சாகித்ய அகாடெமி விருதுபெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யுமான சு.வெங்கடேசனின் எழுத்துடனும், ஓவியர் மணியம் செல்வனின் ஓவியத்துடனும் விகடன் பிரசுரத்தில் வெளியான ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல், விற்பனையில் ஒரு லட்சம் பிரதிகளைக் கடந்ததை முன்னிட்டு, விகடன் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் வெற்றிப் பெருவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாவலாசிரியர் சு.வெங்கடேசன், நடிகர் ரஜினிகாந்த், விகடன் குழும நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நடிகை ரோகிணி, நிகழ்ச்சி நெறியாளர் கோபிநாத், இயக்குநர் ஷங்கர், மாநில நிதித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் வேள்பாரி வாசகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சு.வெங்கடேசன், “இந்த விழா ‘வேள்பாரி’ என்ற நூலின் வெற்றி விழா மட்டுமல்ல. ஒரு நவீன கணினி யுகத்தில் திறன்பேசிகளுக்குள் சமூகம் மூழ்கிவிட்டது என்று நம்புகிற ஒரு யுகத்தில், ‘திறன்பேசிகளுக்குள் மூழ்கவில்லை… சரியான ஒரு நூலைக் கொடுத்ததால் கொண்டாடுகிற வாசகர்கள் இத்தனை லட்சம் பேர் இருக்கிறோம்’ என்று உலகத்துக்கு உரக்கச் சொல்லுகின்ற ஒரு விழா.
அறத்தின் விழுமியங்களை மதிப்பவர்கள் யாரும் இல்லை, போற்றுபவர்கள் யாரும் இல்லை, லட்சியவாதமெல்லாம் தகர்ந்து விட்டன என்று பேசிக்கொண்டிருக்கின்ற சூழலில், ‘அறம்தான் தமிழ்ச் சமூகத்தின் ஆற்றலும் உயிரும்’ என்று உலகத்துக்கு உரக்கச் சொல்லுகின்ற ஒரு நாவலைக் கொண்டாடுகிற விழா.
இந்தப் பூமியில் நாம் பார்க்கும் சூரியன், நிலவு, நடக்கின்ற நிலம் மிகப் பழைமையானவை. அதுபோல நாம் பேசுகிற தமிழ் மிகப் பழைமையானது.
இவ்வளவு பழைமையான ஒரு மொழி, தனது அனுபவத்தால், இயற்கையை நேசிக்கின்ற, புரிந்துகொள்கின்ற, அது சார்ந்த வாழ்வு எனச் செறிவான பண்பாட்டை உருவாக்கியிருக்கிறது.
ராஜராஜ சோழன்தான் கல்வெட்டில் முதன்முறையாக, ‘இங்கு தர்மம் காப்போர் பாதம் என் தலைமேல்’ என்று எழுதினான்.
அதற்குப் பிறகு, பல மன்னர்கள் குளம் வெட்டினாலும், கண்மாய் வெட்டினாலும், கால்வாய் வெட்டினாலும் இதைக் கல்வெட்டுகளில் எழுதினார்கள்.
ஆனால், ஈராயிரம் ஆண்டாக எந்தக் கல்வெட்டும் பதியாமல், எந்தச் செப்பேடும் எழுதாமல், அறம் செய்கின்ற எல்லோரின் பாதங்களையும் தன் தோளில் தூக்கிச் சுமந்த ஒரு வரலாற்று நாயகன் உண்டு என்றால் அவன் வேள்பாரி என்ற வரலாற்று நாயகன்.
இது பாரியின் நூல் மட்டுமல்ல, அவன் பாதங்களைச் சுமக்கின்ற ஒரு நூல். இந்த நாவலை நான் எழுதி முடித்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.
எனக்குத் தெரிந்து 2,500-லிருந்து 3,000 குழந்தைகளுக்கு ‘வேள்பாரி’ நாவலிலிருந்து பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.
உலகில் எந்தவோர் எழுத்தாளனுக்கும், வாசக சமூகம் இப்படி ஒரு கைமாறு வழங்கியிருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.
இது எழுத்தாளனுக்கு வழங்கப்பட்டிருக்கும் கைமாறு அல்ல, வேள்பாரிக்கும், பரம்புக்கும், இயற்கையை நேசிக்கின்ற வாழ்வுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் கைமாறு.
உண்மைக்குள் எவ்வளவு மூழ்குகிறோம், புனைவுக்குள் எவ்வளவு மிதக்கிறோம் என்ற வித்தை தெரிந்துவிட்டால், மிதப்பவரின் மோகம் மூழ்குகிற ஈரத்தை உணரும், மூழ்குகிற ஈரம் மிதக்கிற காற்றின் அனுபவத்தை ருசிக்கும்.
வேள்பாரி, மிதந்துகொண்டே இருக்கிறபோது மூழ்கிக்கொண்டே இருக்கின்ற அனுபவத்தையும், மூழ்கிக்கொண்டே இருக்கிறபோது மிதந்துகொண்டே இருக்கின்ற அனுபவத்தையும் கொடுத்துக் கொண்டேயிருக்கும்.
அது உணர்கிற, அனுபவிக்கின்ற ஒரு பெருங்கடல். பாரியின் குடிகளுக்கும், பரம்புக்கும், பாரியின் தமிழ்போல் பரந்து கிடக்கின்ற இந்த வாழ்வில் ‘வேள்பாரி’ தன்னுடைய பயணத்தை நெடுந்தூரத்துக்குக் கொண்டு செல்லும்” என்றார்.
நன்றி: ஆனந்த விகடன்

