ஜுன் 26 – சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்
இன்றைய சூழலில் ‘போதையில்லா வாழ்வு’ என்பதே மிகப்பெரிய வரம் என்றாகிவிட்டது. இது மிகை இல்லை. ஏனென்றால் டீ, காபி அருந்துவது போன்று மதுபான நுகர்வு, சிகரெட் புகைத்தல் போன்ற விஷயங்கள் இயல்பில் சேர்க்கிற முயற்சிகளில் சமூகம் இறங்கி நெடுநாட்களாகிவிட்டன.
போதையை ஏற்படுத்துகிற இப்பொருட்களை ஒருவர் நுகராவிட்டால், அதைவிடவும் கொடிய பழக்க வழக்கங்கள் இருக்கக் கூடும் என்று அவர் மீது சந்தேகப் பார்வை வீசுவது சாதாரணமாகிவிட்டது.
அதற்கும் ‘இல்லை’ என்று பதில் வந்துவிட்டால், ‘சமூகத்தின் இயல்பிலிருந்து விலகிய நபர்’ என்கிற முத்திரை விழுந்துவிடுகிறது.
அதேநேரத்தில், அந்த போதையின் பிடியில் சிக்கி வாழ்வே தள்ளாட்டம் போடுகிறபோது, அதே சமூகம் அறிவுரை தருவதில் தொடங்கி அடிக்கவும் பாயவும் தயாராகிறது. அந்த நபர்களை விலங்கினும் கீழாக நோக்குகிற பாங்கு பெருகி நிற்கிறது.
போதைப்பொருள் பயன்பாடு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வரும் ஒன்றாக இருக்கலாம். ஆனால், அது உணவு, உடை, உறைவிடம் போன்று அத்தியாவசியப் பட்டியலில் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.
உழைத்து, களைத்து, ஓய்வெடுப்பவர்களுக்கு அது தேவை என்கிற நிலை எப்போது உருவானதென்று தெரியவில்லை.
பொதுவாக, தேவைகளுக்கு அதிகமாகச் சம்பாதிக்கிற சூழல்களில் மட்டுமே போதை நுகர்வு என்பது ஒரு வழக்கமாகி வந்திருக்கிறது. நாம் இதுவரை கேட்ட அரச கதைகளும் அதையே உணர்த்துகின்றன.
பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கிறவர்களைப் பார்த்து, தாமும் அதே போன்று வாழ வேண்டும் என்கிற நோக்கத்தில் தவறில்லை.
ஆனால், அது போதை நுகர்வோடு நின்றுவிடுகிறபோது சம்பந்தப்பட்ட மனிதர் மட்டுமல்லாமல் அவரது குடும்பம், அவர்கள் சார்ந்திருக்கிற சமூகம் என்று எல்லா நிலைகளிலும் சீரழிவு ஏற்படுகிறது.
ஒரு இலக்கை அடைந்தவுடன் அடுத்தது நோக்கிப் பயணிப்பது போல, போதைப்பொருள் நுகர்விலும் அளவிலும் வகையிலும் வேறுபட்டிருப்பதை விரும்புதல் நிகழ்கிறது.
‘எனக்கு எவ்ளோ குடிச்சாலும் போதை ஏறாது’ என்று சொல்லிக் கொள்வதும், ‘நான் நார்மலா இருப்பேன் எப்பவும்’ என்று பிதற்றுவதும் இதனால்தான்.
மதுப் பிரியர்களைப் பொறுத்தவரை, ரத்தத்தில் கலக்கிற ஆல்கஹாலின் அளவு அதிகமாகும்போது மூளையில் ஏற்படும் போதைக்கான அளவு உயர்ந்துவிடுகிறது. ரத்தமே அதன் இயல்பை இழக்கிற வரைக்கும் அதனால் ஏற்படுகிற விளைவுகள் பற்றி தெரிய வராது.
நாற்பதாண்டுகளுக்கு முன்னர் அப்படிப்பட்ட நுகர்வை எட்டுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்று ஊர் கூடி நின்றாலும் கைகள் போதாது எனும் அளவுக்கு அந்த எண்ணிக்கை பெருகியிருக்கிறது.
முந்தைய தலைமுறை வகுத்த நெறிமுறைகளுக்கு உட்பட்டு வளர்ந்த, இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறவர்களே இப்படியொரு சூழலுக்கு உள்ளாக நேரிடுகிறது.
அப்படியானால், இச்சூழலைப் பார்த்தே வளர்கிற அடுத்த தலைமுறை இன்னும் பத்தாண்டுகள், இருபதாண்டுகள் கழித்து இந்த விஷயத்தை எப்படி அணுகும்? நினைத்தாலே அச்சம் பெருக்கெடுக்கிறது.

பணிகளுக்குச் செல்வோரில் பலர், பகற்பொழுதுகளில் மதுபானக்கடைகள் கூடி நிற்பதைப் பார்த்தால் மனம் பதைபதைக்கிறது. சிலர், அந்த போதைக்காகப் பணி செய்வதையே துறந்து திரிகின்றனர்.
அவர்களுக்கான போதைச் செலவுகளைச் செய்து தரப் பெண்களும் குழந்தைகளும் உழைக்கிற நிலை சில குடும்பங்களில் இருக்கிறது. நடுத்தர வயதினர், முதியோர் என்றில்லாமல் இளைஞர்களும் இந்தப் பட்டியலில் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து வருவதைக் காண முடிகிறது.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கிற இளம் வயதினர் ‘போதை நுகர்வு’ என்பது வாழ்க்கை பாடத்தின் ஒரு அத்தியாயம் என்று கருதுகின்றனர்.
