ஏன் என்னை புரிந்து கொண்டீர்கள் அப்பா?

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 16

(தந்தையைப் புரிந்துகொள்ளத் தவறிய வாரிசுகளுக்கும், வாரிசுகளைப் புரிந்து கொள்ளாமல் தவறவிட்ட தந்தையருக்கும் இந்த அனுபவக் கட்டுரை சமர்ப்பணம்)

ங்க அப்பா கொஞ்ச நேரத்திற்கு முன்னாடிதான் இறந்துட்டாரு. கடைசி நேரத்துல அவர் கூட இருக்காம எங்கடா போன?” என்று கத்தியபடி எனது அப்பாவைச் சேர்த்திருந்திருந்த மருத்துவனை வளாகத்திற்குள் நான் நுழைந்ததுமே உறவினர்கள் இரண்டு பேர், என்னை தாக்கிய வேகத்தில் நான் கீழே விழுந்தேன்.

கீழே விழுந்ததும், என் மீது கனமான உதைகள் விழுந்தன.

அதற்குள் மருத்துவமனைக்குள் இருந்த என்னுடைய அம்மா, ஓடி வந்தார்.

“மூணு மாசமா இவன்தான் வேலூர் மருத்துவமனையிலயும் இங்கயும் கூடவே இருந்தான். அவுங்க அப்பாட்ட சொல்லிட்டு தான், ரொம்ப நாள் கழிச்சு பத்திரிகை வேலையா வெளிய போனா. அதுக்குள்ள அவர் இறந்துபோயிட்டாரு. அதுக்கு இவன் என்ன செய்வான்” சொல்லிக் கொண்டிருந்தபோதே கசங்கிய முகத்துடன் அழுதார் அம்மா.

என் கையைப் பிடித்து, அப்பா சேர்க்கப்பட்டிருந்த அந்த மருத்துவமனையிலிருந்த தனி அறைக்கு என்னை அழைத்துக் கொண்டு போனார்.

சுற்றிலும் சில உறவினர்கள் மெல்லிய அழுகையுடன் இருக்க, படுக்கையில் உடல் விரைக்காத நிலையில், இயல்பான முகத்துடன் இருந்தது அப்பாவின் முகம்.

அப்பா!

சிறுவயதில் அத்தையால் வளர்க்கப்பட்டு 6 வயதில் நம்முடைய வீட்டிற்கு வந்ததிலிருந்தே உங்களுடைய ஸ்பரிசம் என் மீது படாதா? என்று நான் ஏங்கி இருக்கிறேன்.

என்னை அத்தை அதாவது உங்களுடைய அக்கா கொஞ்சுகிற மாதிரி என்னை கொஞ்சமாட்டீர்களா என்று தவித்துப் போயிருக்கிறேன்.

ஆனால், வீட்டில் இருந்த 7 பிள்ளைகளில் நானும் ஒருவனாக இருந்ததால், என்னால் உங்களுடன் நெருங்கவே முடியவில்லை. 

அப்பா, ஏன் நமக்குள் இந்த இடைவெளி விழுந்தது? தெரியவில்லை.

அப்பா!

ருத்துவமனை வளாகத்திலிருந்து எனது தந்தையின் உடலைத் தூக்கி ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றுகிறார்கள்.

எனது அம்மாவும், இன்னொரு உறவினரும் அதில் ஏறி பக்கவாட்டில் அமர அம்மா என்னையும் உடன் வரச் சொல்லுகிறார்.

நானும் அந்த வேனில் ஏறிப் பக்கவாட்டில் அமர்கிறேன். எனக்கு பக்கத்தில் அப்பாவுடைய கால் பாதங்கள் இருக்கின்றன.

அந்தப் பாதங்களில் சரிவர வெட்டப்படாத நிலையில், நகங்கள் நீண்டிருக்கின்றன.

அப்பாவின் உடலுக்கு மிக அருகில் அமர்ந்திருந்தாலும், அழுகை கூட வராத மன இறுக்கத்தில் இருந்தேன்.

