இப்படித்தான் வந்தது விஜய்யின் ‘விசில்’!

தமிழகத்தில் இனி அதிகம் கேட்கக்கூடிய வார்த்தைகளில் ஒன்றாக விசில் இருக்கப் போகிறது.

வார்த்தையாக மட்டுமில்லாமல் விசிலின் ஒலியையும் தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களுக்கு அதிகமாகக் கேட்கப் போகிறோம்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருப்பதே இதற்கு காரணம்.

இந்த சூழலில் விசிலைப் பற்றிய சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொள்வோமா?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருள்தான் விசில்.

பண்டைய நாகரீகத்தைச் சேர்ந்த மக்கள், தகவல்களை பரிமாறவும், மற்றவர்களை எச்சரிக்கை செய்யவும், சடங்கு சம்பிரதாயங்களைச் செய்யவும் விசிலைப் பயன்படுத்தி உள்ளனர்.

ஆரம்ப காலகட்டத்தில் களிமண், எலும்புகள் மற்றும் மரத்துண்டுகளை வைத்து விசில்களை தயாரித்துள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பிற்காலத்தில், அதாவது 19-ம் நூற்றாண்டில் இரும்பு, பித்தளை மற்றும் உலோகங்களை வைத்து விசில்களைத் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இப்போது நாம் பயன்படுத்தும் நவீன விசில் முதல் முறையாக 1878-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஹட்சன் என்பவர் இதைத் தயாரிக்க, நாட்டிங்காம் நகரில் நடந்த கால்பந்து போட்டி ஒன்றை அதன் நடுவர் இந்த விசிலை ஊதி தொடங்கி வைத்துள்ளார்.

அதற்கு முன்பாக நடுவர்கள் தங்கள் கையில் இருக்கும் கைக்குட்டையை ஆட்டித்தான் போட்டிகளைத் தொடங்கிவைத்துள்ளனர்.

1883-ம் ஆண்டுமுதல் லண்டன் நகர போலீஸார் விசிலைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

ராணுவப் படைகள்தான் விசிலை அதிகமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். ராணுவத் தளபதிகள் தங்கள் வீரர்களுக்கு உரத்த குரலில் கட்டளையிட முடியாத காலகட்டங்களில் விசிலைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

ராணுவத்தில் ரேடியோ மற்றும் ஒயர்லெஸ் கருவிகளைக் கண்டுபிடிப்பதற்கு முன் வீரர்களுக்கு பல்வேறு வகையான உத்தரவுகளைப் பிறப்பிக்க விசிலை பல்வேறு முறைகளில் ஊதுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

‘code language’ எனப்படும் ரகசிய சமிக்ஞை மொழியைக் கண்டுபிடிப்பதற்கு முன் ராணுவ வீரர்களுக்கு, அவர்களின் தளபதிகள் பல்வேறு வகைகளில் விசில்களை ஊதி சமிக்ஞை கொடுத்தனர்.

பிற்காலத்தில் வேலை நேரம் தொடங்குவதையும், முடிவதையும் அறிவிக்க, சில இடங்களில் சங்கு ஒலிப்பதற்கு பதிலாக விசிலைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

ரயில்வே துறையிலும் விசிலின் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது.

சமீப காலங்களில் விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைக்கவும் விசிலைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இப்போது நம்மில் பலரும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட விசிலைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறோம். இந்த பிளாஸ்டிக் விசில் முதல் முறையாக 1914-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் பல்வேறு கருவிகளை வைத்து கஷ்டப்பட்டு விசில் தயாரிக்க, எந்த கருவியின் உதவியும் இல்லாமல் நாக்கை மடித்து, அதன் கீழ் விரல்களை வைத்தே விசிலடிப்பதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள் தமிழர்கள்.

ஆக, விசிலடிக்கும் கலையிலும் நம்மை விஞ்ச ஆளில்லை.

– பி.எம். சுதிர் 

You might also like