வன்மம் காட்டுவதில் ஆண் – பெண் பேதம் இருக்கிறதா?

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் பண்ணப்பட்ட ஒரு பதிவில், உணவுப் பொருட்களை வழங்கும் தனியார் நிறுவன ஊழியரிடம் ஒரு பெண் நடந்து கொண்ட விதமும் அதை அவரே பதிவு செய்து பகிர்ந்த பதிவும் தான் அதிகபட்ச சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கி இருக்கிறது.

குறிப்பிட்ட அந்த உணவு வழங்கும் நிறுவன ஊழியர் அன்று சற்று தாமதமாக அந்த முகவரியைத் தேடி உணவை டெலிவரி செய்தபோது, அதைப் பெற்றுக்கொண்ட அந்தப் பெண் மிகவும் கடுமையான வார்த்தைகளில் அந்த இளைஞரை திட்டியிருக்கிறார்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக தான் தாமதமாக வந்ததாக அந்த இளைஞர் தெரிவித்தபோதும் கூட, அந்தப் பெண் மிக ஆபாசமான வார்த்தைகளில் அந்த இளைஞரை தாறுமாறாக திட்டியிருக்கிறார்.

பிறகு அவரே காவல்துறைக்கு போன் செய்து அந்த இளைஞர் தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாக புகார் அளித்திருக்கிறார்.

பிறகு அந்த முழு பதிவையும் உடனே சமூக வலைத்தளத்தில் பகிரவும் செய்திருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட அந்தப் பேச்சு, அந்தப் பெண்ணுக்கு எதிராகவே கடுமையாக பாய்ந்திருக்கிறது.

அந்தப் பெண் பேசிய ஆபாசமான வார்த்தைகள் அப்படியே எந்தவிதமான பீப் ஒலியின் குறுக்கீடு இல்லாமல் வெளிவந்து பார்ப்பவர்களிடைய பலத்த அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தப் பதிவுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில், பல பெண் அமைப்பைச் சேர்ந்தவர்களும் அந்தப் பெண்ணுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூறி பதிவிட்டுருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட அந்தப் பெண், தன்னால் குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞரை அழைத்து தன் அருகில் நிறுத்திக்கொண்டு தான் மட்டும் மாஸ் போட்ட முகத்துடன்,

“சாரி“ தெரிவித்து அவர் இழிவாகப் பேசிய அந்த இளைஞருடைய தாயாருக்கும் வருத்தம் தெரிவித்து அதையும் முன்பு பதிவிட்டதைப் போலவே பதிவு செய்திருக்கிறார்.

இந்தப் பதிவும் தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு பல்வேறு விமர்சனங்களை எழுப்பியபடியே இருக்கிறது.

இந்த சமயத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்.

இதே மாதிரியான வன்மமும் ஆபாசமும் கலந்த பேச்சுக்களை ஒரு ஆண் பேசியிருந்தால், அவர் மீது வழக்கு பாய்கிறது. போக்சோ உள்ளிட்ட பாதுகாப்புச் சட்டங்கள் பாய்கின்றன.

ஆனால், அதேவிதமான ஆபாசமான மிகக் கொச்சையான வசையை, வன்மமான பேச்சை ஒரு பெண் ஒரு நிறுவன ஊழியரிடம் பேசினால், அந்தப் பெண் மீது என்ன விதமான பார்வையை முன் வைக்கிறது நம்முடைய சமூகம்.

இதில் குறிப்பிடப்பட்ட அந்த உணவு விநியோக நிறுவன ஊழியர் மட்டுமல்ல, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பல்வேறு உணவு விநியோக நிறுவனங்கள் இருக்கின்றன.

அதில் பலதரப்பட்ட இளைஞர்கள் குறிப்பாக நன்கு படித்த பட்டதாரிகள் கூட, வேலை சரிவர கிடைக்காத நிலையில், இந்த உணவு விநியோக வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சென்னையில் முதுநிலை பட்டதாரி படிப்பைப் படித்த இளைஞர்கள் கூட இத்தகைய உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

சென்னை போன்ற பெருநகரத்தின் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே எவ்வளவு அவசரமாக அவர்கள் வாகனத்தை இயக்கி அந்த குறிப்பிட்ட உணவுப்பொருளைக் கொண்டு வந்து சேர்த்தாலும்,

எதிர்வினையாக அவர்களுக்கு இந்த மாதிரியான கொச்சையான வார்த்தைகளும் வன்மமான பேச்சும் தான் கிடைக்கிறது என்றால் அந்த இளைஞர்களின் மனநிலை எப்படி இருக்கும்.

அவர்களும் நம்மைப் போன்றவர்களின் வீட்டிலிருந்து வளர்ந்து, வேறு வேலை கிடைக்காத நிலையில், இந்த வேலையை தற்காலிகமாக ஏற்றுக்கொண்டு அதை சிரத்தையாக செய்யும் பிள்ளைகள் தானே?

அப்படிப்பட்ட பிள்ளைகளை ஏன் இம்மாதிரி பொதுவெளியில் காயப்படுத்தி, அதை சமூக ஊடகத்திலும் வெளிப்படுத்துவது எந்த மாதிரியான வன்மத்தை வெளிப்படுத்துகிறது?

இன்று இப்படிப்பட்ட உணவு விநியோக வேலையில் ஈடுபடுகிறவர்கள் நாளையே வேறு வேலை கிடைத்து வெவ்வேறு உயர்நிலை பொறுப்புகளுக்கு வரலாம்.

இன்று உயர் பொறுப்பில் இருக்கிற முக்கியமான விஐபிகள் கூட பால்ய வயதில்  இளநீர் கடையில் வேலை பார்த்ததாகச் சொல்லி இருக்கிறார்கள்.

தன்னுடைய இளம் வயதில் வீடு வீடாகச் சென்று தினசரி செய்தித்தாளை போடுகிற வேலையை செய்ததாக தன்னுடைய நூலில் எழுதியிருக்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம்.

ஆக, எந்தத் தொழிலைச் செய்தாலும் அந்தத் தொழிலைச் செய்கின்ற இளைஞர்களை இழிவுபடுத்துவது என்பது ஒரு வகை மனநோய்.

இறுதியாக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் வார்த்தைகளைவிட இதை பொருத்தமாக சொல்லிவிட முடியாது – “செய்யும் தொழிலே தெய்வம்“.

– யுவி

You might also like