அடுத்த அத்தியாயத்திற்கு நகரவிடாதவாறு செய்துவிடுகிற அழிப்பான்கள் அவை என்பது அவர்களில் பெரும்பாலானோருக்குப் பிடிபடுவதில்லை.
ஒருகாலத்தில் மது, சிகரெட் என்பதே போதைப்பொருளுக்கான உதாரணங்களாகக் காட்டப்பட்டன. கஞ்சா, புகையிலை போன்றவை அரிதானவையாகக் கருதப்பட்டன.
இன்று அபின், கொக்கைன் தொடங்கி போதையை ஏற்றுகிற ஸ்டாம்ப், எல்.எஸ்.டி. உட்பட எத்தனையோ வஸ்துக்கள் மக்களைச் சீரழிக்கத் தயாராக இருக்கின்றன.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை சமூக, பொருளாதார, வர்க்க வேறுபாடுகள் பெருமளவு தகர்ந்துவிட்டன. ஆண்களைப் போலவே பெண்களும் போதைப்பொருள் நுகர்வுக்கு ஆட்பட்டு வாழ்வைச் சிதைத்துக் கொள்வது அதிகமாகி வருகிறது.
‘ஜாலிக்காக’ என்றும், ‘நட்பு மற்றும் உறவு கூடுதலுக்காக’ என்றும் சிலர் போதையின் பிடிக்குத் தங்களைக் கொடுக்கின்றனர். பிறகு, அதிலிருந்து மீள முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.
போதையின் பிடியில் இருப்பவர்களை இயல்பு வாழ்க்கைக்கு மீட்டுக் கொண்டுவர எத்தனையோ வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
ஆனால், போதையில் திளைத்துச் சிதைவதை விடவும் அவை கொடுமையானவையாகக் கருதப்படுகின்றன. ஆக, ‘வருமுன் காப்பதே சிறந்தது’ என்பது இவ்விஷயத்தில் உண்மை.
அதையும் மீறி, ஒருவரைப் போதையில் இருந்து மீட்டெடுக்கப் பலரது முயற்சியும் உழைப்பும் கால அவகாசமும் தேவை.
முக்கியமாக, போதைக்காகச் செலவழிப்பதைக் காட்டிலும் அதிகமாகப் பொருளாதாரப் பயன்பாடு இதற்குத் தேவைப்படுகிறது.
முழுமையாக அந்த மீட்சியை அடைய, சம்பந்தப்பட்ட போதை விரும்பிகள் நிறையவே இழக்க வேண்டியிருக்கும்.
அப்படியொரு நிலையை அடைந்தபிறகு, தங்களைப் போன்று திரிபவர்களைப் பார்த்துக் கடுங்கோபமும் ஆற்றாமையும் ஏற்படும். எப்படியாவது அவர்களை மீட்டெடுத்துவிட முடியாதா என்ற ஏக்கம் பெருகும்.
அப்படிப்பட்டவர்களால் தான் இன்று பல போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
போதைப்பொருள் பயன்பாட்டைத் தவிர்க்க அரசின் சட்டங்கள் மட்டும் போதாது. அரசின் முயற்சிகளோடு பெருமளவில் பொதுமக்களும் தங்களால் இயன்றதைத் தொடர்ச்சியாகச் செய்தாக வேண்டும்.
பல நாடுகளில் போதைப்பொருள் நுகர்வும் விற்பனையும் கடுமையான தண்டனைக்குரிய குற்றங்களாக இருக்கின்றன.
ஆனாலும், அவை நிகழ்வதற்குக் காரணம் குறுகிய காலப் பொருளாதாரச் செழிப்புதான். அதிலிருந்து எதிர்காலத் தலைமுறையை விடுவிக்க, அறம் சார்ந்த வாழ்க்கை முறை, ஒழுக்கத்தினால் விளையும் பயன்கள் உட்படப் பல விஷயங்கள் குறித்து பாடம் புகட்ட வேண்டும்.
அதனை அவர்களுக்குத் தெரிந்த வழிமுறைகளில் எளிமையாகச் சொல்கிறபோது அதற்கான பலன் அதிகமிருக்கும்.
அந்த நோக்கத்திலேயே, ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 26-ம் தேதி ‘சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகளும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
’போதையில்லா வாழ்வென்பது வரமா’ என்பது நமக்குத் தெரியாது. ஆனால், அப்பழக்கத்திற்கு அடிமையாகி, பின்னர் அதிலிருந்து மீண்டவர்களுக்கு ‘இயல்பான வாழ்க்கை என்பது பெருவரம்’ ஆகத் தெரிகிறது.

எல்லா விஷயங்களிலும் அனுபவமே ஆசான் என்று இருந்துவிட முடியாது. சிலவற்றைப் பொறுத்தவரை ‘பட்டுத் தெரிவதும் தெளிவதும்’ கடுமையான பாதிப்புகளை உடலளவிலும் உள்ள அளவிலும் ஏற்படுத்தும்.
அதனைத் தவிர்ப்பது எளிது எனில், அதைப் பின்பற்றுவது தானே புத்திசாலித்தனம். ஆதலால், போதையின் பிடியில் இருந்து நாம் வாழ்கிற இச்சமூகத்தை மீட்டெடுப்பது நம் கடமை.
மனிதன் புத்திசாலித்தனத்தை நாடுகிற ஒரு உயிரினம் என்பது காலம்காலமாகத் தொடர்கிற ஒரு நம்பிக்கை. போதையின் பிடியில் சிக்கி அதனை நசுக்கச் செய்வதால் யாருக்கு லாபம்?
- மாபா