இப்படியும் சில ‘நிறம் மாறாத பூக்கள்’!

ஊர் சுற்றிக் குறிப்புகள் :

சென்னை புறநகர் பகுதியில் காவல்துறையில் பணியாற்றும் அதிகாரியான நண்பரை சமீபத்தில் சந்தித்தபோது, அவர் ஒரு சம்பவத்தை விவரித்தார்.

ஒருநாள் மாலை நேரத்தில், எங்களுடைய போலிஸ் ஸ்டேசனுக்கு ஒரு இளைஞனும் இளம் பெண்ணும் வந்திருந்தார்கள்.

அந்த இளைஞர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் பளிச் சென்ற நிறத்துடன் ஸ்லிம்மாக இருந்தார்.

அவருடன் வந்த அந்த இளம்பெண் சென்னையைச் சேர்ந்தவர். தனியார் அலுவலகத்தில் பணிபுரிகிறவர்.

இருவரும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வருவதாகவும், அந்தப் பெண்ணின் வீட்டார் அந்தத் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார்கள் எங்களை எப்படியாவது சேர்த்து வையுங்கள் என்று சொன்ன அந்த இளம்பெண்ணிடம் அவருடைய வருமானத்தைப் பற்றிக் கேட்டேன்.

“மாசத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன்”.

“உன்னுடன் வந்திருக்கிற அந்த வடமாநிலத்து இளைஞர் எவ்வளவு சம்பாதிக்கிறார்.

“20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்” பதில் சொன்னார் அந்தப் பெண்.

இருவரும் மேஜர் என்பதாலும், இருவரும் சம்பாதிப்பவர்கள் என்பதாலும், தங்கள் திருமணத்திற்குப் பிரச்சனை இருக்காது என்று சொல்லிக் கொண்டு வரும்போது, இடையிடையே அந்த வடமாநில இளைஞர் ஹிந்தி சொல்லாடல் நிறைந்த தமிழிலும் எளிய ஆங்கிலத்திலும் என்னிடம் பேசினார்.

தன்னுடைய வீட்டார், இந்த திருமணத்திற்கு அனுமதி அளித்திருப்பதாகவும், மிக எளிமையாக தங்களுடைய திருமணம் நடக்கும் என்றும் சொன்னார் அந்த இளைஞர்.

“உங்கள் இருவருக்குமிடையில் மொழிப்பிரச்சனை இருக்கிறதே. அது உங்களுக்கு ஒரு சிக்கலாக இருக்க வில்லையா? என்று கேட்டபோது, அந்தப் பெண் புன்னகைத்தபடி என்னிடம் சொன்னார்.

“எனக்குக் கொஞ்சம் ஹிந்தி தெரியும். இவனுக்குக் கொஞ்சம் தமிழ் தெரியும். எங்க ரெண்டு பேருக்குமே ஆங்கிலம் ஓரளவுக்குத் தெரியும். அதனால் சமாளிச்சு பேசிக்கிருவோம்”

– என்று சொல்லிக் கொண்டுபோன அந்தப் பெண் கடைசியாக சொன்னதுதான் வித்தியாசமானதாக இருந்தது.

“எங்கக் குடும்பத்துல எங்க அப்பா அம்மா ரெண்டு பேருமே கருப்புதான். நான் கொஞ்சம் மாநிறமா இருக்கேன். இவனைப் பாருங்க இவன் எவ்வளவு சிவப்பா இருக்கான்.

இவனை மொதல்ல பார்த்தபோதே எதோ ஜாக்கி சானை பார்க்குற மாதிரி இருந்துச்சு. பார்த்த உடனே எங்க இரண்டு பேருக்குமே பிடிச்சுப் போச்சு.

நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா எங்களுக்குப் பிறக்குற பிள்ளை இவனைப்போல நல்லா சிவப்பா இருக்கும்ல” என்று நிறத்தைப் பற்றி அந்தப் பெண் குறிப்பிட்டு பேசியது ஆச்சர்யமாக இருந்தது.

நண்பர்கள் பலரிடமும் பேசியபோது, “தமிழகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வருகிற வடமாநில இளைஞர்களுக்கும் இங்குள்ள தமிழ் பெண்களுக்கும் இடையில், காதல் உருவாகி, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணங்கள் சகஜமாக நடக்கின்றன” என்று சொல்லிக் கொண்ட போன அந்த காவல்துறை நண்பர் நிறைவாக ஒன்றைச் சொன்னார்.

“முன்னாடி ஆங்கிலோ இந்தியர்கள்னு தனிப்பிரிவே இந்தியா முழுக்க இருந்திருக்காங்க. தமிழ்நாட்டில் இன்னமும் இருக்காங்க. அதுமாதிரி இப்போ இந்தி-தமிழர்னு புது பிரிவு உருவாகிடும்போல இருக்கு” என்றார்.

சமூகவியலாளர்கள் தான் இதுபற்றியெல்லாம் நிதானமாக ஆய்வு செய்ய வேண்டும்.

– யூகி 

You might also like