கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 18
‘எந்தவொரு கிரிமினல் தனத்திற்கும் ஒரு எல்லை உண்டு.’
இந்த வாசகத்தைப் படிக்க நேர்கிறபோது சிலர் ஆச்சர்யப்படலாம், சிலர் முரண்பாடாகவும் நினைக்கலாம்.
கிரிமினல் மயமானவர்கள் பல்வேறுத் துறைகளிலும் ஊடுருவி பேராதிக்கம் செலுத்துவது அதிகரித்து வரும் நிலையில், அளவு கடந்த ஊழலும் எல்லையற்ற கிரிமினல் போக்கும் கூடிக் கொண்டுவரும் காலச் சூழலில், மேலே சொன்ன தலைப்பு வியப்பளிக்கலாம்தான்.
ஆனால், இந்த வாசகம் அனுபவப்பூர்வமாக உணர்ந்த உண்மை.
அதைப்பற்றி நேரடியாக என்னுடைய அனுபவத்தில் உணர்ந்த பதிவுகள் இங்கே…
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ‘குற்றம் நடந்தது என்ன?’ என்கிற பிரபலமான தொடருக்கான இன்புட் எடிட்டராக அப்போதிருந்தேன்.
ஒரு வாரத்திற்குமேல் தொடர்ந்து பல்வேறு கிரிமினல் குற்றம் செய்தவர்களை நேரடியாகப் பார்த்து அவருடைய அனுபவங்களை காட்சிப்பூர்வமாக பதிவு செய்வது என்பது எத்தகைய சவால் என்பதை அனுபவித்துப் பார்த்தவர்கள்தான் புரிந்துகொள்ள முடியும்.
அந்தத் தொடருக்காக பல கிரிமினல் குற்றவாளிகளைச் சந்தித்திருக்கிறேன்.
குறிப்பாக பெண்களுக்கு கொடூரமான பாணியில் பல இன்னல்கள் விளைவித்தவர்களை சந்தித்த அனுபவங்கள் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன்.
சிலவற்றை எடிட் செய்து விஜய் தொலைக்காட்சியிலும் பல ஒப்புதல் வாக்குமூலங்கள் வெளியாகி மீடியா மொழியில் சொன்னால், ‘பெரும் பரபரப்பை’ ஏற்படுத்தின.
அந்தத் தொடரில் வெளியிடாத அல்லது வெளியிட முடியாத இரண்டு அனுபவங்கள் மட்டும் இங்கே:
பெரும் கோவில் நகரம் அது. அதன் புறநகர் பகுதியில் சற்று ஓடு வேய்ந்த வீடுகள் அதிகப்பட்டிருந்த பகுதியில், மாநகர் சார்பில் கட்டப்பட்டிருந்த 6 கழிப்பறைகள் இருந்த அந்தக் கட்டிடப் பகுதிக்கு அழைத்துச் சென்றார் மலையாண்டி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).
அந்தக் கழிப்பறை பகுதிக்கு மிக அருகிலுள்ள ஓடு வேய்ந்த கட்டிடத்தில் உட்கார்ந்து தன்னுடைய அனுபவங்களை அவர் உணர்ச்சிகரமாகச் சொல்ல, அதை பதிவுப் பண்ணிக் கொண்டிருந்தார் ஒளிப்பதிவாளர். பக்கத்தில் இரு உதவியாளர்கள்.
கேமராவிற்கு அருகில் ஒரு மர ஸ்டூலில் நான் மலையாண்டிக்கு நேரெதிரே உட்கார்ந்திருந்தேன்.
“வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குறதுதான் என்னோட முக்கியமான வேலை. இதோ இந்தப் பகுதியில தான் என்னுடைய வீடு. எனக்குனு ஒரு அடியாள் கூட்டம், எப்பவுமே கூட இருக்கும்.
பல லட்சக் கணக்கில் நான் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கியிருக்கிறேன்.
நானும், வசூல் பண்ணது அதிகப்படியான வட்டிதான். சிலவற்றை மீட்டர் வட்டி என்று வசூல் பண்ணியிருக்கோம்.
