இன்று நாம் கற்பனைகளைக் காகிதத்தில் பதிய, தேர்வு எழுத, கையொப்பமிட, குறிப்பெடுக்க என பல வகைகளில் பயன்படுத்தி வரும் பேனாவிற்கு பின்னால் சுமார் 5000 ஆண்டு கால சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது.
ஆரம்ப காலத்தில் மனிதர்கள் எழுத்துக்களைப் பயன்படுத்தவில்லை. அவர்கள் குகை சுவர்களில் ஓவியங்களை வரைந்தும், கற்கள் மற்றும் களிமண் பலகைகளில் குறியீடுகளை செதுக்கியும் தகவல்களை பதிவு செய்தனர்.
கிமு 3200-ஆம் ஆண்டு சுமேரியர்கள் (Sumerians) நாணலால் செய்யப்பட்ட எழுத்தாணியைக் கொண்டு களிமண் பலகைகளில் கியூனிஃபார்ம் (Cuneiform) எழுத்துக்களை எழுதத் தொடங்கினர்.
இதுவே உலகின் முதல் பதிவுசெய்யப்பட்ட எழுத்து முறையாகக் கருதப்படுகிறது.
சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பண்டைய எகிப்தியர்கள் (Ancient Egyptians) நைல் நதிக்கரையில் கிடைத்த நாணல்களை வெட்டி, அதன் முனையைப் பிளந்து பேனாவாக உருவாக்கினர்.
மையில் தோய்த்த பிறகு அந்த நாணல், பாப்பிரஸ் (Papyrus) தாள்களில் எளிதாக எழுத உதவியது.
உலகின் முதல் உண்மையான பேனா இதுதான் என்று பல வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.
காலம் செல்லச் செல்ல நாணல் பேனாவுக்கு பதிலாக இறகுப் பேனா (Quill Pen) வந்தது.
வாத்து, அன்னம் போன்ற பறவைகளின் இறகுகளால் செய்யப்பட்ட பேனாக்கள் மிகவும் நெகிழ்வாக இருந்ததால் அழகான கையெழுத்தை உருவாக்க உதவின.
இவை ஐரோப்பாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக முக்கியமான எழுதும் கருவியாக இருந்தன.
19-ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி (Industrial Revolution) தொடங்கியபோது, உலோக நுனி கொண்ட டிப் பேனா (Dip Pen) அறிமுகமானது.
இவை இறகுப் பேனாவைவிட வலிமையாகவும் நீண்ட நாட்கள் பயன்படுத்தக்கூடியதாகவும் இருந்தன.
ஆனால் ஒவ்வொரு முறையும் மையில் தோய்த்துத்தான் எழுத வேண்டியிருந்தது.
அந்தச் சிரமத்தை குறைப்பதற்காக 1827-ம் ஆண்டு ருமேனிய கண்டுபிடிப்பாளர் பெட்ராசே போய்னாரு (Petrache Poenaru) மைப்பேனா (Fountain Pen) வடிவமைப்புக்கான முதல் காப்புரிமையைப் பெற்றார்.
பின்னர் 1884-ம் ஆண்டு அமெரிக்க கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான லூயிஸ் வாட்டர்மேன் (Lewis Waterman) மைப்பேனாவை மேலும் நம்பகமானதாக மாற்றினார்.
அதன்பிறகு மைப்பேனா உலகம் முழுவதும் பிரபலமானது. இருந்தாலும், மை கசிவது, மை அதிகமாக அல்லது குறைவாக வருவது போன்ற பிரச்சனைகள் முழுமையாக தீரவில்லை.

இந்தப் பிரச்சனைகளுக்கு மாற்றாக, 1888-ம் ஆண்டு அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ஜான் ஜே. லவுட் (John J. Loud) ஒரு புதிய யோசனையை முன்வைத்தார்.
பேனாவின் நுனியில் மிகச் சிறிய உலோகப் பந்து (Metal Ball) பொருத்தி, அது சுழலும்போது மையை வெளியே கொண்டு வரும் வகையில் ஒரு பேனாவை உருவாக்கி காப்புரிமை பெற்றார்.
இந்தப் பேனா தோல், மரம் போன்ற கடினமான பொருட்களில் எழுத நன்றாக வேலை செய்தது.
ஆனால், சாதாரண காகிதத்தில் சரியாக எழுதவில்லை. அதனால் அது வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஹங்கேரிய பத்திரிகையாளர் லாஸ்லோ பிரோ (László Bíró) இந்தக் கண்டுபிடிப்பை கவனித்தார்.
செய்தித்தாள் அச்சகங்களில் பயன்படுத்தப்பட்ட மை மிகவும் வேகமாக உலர்வதை பார்த்த அவர், “இந்த மையை பேனாவில் பயன்படுத்த முடியாதா?” என்று யோசித்தார்.
தனது சகோதரரும் வேதியியலாளருமான ஜியோர்ஜ் பிரோ (György Bíró) உடன் இணைந்து, அந்த மையை பேனாவுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்தார்.
