்’ தொலைக்காட்சி சட்டமன்றத் தேர்தலுக்கான சர்வே முடிவை நேற்று அறிவித்தது.
தமிழகம் முழுக்க 20 நாட்கள் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தத் தேர்தல் கருத்துக் கணிப்பில் பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அதன் முடிவுகள் இப்படி இருக்கும் என்று ஒரு கணிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
அதன்படி சில மண்டலங்களில் திமுக கூட்டணிக்கான வாய்ப்பு அதிகப்பட்டிருக்கிறது. குறிப்பாக தென்மண்டலத்தில் அதிமுகவுக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக, அதே சர்வே உணர்த்துகிறது.
‘யார் முதல்வராக வாய்ப்பு இருக்கிறது?’ என்கின்ற கேள்விக்கு ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி அநேகரும் வாக்களித்த நிலையில், அதற்கு மிக அருகில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அதேமாதிரிதான் திமுக கூட்டணிக்கான வாய்ப்பு அதிகம் இருக்கலாம் என்று சொல்லப்பட்ட நிலையில், அதற்கு மிக அருகில் அதிமுக கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்கிறது இந்த சர்வே முடிவு.
அந்த சர்வே முடிவில் தெரியும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், நடிகர் விஜய்யின் தவெகவுக்கு கிடைத்திருக்கிற ஒரு அங்கீகாரம் ஆச்சர்யம் அளிக்கும் விதத்தில் இருக்கிறது.
திமுக, அதிமுகவிற்கு அடுத்து அதிகப்படியான வாக்குகளைப் பெறக்கூடிய விதத்தில், விஜய் இருப்பதாக தெரிவிக்கிறது அந்த சர்வே.
ஒருவேளை அதிமுக-பாஜக கூட்டணியும் தவெகவும் இணைந்தால், அதற்கான வெற்றி உறுதி என்பதையும் அந்த சர்வேயின் நிறைவு பகுதியில் தெரிவித்திருக்கிறார்கள்.
அப்படி இல்லாமல் விஜய் தனித்து நின்றால் அவரால் வெற்றிபெற முடியாது என்பதையும் உணர்த்தியிருக்கிறவர்கள், ஒருவேளை, பாஜக தவிர்த்த அதிமுகவும், தவெகவும் இதரக் கட்சிகளும் ஒருங்கிணைந்தால் வெற்றி வாய்ப்பு பெறவும் வாய்ப்பிருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறார்கள் சர்வே எடுத்தவர்கள்.
ஆக, 2026-ல் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் எதையும் தீர்மானிக்கும் ஒரு சக்தியாக தவெக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிற இந்த சர்வே முடிவுகள். கடைசி கட்டப் பிரச்சாரத்தின் மூலம் சற்றே மாறவும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் உணர்த்தியிருக்கிறது.
சர்வே உணர்த்தியிருப்பதெல்லாம் சரி, வாக்காளர்கள் என்ன உணர்த்தப் போகிறார்கள்?
– யூகி