கால்பந்து உலகக் கோப்பையில் ஆடும் முதல் தமிழர்!

கால்பந்து ரசிகர்கள் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்று இந்தியா. ஆனால், உலகக் கோப்பை கால்பந்தில் இந்தியா இதுவரை ஒரு முறைகூட பங்கேற்றதில்லை என்பது பெரும் சோகம்.

1950-ல் பிரேசிலில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தகுதிபெற்றும், வெறுங்காலால் ஆட பிஃபா அமைப்பு சம்மதிக்காததால் அந்த உலகக் கோப்பையில் இந்தியா ஆடவில்லை.

அதன்பிறகு உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி பெறவும் இல்லை.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் இந்த மாதம் தொடங்கவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கு இந்தியா தகுதி பெறாவிட்டாலும், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஒருவர் பங்கேற்கப் போகிறார் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.

அந்த வீரரின் பெயர் தசின் முகமது.

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் தசின் முகமதின் பெற்றோர். அவரது அப்பா ஜம்ஷிட், தலசேரியைச் சேர்ந்தவர்.

கால்பந்து வீரராக இருந்த இவர், தன் சிறுவயதில் கோழிக்கோடு பலகலைக் கழகத்துக்காக கால்பந்து போட்டிகளில் ஆடியுள்ளார்.

அம்மா வலப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர்.

கடந்த 1996ம் ஆண்டு, அவர்கள் கத்தாரில் குடியேறி இருக்கிறார்கள்.

அங்குள்ள தோஹா நகரில்தான் தஷின் முகமது பிறந்துள்ளார்.

அப்பாவின் வழியில் சிறுவயது முதலே கால்பந்தில் விருப்பம் கொண்டவராக இருந்த தஷின் முகமது, அங்குள்ள ஆஸ்பயர் கால்பந்து அகாடமியில் பயிற்சி பெற்றுள்ளார்.

கத்தாரின் புகழ்பெற்ற கால்பந்து வீரர்களை உருவாக்கிய அந்த அகாடமி, தஷின் முகமதையும் பட்டை தீட்டியிருக்கிறது.

இதைத்தொடர்ந்து உள்ளூரில் ஹல் துஹைல் கிளப் என்ற கால்பந்து அணிக்காக கிளப் கால்பந்து போட்டிகளில் சிறப்பாக அடிய தஷின், தேர்வாளர்களின் கண்ணில் பட்டு, உலகக் கோப்பையில் ஆட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியர் ஒருவர் உலகக் கோப்பை கால்பந்தில் ஆடும் அதே நேரத்தில், தமிழர் ஒருவருக்கும் இந்த உலகக் கோப்பையில் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால், அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் அல்ல. இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட தமிழர். அவரது பெயர் நிஷான் வேலுப்பிள்ளை.

நிஷான் வேலுப்பிள்ளையின் அப்பா சசிநாத் வேலுப்பிள்ளை இலங்கையைச் சேர்ந்தவர்.

பின்னாளில் அவர் மலேசியாவில் குடியேறினார். அங்கு கிலியன் என்ற ஆங்கிலோ இந்தியரை மணந்து ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகரில் செட்டில் ஆனார்.

அவர்களுக்கு மெல்பர்னில் பிறந்த நிஷான் வேலுப்பிள்ளை, இப்போது ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆடும் பெருமையைப் பெற்றிருக்கிறார்.

இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட ஒருவரும், தமிழர் ஒருவரும் இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆடுவது நமக்கு இரட்டை சந்தோஷத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தசின் முகமதின் பெற்றோர் கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இவர் தோகாவில் பிறந்துள்ளார்.

சிறு வயதில் இருந்தே கால்பந்து போட்டிகளில் ஆர்வமாக இருந்த இவர், கத்தாரின் முன்னணி கால்பந்து தொடரில் ஆடிய ஒரே இந்தியர் என்ற பெருமையை ஏற்கெனவே பெற்றுள்ளார்.

– ராதா

You might also like