கோலம் என்னும் வரைகலையின் வெளிப்பாடு தமிழர் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்ததாகும்.
கோலம் என்னும் சொல், சங்க இலக்கியத்திலேயே மிகப் பிற்பட்ட நூலான பரிபாடலில்தான் முதன்முதலாகத் திருமாலின் வராக அவதாரத்தைக் குறிக்க “கேழற் கோலம்” என்னும் தொடராகக் காணப்படுகிறது.
பெருங்காப்பியமான சிலப்பதிகாரத்தில் மூன்று இடங்களில் இத்தொடர் பயின்று வருகிறது.
“மாதவி தன் கோலம் தவிர்த்திருந்தாள்” “மணமகளைப் போல யாழ் கோலம் செய்யப்பட்டிருந்தது”.
“மாதவி எழுதுவரிக் கோலம் என்ற ஆட்டத்திற்காகக் கோலம் செய்திருந்தாள்”,
“பழங்குடி மக்கள் குமரிப் பெண்ணைத் தெய்வக்கோலம் செய்திருந்தனர்”.
– இவையே சிலப்பதிகாரத்தில் கோலம் என்னும் சொல் வருமிடங்களாகும்.
ஆடுமகளுக்கும், மணமகளுக்கும், இசைக் கருவிக்கும் செய்யப்பட்ட ஒப்பனைகளையே அதாவது கலை வெளிப்பாடுகளையே சிலப்பதிகாரம் கோலம் என்றது.
இன்று கோலம் என்பது அரிசி மாவினாலும் சுண்ணாம்புப் பொடியினாலும், பல வண்ணப்பொடிகளாலும் தரையில் இடப்படும் கோலத்தைக் குறித்து நிற்கின்றது.
தரையில் இடப்படும் கோலம், வீட்டின் தலைவாயிலினும், வீட்டிற்குள் தெய்வ வழிபாடு நிகழ்த்தப்படும் இடத்திலும் கோயில்களிலும் இடப்படுகின்றது.
எனவே, கோலம் என்பது அழகுணர்ச்சி சார்ந்த வரைகலை வெளிப்பாடாக மட்டுமின்றி புனிதத் தன்மை அல்லது சடங்கியல் தன்மையுடைதாகவும் விளங்குகின்றது என்பதை உணரலாம்.
தொல்பழங்குடி மக்களின் நம்பிக்கைகளில் ஒன்று தரையைப் புனிதப்படுத்துவதாகும். தூய்மைப்படுத்தப்படாத தரை தெய்வங்கள் காலூன்றி நிற்பதற்கு ஏற்றதன்று. தெய்வங்களும் வானவர்களும் பூமிக்கு (மண்ணுலகிற்கு) வரும்போது தரையினை மிதிப்பதில்லை.
அவதாரமான இராமனும் கிருஷ்ணனும் மட்டுமே வெறுங்காலால் பூமியை மிதித்தவர்களாவர்.
“மேலொரு பொருளுமில்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கி
கால் தரை தோய வந்து கட்புலக் குற்றதம்மா”
– என்பது கம்பராமாயணம்.
இதன்பொருள் பொதுவாகத் தெய்வங்களின் கால்கள் தரைதோய வருவதில்லை என்பதாகும். தெய்வங்கள் வானுலகத்தில் அல்லது மண்ணுலகத்தில் மரங்களில் தான் வாழும். தரையில் மனிதர்களைப்போல வாழ்வதில்லை.
மனிதனின் விருப்பத்திற்கும், தேவைக்குமேற்ப மண்ணிற்கு வரும் தெய்வங்களுக்கு மனிதன் “புனித இடங்களை” உருவாக்குகிறான்.
தெய்வச்சிலைகள் அனைத்தும் கவிழ்ந்த தாமரையின் மீதே (பத்ம பீடத்தின் மீதே) அமைக்கப்படுவதன் காரணமும் இதுதான்.
நாட்டார் வழிபாட்டு மரபிலும் தெய்வத்தின் கால்கள் தரையிலே பதியக்கூடாது என்பதற்காக “பூடங்கள்” (பீடங்கள்) அமைத்துள்ளனர்.
பீடங்களின் உச்சிப் பகுதியில் கவிழ்ந்த தாமரை போன்ற வடிவம் காட்டப்பட்டிருப்பதனைக் கூர்ந்து கவனித்தால் அறிந்து கொள்ளலாம்.
படங்களோ, சிலைகளோ, வீட்டுப் புழக்கத்தில் இல்லாத காலத்தில் வீட்டிற்குள் தெய்வத்தை, திருநிலைக்கொள்ள வைப்பதற்கு குத்துவிளக்கு மட்டுமே இருந்தது.
