மாணவர்களின் தற்கொலையைத் தடுக்கும் வழி!

ஒவ்வோர் ஆண்டும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் நாள்களிலும் ‘நீட்’ தேர்வு முடிவு வெளியாகிற நாள்களிலும் சில  தங்களை மாய்த்துக்கொள்வது மிகுந்த கவலையளிக்கிறது.

மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிக்கும் என்கிற கற்பிதம் எதிர்காலச் சந்ததியின் அவல முடிவுக்குக் காரணமாக அமைவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

உலக அளவில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில்தான் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

காரணம், இங்குதான் தேர்வின் வெற்றி – தோல்விக்கும் மதிப்பெண்ணுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தரவின்படி 2024ஆம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த தற்கொலைகளில் தேர்வுத் தோல்வியால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்கள் 8.5% என்பது அதிர்ச்சியளிக்கிறது.

2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டு மாணவர்களின் தற்கொலை விகிதம் சற்றே அதிகரித்திருக்கிறது.

அந்த ஆண்டில் தற்கொலை செய்துகொண்டவர்களில் மாணவியரைவிட மாணவர்களே அதிகம்.

தேர்வு அச்சம், தோல்வி, குறைந்த மதிப்பெண் போன்றவற்றால் விரக்தி அடைந்து மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.

தன்னம்பிக்கை குறைவு, கற்றல் குறைபாடு போதாமை போன்ற தனி மனிதக் காரணங்களைப் போலவே பெற்றோரின் அதீதப் பதற்றமும் எதிர்பார்ப்பும், சிதைந்த குடும்பங்கள், சக மாணவர்களோடு ஒப்பிடுவது,

பொருளாதாரச் சிக்கல்கள், குடும்பத்தின் ஆதரவின்மை, உளவியல்ரீதியான ஆற்றுப்படுத்தலுக்கும் மனநல ஆலோசனைக்கும் வழியின்றிப் போவது போன்ற குடும்ப சமூகக் காரணிகளும் தற்கொலைக்குக் காரணமாக அமைகின்றன.

மதிப்பெண்ணுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து மாணவர்களுடைய சமூக மதிப்பீட்டுக்கும் பரிவுணர்வுக்கும் வழி ஏற்படுத்தாத கல்வி முறை, 100% தேர்ச்சி என இலக்கு நிர்ணயிப்பதால் ஆசிரியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்,

அனைத்தையுமே போட்டியாகவும் வெற்றி தோல்வியாகவும் மட்டுமே பார்க்கும் மனநிலை, ஊடகங்கள் கட்டமைக்கும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் உள்ளிட்டவையும் மாணவர்களைப் பாதிக்கின்றன.

அரசு, கல்வி நிறுவனங்கள், குடும்பம் ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பில் உள்ள இடைவெளிகளும் போதாமைகளும் உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டும்.

மாணவர்களின் மனப்பதற்றத்தை முன்கூட்டியே கணிப்பது, மாணவர்கள் மனநல ஆலோசனை பெறுவதற்கான வழிகளை எளிதாக்குவது, தற்கொலைத் தடுப்புக்கான கட்டணமில்லா உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

மதிப்பெண் குறைவு, தேர்வில் தோல்வி போன்றவை தீர்க்க முடியாத பிரச்சினைகளோ தகுதிக் குறைபாடோ அல்ல என்கிற புரிதல் பெற்றோருக்கு ஏற்பட வேண்டும்.

தேர்வில் தோல்வியடைந்தோர் மறுதேர்வு எழுதும் வகையிலான நடைமுறையை முதன்முதலில் நடைமுறைப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. இதுபோன்ற முன்னோடித் திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.

இவற்றோடு முற்போக்கும் நெகிழ்வுத்தன்மையும் அனைவரையும் உள்ளடக்கிய கல்வித் திட்டமும் அவசியம்.

தேசியத் தற்கொலைத் தடுப்பு உத்திகளை மேம்படுத்துவதிலும் அவற்றைப் பரவலாக்குவதிலும் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அனைத்துத் தரப்பும் இணைந்து செயல்படுவது மட்டுமே இளம் தலைமுறையினரை மன உறுதியும் தெளிந்த சிந்தனையும் கொண்டவர்களாக மாற்றும்.

  • நன்றி: இந்து தமிழ் திசை 
You might also like