அதுவரையில்லாத அளவுக்கு மனம் கனத்த நிலையில், அப்பாவின் பாதங்களைப் பற்றிக் கொண்டேன். எங்களது வீடு நோக்கி ஆம்புலன்ஸ் வேனும் நகர்ந்தது.

அப்பா!

த்து வயதிருக்கும் அப்போது. அக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்கப் போயிருந்தார்கள், என்னையும் அழைத்துப் போயிருந்தார்கள்.

பார்த்து முடித்துவிட்டு பெரிய ஹாலில் தரையில் சாப்பாடு பரிமாறப்பட்டது. நீண்ட வாழை இலை. அதில் பல பதார்த்தங்கள். ஓரத்தில் இளஞ்சூடாக ஒரு அப்பளம்.

அப்பளம் அப்போது எனக்குப் பிடித்தமான பொருள். சாப்பாட்டோடு சேர்ந்து அதைச் சாப்பிடுவதைவிட தனியாக அதை எடுத்து மெல்ல மெல்ல அதைக் கடித்து சாவகாசமாய் சாப்பிடுவது எனக்குப் பிடிக்கும்.

அன்றும் அதேமாதிரி இலை ஓரத்தில் அப்பளத்தை மட்டும் கடைசியில் சாப்பிடலாம் என்று ஒதுக்கி வைத்திருந்தேன்.

எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த இன்னொரு உறவினர் கடைசியில் பரிமாறப்பட்ட சேமியா பாயாசத்துடன் அப்பளத்தைக் கலந்து நொறுக்கி சாப்பிட்டபோது, அந்த உறவினரை அந்நியமாகவே பார்த்தேன்.

எல்லோரும் இலையை மூடி வைத்ததும் நான் ஒதுக்கி வைத்திருந்த அப்பளத்தை மட்டும் தனித்து எடுத்து கையைக் கழுவிவிட்டு தனித்து அந்த அப்பளத்தை சாப்பிட முயலும்போது, எங்கிருந்தோ நீங்கள் கவனித்துக் கொண்டிருந்தீர்கள்.

சட்டென்று என்னை நோக்கி வந்து கையிலிருந்த அப்பளத்தைத் தூக்கி வீசிவிட்டு அவ்வளவு பேர் மத்தியில் பலர் தடுக்க தடுக்க என்னை அடித்தீர்கள். வலியைத் தாங்கிக் கொண்டேனே ஒழிய நான் அழவில்லை.

அந்த பால்ய வயதில் கூட அந்த வயதுக்கான இயல்புடன் என்னை ஏன் இருக்கவிடவில்லை அப்பா?

அப்பா!

ம்புலன்ஸ் எங்களுடைய வீட்டை நெருங்குவதற்குள் தகவல் பரவி வீட்டிற்கு முன் கூடியிருந்த கூட்டம் வேனிலிருந்து அப்பாவின் உடல் இறக்கப்பட்டபோது, கத்தியது.

வீட்டின் நடு ஹாலில் அப்பாவின் உடல் வைக்கப்பட்டது.

வேலூர் மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடப்பதற்கு, சில நாட்கள் முன்பு எனது தங்கையின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

அதை குறைந்தபட்சம் வீல் சேரில் அமர்ந்தாவது நான் பார்க்கணும் என்றபடி பிடிவாதம் காட்டியவரை, வேறு வழியில்லாமல் மதுரைக்கு அழைத்துவந்து டயாலிசிசும் நடந்துவந்த நிலையில் தான் பிரிந்திருக்கிறது அப்பாவின் உயிர்.

அப்பா!

ப்பா பால்ய வயதில் எதாவது இசைக்கருவி வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற துடிப்பில் அன்று கையில் மிகவும் சிறிய சேமிப்பை எடுத்துக் கொண்டு எனது சக நண்பர்களுடன் சென்ட்ரல் தியேட்டர் வழியில் உள்ள மியூசிக்கல் ஸ்டோருக்குப் போனோம்.

அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பழைய இசைக்கருவிகளை குறுகுறுப்புடன் பார்த்தோம்.

