மு.க.முத்து: கலைஞரின் ‘பிள்ளையோ பிள்ளை’!

கலைஞர் கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதிக்கு பிறந்த மூத்த மகன் தான் மு.க.முத்து.

மு.க.முத்துவின் தயாரான பத்மாவதி பிரபல பாடகரான சிதம்பரம் ஜெயராமனின் சொந்த தங்கை.

சிதம்பரம் ஜெயராமனுக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் ஒரே சமயத்தில் திருவாரூரில் திருமணம் நடந்தபோது அதை தலைமைத் தாங்கி நடத்தி வைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.

சிதம்பரம் ஜெயராமனின் சொந்த அக்கா மகளைத்தான் கல்யாணம் செய்திருக்கிறார் மு.க.முத்து.

ஆரம்பத்திலிருந்தே பாடுவதில் தேர்ச்சி பெற்றிருந்த மு.க.முத்து, திமுக சார்ந்த நாடகங்களில், திமுக மேடைகளில் பிரச்சார பாடல்களைப் பாடி இருக்கிறார். அதற்கேற்ற குரல் வளம் அவருக்கு இருந்தது.

பிறகு அவர் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்த முதல் படம், ‘பிள்ளையோ பிள்ளை’. அந்தப் படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் போன்ற தோற்றத்திலும், அவரைப் போலவே பாவனைக் காட்டியும் நடித்திருப்பார் மு.க.முத்து.

அதைத் தொடர்ந்து ‘சமையல்காரன்’ என வெவ்வேறு படங்களில் நடித்திருக்கிற மு.க.முத்துவுடன் ஜோடி சேர்ந்து நடிகை நிர்மலாவும், லட்சுமியும் நடித்திருக்கிறார்கள். சமையல்காரன் படத்தில் அவருடன் கூடவே நடித்தவர், அப்போது சிறையிலிருந்து வெளியே வந்தவரான எம்.ஆர்.ராதா.

அவர் நடித்த படங்களில் அவரே தனது சொந்தக் குரலில் பாடவும் செய்திருக்கிறார். “சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க…” என்று அவர் பாடிய பாடல் அப்போது பிரபலம்.

இதே மு.க.முத்துவுக்கும் தமிழக அரசியலில் என்ன பங்கு இருக்கிறது என்று கேட்டால், அவருடைய பங்கும் இல்லாமல் இல்லை.

எம்ஜிஆருக்கு ரசிகர் மன்றங்கள் இருப்பதைப்போலவே மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ வெளிவந்ததும் மு.க.முத்துவின் பெயரில் தமிழ்நாடு முழுக்க ரசிகர் மன்றங்கள் துவக்கப்பட்டன.

சில இடங்களில் எம்ஜிஆர் மன்றங்களை கலைக்கச் சொல்லி மு.க.முத்துவுக்கான ரசிகர் மன்றங்கள் துவக்கி வைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

விழா ஒன்றில் மு.க.முத்துவை சந்தித்த எம்.ஜி.ஆர், “நீ உனது பாணியில் நடி” என்று சொன்னதாகக் கூட அப்போது ஒரு தகவல் பரவி இருந்தது.

மு.க.முத்துவிற்கு மன்றங்கள் தமிழ்நாடு முழுக்க உருவாக்கப்பட்டதும், எம்.ஜி.ஆர் அதிமுகவைத் துவக்குவதற்கு ஆன பல காரணங்களில் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது.

இப்படிப் பலவற்றில் 80-கள் வரை செய்திகளில் அடிபட்ட மு.க.முத்து, அதன்பிறகு முழுக்க எந்த செய்திகளிலும் அடிபடாமல் விலகியே இருந்தார்.

தனது தந்தையின் பெயரான முத்துவேல் என்பதைத்தான் மகன் முத்துவிற்கும் சூட்டி இருந்தார் கலைஞர் கருணாநிதி. மு.க.முத்து மீது அதிக அன்பு காட்டியவர் மு.க.அழகிரி. 

மு.க.முத்து கடைசி காலத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது 77 வயதில் மறைந்திருக்கிறார்.

– அகில் அரவிந்தன்

#கலைஞர் #கருணாநிதி #பத்மாவதி #முகமுத்து #சிதம்பரம் #ஜெயராமன் #கலைவாணர் #என்எஸ்கிருஷ்ணன் #திமுக #பிள்ளையோபிள்ளை #மக்கள்திலகம் #சமையல்காரன் #எம்ஜிஆர் #அதிமுக #எம்ஆர்ராதா #Kalaignar #Karunanidhi #Padmavathi #MKMuthu #Chidambaram #Jayaraman #Kalaivaanar #NSKrishnan #DMK #PillaiyoPillai #MakkalThilagam #Samayalkaaran #MGR #AIADMK #MRRadha

You might also like