அதே நேரத்தில், ஜான் ஜே. லவுட் (John J. Loud) உருவாக்கிய சுழலும் உலோகப் பந்து யோசனையையும் மேம்படுத்தி, காகிதத்தில் மென்மையாக எழுதும் வகையில் மாற்றினார்.
இதன் விளைவாக, 1938-ம் ஆண்டு உலகின் முதல் வெற்றிகரமான நவீன பால்பாயிண்ட் பேனா (Modern Ballpoint Pen) உருவானது.
இரண்டாம் உலகப்போரின் போது, உயரமான இடங்களிலும் மை கசியாமல் செயல்பட்டதால், இந்தப் பேனாவை பிரிட்டிஷ் ராயல் ஏர் ஃபோர்ஸ் (Royal Air Force – RAF) விமானிகள் பயன்படுத்தத் தொடங்கினர்.
இதன் மூலம் பால் பாயிண்ட் பேனாவின் திறமை உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றது.
ஆனால், இந்தப் பேனா இன்னும் சாதாரண மக்களிடம் பரவவில்லை. அப்போது பிரான்ஸ் தொழிலதிபரான மார்செல் பிச் (Marcel Bich), லாஸ்லோ பிரோவின் (László Bíró) வடிவமைப்பின் உரிமத்தை வாங்கினார்.
பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, குறைந்த விலையில், எளிமையான வடிவமைப்பில், அனைவரும் வாங்கக்கூடிய ஒரு பேனாவை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
1953-ம் ஆண்டு அவர் BIC (BIC) நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் BIC Cristal என்ற பால்பாயிண்ட் பேனாவை அறிமுகப்படுத்தினார்.
மலிவான விலை, இலகுவான எடை, நீண்ட நேரம் எழுதும் திறன் ஆகிய காரணங்களால் அது உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இன்று வரை 100 பில்லியனுக்கும் அதிகமான BIC Cristal பேனாக்கள் விற்பனையாகியுள்ளன.
மனித வரலாற்றில் அதிகம் விற்பனையான எழுதும் கருவி என்ற பெருமையும் இதற்கே சொந்தம்.
இந்தியாவிலும் பேனாவின் பயணம் தனித்துவமானது. பழங்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுத மூங்கில் மற்றும் இரும்பு எழுத்தாணிகள் பயன்படுத்தப்பட்டன.
பின்னர் கலம் (Qalam) எனப்படும் நாணல் பேனாக்கள் பிரபலமானது. ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு மைப்பேனாக்கள் இந்தியாவுக்கு வந்தன.
அதன் பிறகு Ratnamson, Camlin, Luxor, Cello போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் பேனா உற்பத்தியை வளர்த்தன.
ஒரு சாதாரண பால்பாயிண்ட் பேனா (Ballpoint Pen) சுமார் 45,000 வார்த்தைகள் வரை எழுத முடியும்.
உலகின் மிகப்பெரிய பேனா ஆச்சார்யா மகுனுரி ஸ்ரீனிவாசா (Acharya Makunuri Srinivasa) என்பவரால் உருவாக்கப்பட்டது. அது 5.5 மீட்டர் உயரமும் 37 கிலோ எடையும் கொண்டது.
உலகின் மிகச்சிறிய பேனா நானோஃபவுண்டன் ப்ரோப் (Nanofountain Probe) ஆகும்.
இது மனிதக் கண்களால் கூட பார்க்க முடியாத அளவுக்கு, வெறும் 40 நானோமீட்டர் அகலத்தில் கோடுகளை வரையக்கூடியது.
பால்பாயிண்ட் பேனாவில் பயன்படுத்தப்படும் மை பொதுவாக எண்ணெய் அடிப்படையிலானது. அதில் 25 முதல் 40 சதவீதம் வரை நிறமிகள் கலந்திருக்கும்.
மேலும் BIC Cristal, நியூயார்க்கில் உள்ள மியூசியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட் (Museum of Modern Art – MoMA) அருங்காட்சியகத்தின் வடிவமைப்பு கண்காட்சியிலும் இடம்பெற்றுள்ளது.
இன்று ஸ்மார்ட் பேனா (Smart Pen), டிஜிட்டல் பேனா (Digital Pen) மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இருந்தாலும், காகிதத்தில் பேனாவால் எழுதும் அனுபவம் ஒரு வித்தியாசமான உணர்வு.
அடுத்த முறை நீங்கள் ஒரு பேனாவை கையில் எடுக்கும்போது, அது வெறும் பிளாஸ்டிக் பொருள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித அறிவு, எண்ணற்ற தோல்விகள், பல கண்டுபிடிப்புகள் மற்றும் உலகையே மாற்றிய சிந்தனைகளின் பயணத்தைத் தாங்கி நிற்கும் ஒரு சிறிய அற்புதம் அதுதான்.
– சங்கீதா