அவற்றின் விலையைக் கேட்டபோது, அசந்துபோக வேண்டியிருந்தது.

கடைக்காரர் மிகவும் அதிருப்தியுடன், “கையில் எவ்வளவு காசு வைச்சிருக்கீங்க?” என்று கேட்டபோது, எனது சேமிப்பான 150 ரூபாயைச் சொன்னதும் அவர், மூங்கிலால் செய்யப்பட்ட ஒரு புல்லாங்குழலை எடுத்து எங்கள் கையில் கொடுத்தார்.

“நீங்கள் கொடுத்த காசுக்கு இதைத்தான் வாங்க முடியும்” என்றார்.

எங்களுக்கு திருப்தி இல்லையென்றாலும் வேறு வழியில்லாமல் அந்தப் புல்லாங்குழலை வீட்டிற்கு எடுத்துவந்தபோது, வீடே என்னை விசித்திரமாகப் பார்த்தது.

அதோடு மாடிக்குச் சென்று புல்லாங்குழலை என்னால் முடிந்த அளவுக்கு வாசிக்க முயற்சித்தபோது, வீட்டில் உள்ளவர்களின் காதுகளுக்கு அது அலர்ஜி ஆகிவிட்டது.

இரண்டு நாள் பொறுத்துப் பார்த்தார்கள். 15 வயது சிறுவனான நான், தனியாக வேறெந்த ஆசிரியர்களிடமும் பயிலாமல் கற்றுக்கொள்ள முயற்சித்ததை அவர்களின் காதுகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உங்களிடம் போட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

அடுத்த நாள் வழக்கம்போல பள்ளிக்குப் போய்விட்டு வீட்டிற்கு வந்து அந்தப் புல்லாங்குழலை வைத்திருந்த இடத்தில் தேடியபோது, அது அங்கில்லை.

நீங்கள், அந்தப் புல்லாங்குழலை எடுத்து, அடுப்பில் வீசிவிட்டதாகச் சொன்னார்கள்.

முக்கால்வாசி பகுதி கருகிப்போய் மிஞ்சியிருந்த புல்லாங்குழலின் மிச்சத்தை என் கையில் கொடுத்தபோது, அந்த வயதில் என்னால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

குமுறலாக நான் அழுதபோது, அருகிலிருந்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்னுடைய சகோதர, சகோதரிகள்.

அந்த நாளில் என்னிடமிருந்த எதோ ஒரு துறுதுறுப்பான இளம் துடிப்பை ஏன் கருக்கிவிட்டீர்கள் அப்பா?.

அப்பா!

தற்குள் வீடே உறவினர்கள் மயமாகிவிட்டது. அழுகையும் ஒப்பாரியும் அப்பாவின் சடலத்தை ஈசலைப் போல சுற்றிவந்து கொண்டிருந்தன.

அப்பாவுக்கு அருகில் ஏற்றப்பட்டிருந்த சந்தன ஊதுபத்திகளின் வாசம் அந்த விரிந்த ஹாலை நிறைத்திருந்தது.

இன்னும் 3 நாட்களில் தங்கையின் திருமணம். அதைப் பார்ப்பதற்காகவே வந்திருந்த உறவினர்கள், அப்பா சடலமாகிவிட்ட நிலையில், அதை நினைவூட்டி கதறிக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஹாலின் ஓரத்தில் எனது அம்மா, மெல்லிய அழுகையுடன் காலை குத்தவைத்து அமர்ந்திருந்தார். அருகில், விசும்பலுடன் எனது தங்கை உட்கார்ந்திருந்தார்.

“இன்னைக்கே நடத்த வேண்டியதை நடத்தி முடிச்சிட்டு ஏற்கனவே முடிவு பண்ணியிருந்த கல்யாணத்தை தள்ளிப் போடாம நடத்தி முடிச்சிருலாம். அதனால நடக்க வேண்டியதைப் பாருங்க” என்று தீர்க்கமான குரலுடன் முடிவெடுத்தார் கணேசன் மாமா.

