இப்படியாக எழுத்தாளர்களின் இறுதி நிமிடங்கள்!

எழுத்தாளர்களின் இறுதி நிமிடங்களில் நடந்த நிகழ்வுகளை வாசிக்கும்போது நம்மை நெக்குருகச் செய்து தடுமாற்றம் கொள்ளச் செய்யும் இயல்புடையவை.
 
ஆன்டன் செக்கோவ், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி, லியோ டால்ஸ்டாய் போன்ற மாபெரும் ஆளுமைகளின் இறுதி நிமிடங்கள் அதற்கான முக்கியமான சான்றுகள்.
 
தமிழில் புதுமைப்பித்தனின் இறுதி நிமிடங்களை வாசித்துவிட்டு கண்ணீர் சிந்தாமல் இருந்தவர் ஒருவரும் இங்கில்லை.
 
நன்றாக உடல்நலத்துடன் இருந்த தி.ஜா. திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணித்தபோது அதைக் கேள்விப்பட்டு அசோகமித்திரன் “அய்யோ” என்று கத்திவிட்டு, அன்று அடித்த கடுமையான வெய்யில் பற்றிய கடைசியாகச் சொல்லி முடிக்கும் கட்டுரையைப் படிக்கும்போது நமக்கும் “அய்யோ” என்றே சொல்லத் தோன்றும்.
 
இப்படியாகவே மெளனியின் இறுதி நிமிடங்களும் அமைந்திருக்கிறது.
 
மெளனி அதிகம் பேசாதவர், தன்னில் தன்னையே தேடுபவர் என்கிறார்கள்.
 
ஆனால், அதை க.நா.சு.-வே மறுக்கிறார். மெளனி பேசிப்பேசித் தொல்லை தருவார் என்கிறார் க.நா.சு தனது கட்டுரை ஒன்றில்.
 
மெளனியின் தனிப்பட்ட வாழ்வு முற்றிலும் துயரமானது. தனது இரண்டு மகன்களை விபத்தில் இழந்தவர், மனநிலை சீரற்ற தனது இன்னொரு மகனையும் கடைசி வரையில் பராமரித்தவர் மெளனி.
 
இந்தத் துயரங்கள் கடைசி வரையில் அவரைத் துன்புறுத்தியது.
 
மெளனி சுயநினைவுகளை இழந்து படுக்கையில் கிடந்த நேரத்தில் அவரைப் பார்க்க டெல்லியிலிருந்து சிதம்பரம் வரும் க.நா.சு., “ஓயாமல் பேசும் மெளனியைப் பார்த்திருக்கிறேன்.
 
ஆனால், இப்போது பேசாமல் படுத்திருக்கும் மெளனியைப் பார்க்கப் பிடிக்காமல் திரும்பி விட்டேன்” என்கிறார்.
 
இன்னும் சில தினங்கள் கழித்து மெளனியின் தீவிர வாசகரும் அவரின் நண்பருமான ஜே.வி.நாதன் வருகிறார்.
 
“சார், வைத்தியநாதன் வந்திருக்கிறேன்” என்கிறார் அசையாமல் படுத்திருக்கும் மெளனியைப் பார்த்து.
 
அதுவரையில் அசைவுகள் இன்றி படுத்திருக்கும் மெளனியிடம் அசைவுகள் தெரிகிறது.
 
“வையத்தியநாதனா வாப்பா! ஆமாம், உனக்கு வேறு ஒரு பேர் உண்டா?” என்கிறார் மெளனி.
 
“ஆமாம் சார், ஜே.வி.நாதன்” என்கிறார் இவர்.
 
பல நாள் பேசாமல் படுத்திருக்கும் மெளனி பேசியதைப் பார்த்து குடும்ப உறுப்பினர்கள் ஜே.வி.நாதனிடம் தொடர்ந்து பேசுமாறு இறைஞ்சுகிறார்கள்.
 
மெதுவாக ஜே.வி.நாதன் மெளனியிடம் பேசுகிறார்.
 
“என் கதைகள் பத்தி எல்லாரும் என்ன சொல்றா! ஏதாவது புரியறதாமா?” என்று கேட்கிறார் மெளனி.
 
“உங்க எழுத்து ரொம்ப வருஷத்துக்கு நிக்கும் சார்” என்கிறார் ஜே.வி.நாதன்.
 
“என் எழுத்து புரியலைன்னு சில பேர் சொல்லலையா?” என்று கவலையோடு கேட்டுவிட்டு மீண்டும் அமைதியாகிவிடுகிறார் மெளனி.
 
“சிலர் உங்க கதைகள் புரியலைன்னு சொல்றது சரிதான் சார். ஆனா நீங்க எழுத்தாளர்களுக்குதானே எழுதறீங்க” என்கிறார் ஜே.வி.நாதன்.
 
மீண்டும் நீண்ட நேர அமைதிக்குப் பிறகு மெளனி, “அம்மா, அம்மா” என்று தன் மனைவியை அழைத்து “நாதனுக்கு காபி கொடும்மா” என்கிறார்.
 
மீண்டும் அமைதிக்குப் பின், “நான் என் மனைவியை அம்மான்னு தான் கூப்பிடுவேன். ஏன் தெரியுமா? எனக்குச் சின்ன வயதிலேயே அம்மா செத்துப் போயிட்டாப்பா.
 
அம்மான்னு அப்போ கூப்பிடாத குறையை இப்போ மனைவியைக் கூப்பிட்டு தீர்த்துக்கறேன்” என்று மீண்டும் அமைதியாகிவிடுகிறார்.
 
இந்தச் சந்திப்புக்குப் பிறகு சில தினங்களில் மெளனியின் மரணம் நேர்ந்துவிடுகிறது.
 
இதைப் படிக்கும் போது மனம் சலனம் கொள்கிறது என்றாலும், எழுத்தாளனுக்கு தனது இறுதிக் கணங்களிலும் நினைவிலிருப்பது தன் எழுத்து அது போய்ச் சேரவில்லை என்கிற ஏக்கம் – அதனூடாக அவன் பெறாமலே போன அன்பு.
 
நன்றி – க. விக்னேஸ்வரன் முகநூல் பதிவு
You might also like