ஸ்மிருதி மந்தனாவின் அதிரடியால் மீண்ட இந்தியா!

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.

இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

டாஸ்வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி, 49 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 34 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 21 ரன்களும் எடுத்தனர்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்தியா 13 ரன்களை எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது.

முதலில் ஆடிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 2 சிக்சர் உள்பட 20 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 17 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் இந்திய அணி டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

You might also like