வந்திருந்த பெரியவர்களும் ஒப்புக் கொண்டார்கள். வீட்டிற்கு வெளியே அதற்குள் கீற்றுக் கொட்டகை போட்டிருந்தார்கள். அதற்காக நடப்பட்டிருந்த மூங்கில் கம்பில் சாய்ந்தபடி, சங்கு ஊதிக்கொண்டிருந்தார் ஒருவர்.

அந்த வீட்டின் துக்கத்திற்கு ஒலிவடிவம் கொடுத்ததைப் போல, இருந்தது அந்த சங்கிலிருந்து வெளிப்பட்ட சத்தம்.

அப்பா!

16 வயதிலேயே எனக்கு வாசிப்பின் ருசி பழக்கமாயிருந்தது. வேட்கையுடன் கூடிய வாசிப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

தனித்து மாடி அறையில், விடாத புத்தக வாசிப்பு. இரு நூலகங்களிலும் உறுப்பினராகி, புத்தகங்களை எடுத்துவந்து பாரதி, புதுமைப்பித்தன் துவங்கி, ரஷ்ய மொழிபெயர்ப்பு நாவல்கள் வரை பிடிவாதமாய் வாசித்துக் கொண்டிருந்தேன்.

கல்லூரியில் அப்போதுதான் சேர்ந்திருந்தேன். கைச் செலவிற்கு கொடுக்கும் பணத்தை சேமித்து, பழைய புத்தக கடையிலிருந்தும், புதிதாகவும் பல புத்தகங்களை வாங்கி வீட்டில் என்னுடைய பொருட்களை வைத்திருந்த ஒரு அலமாரியில் வைத்திருந்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாய் அந்தப் புத்தகங்களின் எண்ணிக்கைப் பெருகி இரண்டு அடுக்குகளாக உயர்ந்திருந்தது.

பல எழுத்தாளர்கள் எழுத்தின் மூலம் நெருக்கமாகிக் கொண்டிருந்தார்கள். சிலர் நேரடியாகவும் பழக்கத்தில் இருந்தார்கள்.

அந்த எழுத்தாளர்கள் எனக்கு எழுதும் கடிதங்களை, எனக்கு முன்பே நீங்கள்தான் படித்து, சற்றுக் குழம்பியும் போனீர்கள்.

‘நம்முடைய மகன் ஏன் இப்படிப் பித்துப் பிடித்த மாதிரி வாசித்துக் கொண்டே இருக்கிறான்’ என்று வியாபார மனம் கொண்ட உங்களுக்குத் தோன்றியிருக்கலாம்தான் அதில் தவறில்லை.

ஒரு நாள் கல்லூரிக்குப் போய்விட்டு வந்ததும், சகோதரி என்னிடம் சொன்னார், “உன் அலமாரியைப் போய் பாரு”.

நான் போய் பார்த்தபோது, நான் அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள் எதுவுமே அங்கில்லை.

அவற்றை சிறு மூட்டையாகக் கட்டி பக்கத்திலிருந்த இன்னொரு பேராசிரியர் வீட்டுக்கு, கொடுத்து அனுப்பி விட்டதாகச் சொன்னார்கள்.

குமைந்து போனேன்.

அந்த இளம்வயதில், என்னிடமிருந்த வாசிப்புக்கூட ஏன் உங்களுக்குப் பிடிக்காமல்போனது அப்பா?

அப்பா!

வீட்டிலிருந்து அப்பாவின் சடலத்தைத் தூக்கிக் கொண்டு வந்து வெளியே பூவால் அலங்கரிப்பட்டிருந்த பாடையில் வைத்து, சந்து முனைக்குப் போகிறவரை பொட்டழித்த நிலையில் எனது அம்மாவும் கூடவே என் சகோதரிகளும் உறவினர்களும் தெருமுனைக்கு வந்து திரும்பியபோது, அழுகை ஒலி இன்னும் வலுத்தது.

தத்தனேரி மயானத்தை நோக்கி நாங்கள் கூட்டமாக போனபோது, கொள்ளிச் சட்டியை ஏந்தியபடி எங்களுக்கு முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்தார் என்னுடைய இளைய சகோதரன்.