குத்துவிளக்கும்கூட மனைப் பலகை அல்லது மண்ணால் செய்த சிறுபீடம் அல்லது கோலத்தின் மீதுதான் வைக்கப்படுகிறது. வெளியிலும் குத்து விளக்கு இல்லாத நிலையிலும் வீட்டிற்குள்ளும் தெய்வ வழிபாடு நிகழ்த்தப்படுவதுண்டு.
அப்போதெல்லாம் அந்த இடங்களில் கோலங்கள் இடப்படுகின்றன. செம்மண் அல்லது பசுஞ்சாணத்தால் ஆன பிள்ளையாரும் கோலத்தின் பகுதியில்தான் வைக்கப்படுகின்றது.
கோலம் இடப்படுமுன் தரைப்பகுதி தண்ணீராலோ, சாணத்தாலோ தூய்மை செய்யப்படுகின்றது. இதன்மீதே கோலங்கள் இடப்படுகின்றன. இன்றளவும் தலைவாசல் கோலமும் தரையில் தண்ணீர் தெளித்த பின்னரே இடப்படுகின்றது.
கோலம் இடப்பட்ட இடங்களையே சங்க இலக்கியங்கள் “களம்” எனக் குறிப்பிடுகின்றன. குறிப்பாக முருகப்பூசாரி வெறியாடுமிடங்கள் களமாக அமைகின்றன.
இக்களத்தின் மீதே வேலனாகிய முருகப்பூசாரி நின்று ஆடுகின்றான். கேரளத்தில் இம்மரபு இன்றும் உயிரோடுள்ளது. இதற்குக் களமெழுதுதல் அல்லது களமெழுத்து என்று பெயர்.
“களமெழுத்து” என்பது தூய்மை செய்யப்பட்ட இடத்தில் வரையப்பட்ட கோலத்தையே குறிக்கின்றது.
சர்ப்பந்துள்ளல் போன்ற வழிபாட்டு நடனங்கள் பல வண்ணப்பொடிகளால் வரையப்பட்ட களத்தின் மீதே நடத்தப்பெறுகின்றன.
“வேலன் தைஇய வெறி அயர் களனும்” என்று திருமுருகாற்றுப்படை, முருகப்பூசாரி வேலன் ஆடும் களத்தைக் குறிப்பிடுகின்றது.
இலக்கியங்கள் குறிப்பிடும் “களன் இழைத்தல்” என்ற சொல் தமிழ்நாட்டில் இன்று மறைந்து போய்விட்டது.
அதற்கு மாற்றாகவே அழகுபடுத்துதல், ஒப்பனை செய்தல் என்ற பொருளுடைய கோலம் என்ற சொல் புழக்கத்தில் வந்துள்ளது.
“தலைவாசல் கோலம்” என்பது மேலிருந்து இறங்கும் தெய்வம் மண்ணில் கால் பதிப்பதற்கு இடப்பட்ட முதல் களமாகும். வீட்டிற்குள் இடப்படும் கோலம் தெய்வத்தைத் திருநிலைப்படுத்தச் செய்யப்பட்ட இடமாகும்.
கோலம் என்பது ஏன் பெண்களுக்கு மட்டுமே உரிய கலை, சடங்கியல் வெளிப்பாடாக அமைகின்றது என்பது எஞ்சிநிற்கும் கேள்வியாகும்.
மனிதகுல வரலாற்றில் தொடக்க காலத்தில் பெண்களே பூசாரிகளாக இருந்துள்ளனர் என்பது மானிடவியல் காட்டும் உண்மையாகும்.
சங்க இலக்கியங்களில் முருகனுக்கு வேலனைப் போலவே புலைத்தியும் பூசாரியாக இருந்துள்ள செய்தி காணப்படுகின்றது.
அதனால்தான் இன்னமும் தெய்வத்தின் ஆற்றலைத் தன் உடலில் இறக்கி ஆடும் சாமியாட்டம் பெண்களுக்கு விலக்கப்பட்டதாக அமையவில்லை.
கோலம் என்னும் வரைகலையின் தோற்றம் பெண்களைச் சார்ந்தது என்பதையே மனிதகுல வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. கோலம் வரைதல் ஒரு கடமையாகவும் உரிமையாகவும் பெண்களுக்கு அமைந்தது இப்படித்தான்.
எனவேதான் வறுமைப்பட்ட குடும்பங்களில் கூட கோலமிடுவதற்கு ஒருபிடிச் சுண்ணாம்புப்பொடி இன்னமும் இருக்கின்றது.
- நன்றி : காப்பியா வாசகம்