பூமணி: கரிசல் மண்ணை நேசித்த எழுத்துக் கலைஞர்!

தமிழ் இலக்கிய உலகில் கரிசல் எழுத்தாளர்களுக்கு மிக முக்கியப் பங்குண்டு. அதில், முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவர் கி.ராஜாநாராயணன்.

கு.அழகிரிசாமி உள்ளிட்ட பலர் இந்த நீண்ட வரிசையில் இருந்தாலும் இதில் குறிப்பிடத்தக்கவர் அண்மையில் மறைந்த எழுத்தாளரான பூமணி.

துவக்கத்தில் இருந்தே கரிசல் மண்ணின் இயல்பான மண்வாசனையையும் அந்த மண்ணின் தவிர்க்க முடியாத அங்கத்தைப் போல நிலவிய சாதியப் பாகுபாட்டையும் கரிசல் மண்ணுக்கே உரித்தான வறட்சியினால் வதங்கிய வாழ்க்கையையும் தன்னுடைய எழுத்துக்களின் வழியாகப் பதிவு செய்து வந்த பூமணி திரைப்படத் துறையிலும் நுழைந்து, ‘கருவேலம் பூக்கள்’ என்ற தலைப்பில் தன்னுடைய படைப்பை தானே திரைப்படமாக உருவாக்க முனைந்தார்.

இதையடுத்து அவருடைய ‘வெக்கை’ நாவலின் பிரதி இயக்குநர் வெற்றிமாறனின் பார்வையில் பட, அந்தப் படைப்பின் உக்கிரம் தான் ‘அசுரன்’ படம் உருவாகக் காரணமாக அமைந்தது.

‘அசுரன்’ வெற்றிப் படமாக பெயர் பெற்றபோது, அதைப் படைத்த படைப்பாளியான பூமணியின் பெயரும் பரவலாகப் பேசப்பட்டு, கவனம் பெற்றது.

மிக எளிமையான முறையில் தன்னைச் சுற்றி கரிசல் மண்ணில் நிகழ்ந்த பல்வேறு வாழ்வியல் அனுபவங்களை சிறுகதைகளாகவும் வெக்கை, நைவேத்தியம், வாய்க்கால், வரப்புகள், அஞ்ஞாடி (2014-ல் சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவல்) ஆகிய மண்ணின் இயல்பு கொண்ட நாவல்களையும் படைத்துள்ளார்.

இறுதிவரை, சக மனிதர்களிடம் இயல்பான அன்பை வெளிப்படுத்தக் கூடியவராகவே இருந்தார் பூமணி.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு மதிப்பளித்து, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ததைப் போலவே, பூமணிக்கும் கோவில்பட்டியில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்வதாக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

கரிசல் மண்ணை நேசித்த எழுத்துக் கலைஞரான பூமணி கரிசல் மண்ணிலே கலந்திருக்கிறார்.

– மணா

You might also like