ஊதுபத்திகளின் மணமும், சங்கின் ஒலியும் கூடவே நகர்ந்து வந்தன.

அப்பா!

சென்னையிலிருந்து வந்திருந்த ஒரு மூத்த எழுத்தாளரை சந்திக்கப் போயிருந்தேன்.

வீட்டில் அம்மாவிடம், “வர்ற கொஞ்சம் லேட் ஆகும்” என்று சொல்லிவிட்டுத்தான் போயிருந்தேன்.

நேதாஜி சாலையிலுள்ள நண்பரின் வீட்டு மாடி அறையில் அந்த மூத்த எழுத்தாளர் பேசிக் கொண்டுபோக எதிரே இருந்த ஏழெட்டு பேரில் வயது குறைந்த எளிய வாசகனாக நானும் உட்கார்ந்திருந்தேன்.

உன்னிப்பாக அவரது பேச்சை கவனித்துக் கொண்டிருந்ததில் நேரம் கடந்ததே தெரியவில்லை.

இரவு 12 மணி ஆகியிருக்கும். அங்கிருந்து சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பி வீட்டின் கதவைத் தட்டியதும், கதவைத் திறந்தவர் அம்மா.

அதற்குப் பின்னாலேயே நீங்கள் முகம் முழுக்க கடுகடுப்புத் தெரிய நின்று கொண்டிருந்தீர்கள்.

நுழைந்ததுமே மிகவும் கூசக் கூடிய வார்த்தைகளை எனக்கெதிரே பேசினீர்கள். முகத்தில் விழுந்த அடி, அடுத்தடுத்து உடலுக்கும் இடமாறியது.

“ஒரு எழுத்தாளரைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன்” என்று நான் சொன்னபோதும், அருகிலிருந்த அம்மா எவ்வளவோ தடுத்தபோதும், மிகக் கேவலமான வார்த்தைகளை இரைத்த படியே என்னை தாக்கினீர்கள்.

எனது சகோதரிகள் எழுந்துவந்து தடுத்தப் பிறகுதான் என் மீதான தாக்குதலை நிறுத்தினீர்கள்.

நான் மதிக்கும் எழுத்தாளரைச் சந்தித்துவிட்டு வந்ததற்காக எதற்கு இப்படி ஒரு அவமானகரமான தண்டனையைக் கொடுத்தீர்கள் அப்பா?

அப்பா!

யானத்தை நோக்கி ஊர்வலமாய்ப் போய்க் கொண்டிருந்தோம். பாடையில் இருந்த பூக்களைச் சிலர் பறித்து கீழே எறிந்து கொண்டே வந்தார்கள். சுமார் நூறு பேருக்குமேல் அந்த ஊர்வலத்தில் இருந்தார்கள்.

அவர்களில் அப்பாவுடன் தொழில் ரீதியாக பழகியவர்களும் வந்திருந்தார்கள்.

ஏறத்தாழ ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நாங்கள் நடந்தபடியே போனாலும், அனைவருக்கிடையிலுமே ஒரு கனத்த மௌனம் நிலவியது.

அப்பா!

ங்களது அரசியல் பார்வையே என்னால் விளங்கிக் கொள்ள முடியாவிட்டாலும் கூட, வீட்டில் நீங்கள் வைத்திருந்த படங்கள் உங்கள் பார்வையை வெளிக்காட்டின.

திராவிட இயக்க ஐம்பெரும் தலைவர்களின் படத்தை பிரேம் செய்து, வீட்டின் முன் அறையிலிருந்த ஹாலில் வைத்திருந்தீர்கள்.

அண்ணா சென்னையில் மறைந்த செய்தி கேட்டு, லாரியைப் பிடித்து சென்னைக்குப் போய் அலுப்புடன் திரும்பி வந்தீர்கள்.

அப்படிப்பட்ட பார்வை உங்களுக்கு இருந்தாலும், தமிழ் மொழி சார்ந்த போராட்டத்திற்காக நானும் எனது சக மாணவர்களும் 20 வயதில் போராடி மதுரை சிறையில் வைக்கப்பட்டபோது, அதைக் கேவலமாக உணர்ந்திருக்கிறீர்கள்.

