நாகரீக வளர்ச்சியின் காரணமாக இயற்கை அளித்துள்ள பல கொடைகளை மனிதகுலம் இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இவற்றில் முக்கியமானது காற்று.
சுவாசிக்கும் காற்றானது உயிர் வாழ இன்றியமையாத ஒன்று. இது பல்வேறு வாயுக்களின் கலவையாகும்.
விலங்குகள் மற்றும் தாவரங்களின் உயிர் வாழ்விற்கும் பூமியின் சுற்றுச்சூழல் சமநிலைக்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கும் ஆதாரமாக விளங்குகிறது காற்று. இது இல்லையேல் பூமியின் இயக்கம் நின்று போகும்.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த காற்று மாசுபட்டு இருப்பது கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.
ஓசோன் படலம் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவது இதற்கு முக்கிய காரணியாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான ஆய்வின்படி நாட்டிலேயே அதிக அளவிலான தரைமட்ட ஓசோன் மாசுபாடு பதிவான பகுதியாக நம் சென்னையில் உள்ள மணலி பகுதி உருவெடுத்துள்ளது.
ஓசோன் படலம் என்பது பூமியின் வளி மண்டலத்தில் உள்ள ஒரு இயற்கை கவசமாகும்.
இது சூரியனிலிருந்து வரும் ஆபத்தான புற ஊதா கதிர்களை உறிஞ்சி பூமியில் உள்ள எல்லா உயிரினங்களையும் பாதுகாக்கிறது.
இது சுமார் 15 முதல் 30 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள அடுக்கில் அமைந்துள்ளது.
ஏற்கனவே மனிதர்களின் செயல்பாடுகளால் உருவாகும் கார்பன்கள் மற்றும் ரசாயனங்கள் காரணமாக இப்படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது என்ற செய்தி சில காலம் முன்பு கூறப்பட்டது.
தற்போது இதில் மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில் இது தீவிர விளைவுகளை மனிதர்களுக்கு ஏற்படுத்தக்கூடும்.
ஓசோன் அடுக்கு மெலிதாகிக்கொண்டே செல்லுமாயின் புற ஊதா கதிர்கள் பூமியை வந்தடைந்து தோல் புற்றுநோய், கண் புரை போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
ஓசோன் மூலக்கூறுகள் தரை பரப்பிற்கு அருகில் அதிக அளவில் காணப்படும் பொழுது அது காற்று மாசடைந்துள்ளதை குறிக்கிறது.
இதன்படி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை மணலி பகுதியில் ஒரு கன மீட்டர் காற்றில் 500 மைக்ரோகிராம் என்ற அளவில் ஓசோன் மூலக்கூறுகள் பதிவாகியுள்ளன.
இது இந்த ஆண்டு பதிவான நாட்டிலேயே மிக உயர்ந்த காற்று மாசு அளவாகும்.
இதற்கு முன்பு தலைநகர் டெல்லி மட்டுமே காற்று மாசுபாட்டின் முக்கிய மையமாக இருந்து வந்த நிலையில் இப்போது நாட்டின் பிற பகுதிகள் ஒவ்வொன்றிலும் இத்தகைய நிலை மெல்ல மெல்ல வந்து கொண்டிருப்பது வருந்தத்தக்க விஷயமாகும்.
பொதுவாக மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் காற்றின் தரம் திருப்திகரமாக இருக்கும்.
ஆனால், அக்டோபர் மாதத்திற்கு பிறகு காற்றின் வேகம் குறைந்து தூசி மற்றும் புகை மண்டலங்கள் தங்குவதால் மாசு அளவு மிக அதிகமாக உயர்கிறது.
இவ்வாறு காற்றில் கலக்கும் ஆபத்தான நுண் துகள்கள் மனிதர்களின் சுவாச பாதை மற்றும் நுரையீரலுக்கு எளிதாக சென்று விடுகின்றன.
இதனால் மூச்சுத் திணறல், ஆஸ்துமா, நாள்பட்ட இருமல், தொண்டை மற்றும் கண் எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் உண்டாகின்றன.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையும் ஆவியாகும் கரிம சேர்மங்களும் மற்றும் வாகன போக்குவரத்தும் இணைந்து இந்த பாதிப்புகளை அதிகரிக்கிறது என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முறையற்ற கட்டுமான பணிகளுக்கு தடை விதித்தல், பழைய வாகனங்கள் இயக்குவதைத் தடுத்தல், பொதுப் போக்குவரத்திற்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவினை பயன்படுத்துதல், மரங்களை நடுதல் போன்ற பல செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இது ஒரு கூட்டு முயற்சி என்பதை உணர்ந்து அனைவரும் செயல்படும்போது, எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான பூமியைப் பரிசளிக்க முடியும்
S. வாணி