ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு முழுநேர விவசாயியாக மாறியிருக்கிறார் தோனி. ராஞ்சியில் சிமிலா என்ற இடத்தில் இருக்கும் தனது 43 ஏக்கர் பண்ணை வீட்டில்தான் முழு நேரத்தையும் செலவழிக்கிறாராம் தல தோனி.
இந்த இடத்துக்கு கைலாஷ்பதி என்று பெயர் வைத்திருக்கிறார் தோனி.
தக்காளி, ப்ரோக்கோலி, பிரெஞ்ச் பீன்ஸ்கள், ஸ்ட்ராபெரி, கொய்யா என்று பல்வேறு காய்கறி மற்றும் பழ வகைகள் இந்த தோட்டத்தில் விளைகின்றன.
ரசாயனம் எதுவும் இல்லாமல், இயற்கையாகவே விளையும் இந்த விளைபொருட்களை உள்ளூர் மார்க்கெட்டிலேயே விற்கிறார் மகேந்திர சிங் தோனி.
இயற்கையாக தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்பதால் தோனியின் பண்ணையில் இருந்து வரும் விவசாயப் பொருட்களுக்கு உள்ளூர் மக்களிடையே மிகுந்த வரவேற்பு இருக்கிறது.
தோனியின் பண்ணையில் பணியாற்றும் ஊழியர்கள் இதுபற்றி சொல்லும்போது, “எங்கள் பண்ணையில் செயற்கை உரங்களை முற்றிலுமாக தவிர்த்து வருகிறோம்.
சாணி, கோமியம், காய்ந்த இலைகள் போன்ற இயற்கையான உரங்களையே பயன்படுத்துகிறோம். அதனால் இங்கு விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை” என்றனர்.
காய்கறி மற்றும் பழங்களைத் தவிர மிகப்பெரிய அளவில் மாட்டுப் பண்ணையையும் தோனி இங்கு வைத்துள்ளார்.
இந்த பண்ணையில் சுமார் 50 மாடுகள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் பாலை உள்ளூரில் உள்ள சில வீடுகளுக்கு சப்ளை செய்வதுடன் ராஞ்சியில் உள்ள இனிப்பு கடைகளுக்கும் வழங்கி வருகின்றனர்.
ராஞ்சியின் பாரம்பரியமான இனிப்புகள் இந்த பாலை பயன்படுத்தி செய்யப்படுகிறது.
தோனியின் இந்த பண்ணையில் கருங்கோழிகளும் வளர்க்கப்படுகின்றன. நம்மூரில் உள்ள கோழிகளைவிட சிறந்த வகையாகக் கருதப்படும் இந்தக் கோழியின் இறைச்சி ஒரு கிலோ 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஆண்டிபயாடிக் மற்றும் சத்து ஊசிகள் என்று எதையும் கொடுக்காமல் வளர்க்கப்படும் இந்த கோழியை, தோனியின் பண்ணைக்கு நேரில் போய் மக்கள் வாங்கி வருகிறார்கள்.
தோனியின் இந்தப் பண்ணை வீட்டிலேயே ஒரு குளம் இருக்கிறது. இந்த குளத்தில் மீன்களும் வளர்க்கப்படுகின்றன.
பொழுதுபோக்குக்காக இந்த குளத்தில் மீன்களைப் பிடிப்பது தோனியின் வழக்கம் என்று அங்குள்ள ஊழியர்கள் கூறுகிறார்கள்.
மீன் பிடிப்பதுடன், வயலில் டிராக்டர் ஓட்டுவதும் தோனிக்கு மிகவும் பிடிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
தோனியின் பண்ணையில் அவரது மேற்பார்வையால் வளர்க்கப்பட்ட பயிர்களை வாங்குவதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மக்களும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.
– பி.எம். சுதிர்