4-வது நாள் என்னை ஜாமீனில் எடுத்தீர்கள். சிறை வாசலுக்கு முன்பு அந்த வளாகத்திலிருந்த மரங்களுக்கு அடியில், அடர்த்தியான நிழலைப் போல, நீங்களும் என்னுடைய நண்பனும் நின்றிருந்தீர்கள்.

ஆட்டோ ஒன்றைப் பிடித்து, வீட்டிற்குள் நுழைந்ததுமே சிறைக்கு நான் போனதைப் பற்றி மிகவும் கேவலமான வார்த்தைகளைப் பேசி, எதோ குற்றவாளியைப் போல என்னை உணரவைத்து ஒரு கம்பு உடையும்வரை என்னை தொடர்ந்து அடித்தீர்கள்.

மொழி உணர்வால், உருவான இயக்கத்தைப் புரிந்துகொண்டு, அவர்களுடைய புகைப்படத்தை வீட்டில் மாட்டி வைக்கத்தெரிந்திருந்த உங்களுக்கு உங்களுடைய மகனின் மொழி சார்ந்த ஒரு போராட்ட உணர்வைக் கூட ஏன் புரிந்துகொள்ள முடியாமல் போனது அப்பா?.

அப்பா!

யானத்தில் ஏற்கனவே இரண்டு பிணங்கள் வந்து இறங்கியிருந்தன. அதையொட்டி சிறு சிறு கூட்டமும் நிறைந்திருந்தது.

சில ஒப்பாரிகளும் கேட்டுக் கொண்டிருந்தன. பாடையிலிருந்து அப்பாவைக் கீழிறக்கி அவரை புதைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

இறுதி நேரத்தில் கொள்ளிச் சட்டி உடைக்கும் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன.

அந்தக் கொள்ளிச் சட்டியை ஏந்திவந்த எனது இளைய சகோதரனை மட்டும் மயானத்தில் முன்னிலைப்படுத்தி தரையில் அமர வைத்து மொட்டையடித்துக் கொண்டிருந்தார் நாவிதர்.

மயானத்திற்கு மேலே சில காக்கைகள் கூச்சலுடன் பறந்து கொண்டிருந்தன.

அப்பா!

டுமையான உழைப்புடன் வியாபாரத்திலேயே கவனம் செலுத்திவந்த உங்களுக்கு சர்க்கரை நோய் முற்றி, கிட்னி பாதிக்கப்பட்டபோது பதறிப் போனேன்.

அதுவரை உங்களிடமிருந்து வந்த கம்பீரம் எங்கேயோ தொலைந்துபோய்விட்டது.

சேவிங் செய்யப்படாத முகத்துடன் உங்களைப் பார்க்க எங்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது.

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, கிட்னி மாற்று அறுவை சிகிச்சையை வலியுறுத்தினார்கள் மருத்துவர்கள்.

கிட்னியை யார் கொடுப்பது?

மருத்துவமனையில் 3 மாதங்களாக கூடவே இருந்த நான், “என்னுடைய கிட்னியைத் தருகிறேன்” என்று மருத்துவமனையில் வழக்கத்திற்கு மாறாக நலிவடைந்திருந்த உங்களுடைய கைகளைப் பிடித்து நான்சொன்னபோது, சற்றென்று சிறு குழந்தையைப் போல அழுதீர்கள்.

கூடவே இருந்த அம்மாவும் அழுதார்.

அப்போது திருமணமாகாமல் இருந்த நீ கிட்னியைக் கொடுக்க வேண்டுமா என்று திரும்பத் திரும்ப என்னிடம் கேட்டீர்கள். என்னுடன் பிறந்தவர்களிடமும் கேட்டீர்கள். அவர்கள் யாரும் கிட்னியைக் கொடுக்க முன்வரவில்லை.

