சூடாகிக் கொண்டே போகும் தொலைக்காட்சி விவாதங்கள்!

தேர்தல் பக்கங்கள்:

தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அறிவிக்கப்பட்ட மாதிரியான சுறுசுறுப்புடன் நமது தொலைக்காட்சிகளில் விவாதங்கள் சூடு பிடித்திருக்கின்றன. சூடு என்றால் பார்ப்பவர்களுக்கு பிரஷர் ஏத்துற மாதிரியான சூடு.

ஆறு, ஏழு சேனல்களில் தொலைக்காட்சி விவாதங்கள் வந்தாலும், பல்வேறு நெறியாளர்கள் ஆற்றுப்படுத்தி அதை நடத்தினாலும் சமீபகாலமாக தொலைக்காட்சி விவாதங்கள் என்றாலே ஒரே இரைச்சல் மயமாக மாறிவிட்டது.

நீ, வா, போ என்று உரிமையுடன் எதிரே பேசிக் கொண்டிருந்தவரை அழைத்தவர்கள், இப்போது “டேய்“ என்று விவாதிக்கிற அளவுக்கு நெருக்கமாகி விட்டார்கள்.

ஒருவர் பேசும்போது மூன்று பேரும் ஒரே நேரத்தில் கத்துகிறார்கள்.

தொலைக்காட்சிக்கு முன்னால் அமர்ந்து, பார்ப்பவர் காதுகளை அடைத்துக் கொள்ளும் அளவுக்கு, ‘விவாதம்’ என்கிற பெயரில் கடுமையான வார்த்தைகள் பரிமாறப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக, திருப்பரங்குன்றம் தீபப் பிரச்சனையில் துவங்கி, ஜனநாயகன் படம் ரிலீஸ் வரை பலரும் போட்டி போட்டுக் கத்துகிறார்கள்.

அவர்கள் கத்துவதை ஒழுங்குபடுத்த வேண்டிய நெறியாளரோ பரிதாபமான நிலையில் அமர்ந்திருக்க வேண்டியிருக்கிறது.

இந்த விதமான விவாதங்களில் நிஜமாகவே புள்ளிவிவரங்களோடு வந்து, முறைப்படி கத்தாமல் பேசுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது.

பேசுபவர்கள் இதே ரீதியில் பேசிக்கொண்டு போனால், அது ட்ராயின் (TRAI) கண்காணிப்பில் போய் முடியும் என்பதை தொலைக்காட்சி நிறுவனங்களும் உணர வேண்டும்.

பேசுகிறவர்களும் லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு முன்னால் தாங்கள் பேசுகிறோம் என்பதை உணர்ந்து, அதற்கேற்ற தரத்துடன் பேச வேண்டும். தங்களையும் அதற்கேற்றபடி தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வெறுமனே கத்துவதே விவாதம் என்றானால், இவர்கள் மைக்குக்கும், காலர்மைக்கும் முன்னால் சண்டையிட வேண்டியதில்லை. தெருக் குழாய் ஓரத்திலேயே சண்டையிட்டுக் கொள்ளலாம்.

இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துகிற நெறியாளர்களுக்கு பிரஷர் ஏறலாம். தண்ணீரும் குடிக்கலாம்.

அதே சமயம் இம்மாதிரியான கத்தல் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு பிரஷர் ஏறி ஏதாவது எசக்கு பிசக்காக நடந்தால், அதற்கு யார் தான் பொறுப்பேற்பது?

– யூகி 

 
 
You might also like