2026-27 கல்வியாண்டு தொடக்கத்தையொட்டி பள்ளி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியைச் சேர்ந்த, தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ.வான இளங்கோவன் தனது மகள் தேவமித்ராவை, அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறார்.
திருப்புவனம் அருகே உள்ள அரகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்த்துள்ளார்.
அரசுப் பள்ளி கல்வி மீது நம்பிக்கை வைத்து சட்டமன்ற உறுப்பினர் எடுத்த இந்த முடிவு பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பாராட்டைப் பெற்றிருக்கிறது.
அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்து வருவதாகவும், பொதுமக்கள் பயன்படுத்தும் கல்வி அமைப்பில் அரசியல் பிரதிநிதிகளும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதையும் வெளிப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
பள்ளி திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை நடைமுறைகளின் போது, எம்.எல்.ஏ இளங்கோவன் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ள செயல் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகின்றது.
– சு. சுரேகா