பெரியாரை முதன்முதலில் பார்த்தவுடன் ஒரு முனிவர்போல எனக்குக் காட்சி தந்தார் என்று என்னிடம் சொன்னவர் ஒரு அய்யர்.
எனக்காகச் சொன்ன வார்த்தை இல்லை அது; மனம் திறந்து சொன்னது. அப்படிச் சொல்ல அவருக்குக் காரணம் இருந்தது.
காந்திஜி சுடப்பட்டவுடன், வானொலியில் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. காந்திஜியை ஒரு இந்துதான் சுட்டுக்கொன்றான்.
இப்படியே ஏன் சொல்லிக் கொண்டிருந்தார்கள்? முஸ்லீம் மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையில்தான்.
அந்தச் சமயத்தில் ஒரு பொதுக்கூட்டம் திராவிடக் கழகத்தினர் நடத்தினார்கள். பெருந்திரளான கூட்டம் அது. உணர்ச்சி கொந்தளித்துக் கொண்டிருந்தது.
பெரியார் பேசப் போகிறார். அதுக்கு முன்னால் ஒரு முக்கிய பிரமுகர் பேசினார்;
“காந்தியாரைக் கொன்றது யார் தெரியுமா என்று கேட்டுக் கொஞ்சம் இடைவெளிவிட்டுப் பேசத் தொடங்கியதும், மேஜை மேல் வைத்திருந்த தடிமனான தனது கைத்தடியினால் – ஒரு வாத்தியார் பள்ளிப் பிள்ளைகளின் சப்தத்தை அமைதிப்படுத்த தட்டுவார்களே அதுபோல் தட்டி அந்தப் பேச்சாளரை எச்சரித்தார் பெரியார்.”
அந்தப் பேச்சாளர் சொல்லவந்தது, ‘காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் ஒரு பார்ப்பனன்’ என்று பெரியாரின் அந்தக் கைத்தடி ஓசை ‘அப்படிச் சொல்லிவிடாதே’ என்று தடுத்து நிறுத்திவிட்டது.
அந்தப் பிரம்பின் ஓசை எத்தனையோ மனித உயிர்களைக் காப்பாற்றியது, எத்தனையோ பெண்களின் கற்பைக் காப்பாற்றியது.
கோட்சே ஒரு பிராமணன் என்று சொல்ல ரொம்ப நேரம் ஆகாது. அதன் விளைவை நொடியில் யூகித்த பெரியார் தடுத்து நிறுத்தினார்.
பெரியார் என்ற மானுடன் அவரது உள்ளம் தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும்.
– 01.01.2004-ல் ஓவியர் புகழேந்திக்கு கி.ராஜநாராயணன் எழுதிய கடிதம்.