தமிழின் மிக முக்கியமான ஆளுமை கோவை ஞானி!

எழுத்தாளர் சோ.தர்மன்

எழுத்தாளர் கோவை ஞானி மறைவின்போது எழுத்தாளர் சோ.தர்மன் பகிர்ந்து கொண்டவை:

“தமிழின் மிக முக்கியமான ஆளுமை கோவை ஞானி. மார்க்சியம் குறித்த அவரது பார்வை வித்தியாசமானது. அனைத்து தரப்பினருடனும் ஆரோக்கியமான உரையாடலை முன்னெடுப்பவர்.

வயது வித்தியாசம் பார்க்காமல் சகஜமாக அனைவரது சந்தேகங்களுக்கும் பதிலளிப்பவர்.

அதிகம் கற்றவர்களுக்கு இருப்பதாகச் சொல்லப்படும் `ஞானச் செருக்கு’ என்பது கிஞ்சித்தும் அவரிடத்தில் இருக்காது. அனைவரையும் மதிக்கும் எளிமையான பண்பாளர்.

மிகவும் கடுமையான சூழலிலும் இரண்டு இதழ்களை நடத்தியவர். தீராத லட்சிய தாகம் கொண்டவர்களால் மட்டுமே இவ்வாறு தொடர்ச்சியாக செயல்பட முடியும்.

இறுதிவரை தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர். நாம்தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம் அவருக்கு பார்வை பறிபோய்விட்டது என்று.

ஆனால், தனது நுண்ணுணர்வால் தனது பார்வை சவாலை எளிதில் கடந்து விடுகிறார்.

சமீபத்தில் அவருடனான தொலைபேசி உரையாடலின்போது எனது பேச்சை கவனித்தவர்,“என்ன தர்மன் முன் வரிசையில் பல் விழுந்துவிட்டதா” என்று கேட்டார்.

அந்த அளவிற்கு நுட்பமாக அனைத்தையும் கவனிக்கக்கூடியவர்.

எனது ‘கூகை’ நாவல் பற்றி என்னிடம் ஆழமாகப் பேசியுள்ளார். அதுகுறித்து ஒரு கட்டுரை எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார். அவருடைய இழப்பு தமிழுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.”

  • நன்றி – விகடன்
 
You might also like