“நான் தர்றதா சொல்லிட்டப்ப நீங்க ஏன் மத்தவங்ககிட்ட கேட்கணும்” என்று உலர்ந்த குரலில் நான் உங்களிடம் சொன்னபோது, நீங்கள் அதுவரை நான் பார்த்திராத அப்பாவாக என்னிடம் பரிவு காட்டினீர்கள்.

வைகை நீர்ப்பாசன வசதியுடன் நமது சொந்த கிராமத்திலிருந்த ஆறரை ஏக்கர் நிலத்தை விற்று வந்த பணத்தையும் பழம் தொழிலுடன் கூடவே செய்து வந்த பைனான்ஸ் தொழிலையும் வைத்திருந்த சுமார் 45 லட்ச ரூபாயை,

“உன்னுடைய பொறுப்பில இந்தப் பணத்தை கொடுக்குறேன், நீ பார்த்துக்கோ” என்று அன்புமயமாக நீங்கள் சொன்னபோது, நான் வாங்க மறுத்தேன்.

“அந்தத் தொழிலுக்கான மனசு எனக்கு இல்லைப்பா, அதனால எனக்கு வேணாம்” என்று மென்மையாக நான் சொன்னபோது,

“ஏன் பணத்தாசையே இல்லாம இருக்க, நீ எப்படிதான் பிழைக்கப் போறியோ, எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்குப்பா” என்றபடி அருகில் வரவழைத்து என் கைகளைப் பிடித்தபடி நீங்கள் புதிய அப்பாவாக தெரிந்தீர்கள்.

உங்களுடைய வெறுப்பையும் அடிகளையும் பொறுத்துக் கொண்ட என்னால், அந்த நேரத்தில் நீங்கள் காட்டிய அன்பின் சுமையைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

57 வயதிலேயே எங்களைவிட்டு நீங்கள் பிரிந்திருக்கக் கூடாதுதான்.

நான் ஏன் இவனைப் புரிஞ்சுக்காமயே போயிட்டேன். இவனை எவ்வளவு அடிச்சிருக்கே, அசிங்கப்படுத்தியிருக்கேன். ஆனாலும், எனக்கு இவ கிட்னி கொடுக்க வந்துருக்கான். இவனுக்கு நான் என்ன செஞ்சிருக்கேன்”

– என்று சொன்னபடி வாய் சற்றுக் கோணியபடி அழும் உங்களுடைய முகத்தைப் பார்க்கவே எனக்கு தெம்பு இல்லாமல் போனது.

எப்படி நம் உறவுக்குள் இந்தவிதமான இடைவெளி விழுந்தது அப்பா?.

அப்பா!

மயானத்தின் எதிரே உள்ளே ஆற்றில் குளித்துவிட்டு, வீட்டிற்குள் நுழைகிறபோதும் சிறு சிறு அழுகை ஒலிக் கேட்டது.

ஹாலில் உட்கார்ந்திருந்த அம்மாவின் பக்கத்தில் அமர்ந்து அவரது கைகளைப் பற்றிக் கொண்டபோது, அவர் மெதுவாக என் தோளைத் தட்டிக் கொடுத்தார்.

எதிரே அப்பாவின் புகைப்படம். அருகில் ஊதுபத்தி மணத்தது.

புகைப்படத்தில் இருக்கும் அப்பாவின் முகத்தைப் பார்க்கிறேன்.

மலர்ச்சியான முகத்துடன் இருந்த அப்பாவின் முகத்தைப் பார்த்ததும் அதுவரை எனக்குள் இருந்த மன இறுக்கம் குழைந்து, கண்ணீர் கதகதப்புடன் கன்னத்தில் நீர்க் கோடாக இறங்கியது.

மூளைக்குள் பூரான் புகுந்ததைப்போல கனத்த ஒரு கேள்வி எழுந்து என்னை படாதபாடு படுத்தியது.

வாழும்வரை சரிவர புரிந்துகொள்ளாமல், உயிர்ப் பிரியும் அந்த வலி மிகுந்த நேரத்தில், என்னை ஏன் புரிந்து கொண்டீர்கள் அப்பா?

– மணா

You might also like