என்னோட குணத்தைத் தெரிஞ்சுதான் என்கிட்ட பலர் வட்டிக்கு வாங்கி இருக்காங்க.
சில அரசியல்வாதிகள் அவுங்களோட கருப்புப் பணத்தை என்கிட்ட கொடுத்து மாதா மாதம் ஒரு வட்டியை என்கிட்ட வாங்கிக்கிருவாங்க. அந்தப் பணத்தை நான் கூடுதல் வட்டிக்கு மத்தவங்க கிட்டக் கொடுப்பேன்” என்று சொல்லிவிட்டு சற்று நேரம் கனத்த மௌனத்துடன் இருந்தார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு பெருமூச்சுடன் பேச்சைத் தொடர்ந்தார்.
பக்கத்திலிருந்த கழிப்பறைக் கூடத்தைச் சுட்டிக் காண்பித்து, “வட்டியை சரியா கொடுக்காத பலரை இங்கத் தூக்கிட்டு வந்திடுவே. வந்து இங்க இருக்கிற கக்கூஸ்ல அடைச்சு அவுங்க சாப்பிடுறதுக்கு மட்டும் சோத்த வைச்சு, கதவை வெளிய அடைச்சிடுவேன்.
இப்படி ஆறு கக்கூஸ்ல இருந்து எதாவது கத்தலோ, அழுகையோ கேட்டுட்டேதான் இருக்கும்.
கொஞ்சம் தூரத்துல இருக்கிற போலிஸ் ஸ்டேஷனுக்கு மாதா மாதம் மாமூலை சரியா கொடுத்துறதுனால, அவுங்க யாருமே இதுல தலையிட மாட்டாங்க.
என்னால பாதிக்கப்பட்டவங்க புகார் தந்தாலும், வாங்கிக்க மாட்டாங்க. இந்தக் கக்கூஸ்ல அடைக்கப்பட்ட நாளைஞ்சு நாளைக்குள்ளேயே அவுங்க சொந்தக்காரங்க எப்படியோ பணத்தைப் பொரட்டி வந்து இங்க அடைபட்டிருந்த அவுங்க வீட்டுக்காரங்களை அழைச்சிட்டுப் போயிருக்காங்க.
அப்படி இல்லை, யாருமே வரலைனா, இங்கயே பக்கத்தில இருக்கிற ஒரு ஆஸ்பத்திரிக்கு தகவல் சொல்லி, அவுங்க வாயைப் பொத்தி கொண்டுபோயிருவோம்.
சில சமயம் காருக்குள்ள ஏத்துனவுடனேயே மயக்க ஊசிப் போட்டுருவோம். அங்கபோய் அவுங்க இடுப்பு ஓரத்துல ஆப்ரேசன் பண்ணி ஒரு கிட்னியை எடுத்துருவோம். 3 நாளைக்கு மேல அதே ஆஸ்பத்திரியில அவுங்க மயங்கின நிலையிலேயே இருப்பாங்க.
பிறகு, அவுங்கள அவுங்களோட வீட்டுக்கு கார்லயே கொண்டுபோய் விடறப்ப அந்த நிலையில அவுங்களைப் பாக்குற அவுங்க குடும்பத்துக்காரங்க கதறுகிற கதறல் பயங்கரமா இருக்கும்.
இருந்தாலும் யாரும் எந்தப் புகாரும் செய்ய முடியாது.
சற்று இடைவெளிவிட்டவர் பேச்சைத் தொடர்ந்தார்.
“இப்படியே கடந்த 7, 8 வருஷத்துல 80-க்கும் மேற்பட்டவங்க கிட்னியை எடுத்துருக்கேன். அதோட, இன்னொன்னையும் செய்வேன்.
வட்டிக்குப் பணம் கொடுக்காதவங்க வீட்ல புகுந்து நடுத்தர வயசோ, இளம் வயசோ, அவுங்க பொண்டாட்டியைக் கடத்திட்டு வந்து, இங்கிருந்து 20 கிலோ மீட்டர் தள்ளியிருக்கிற தோட்டத்து வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிருவேன். என்ன கத்துக் கத்தினாலும் அங்க ஒன்னும் கேக்காது.
ஒரு படத்துல வர்ற மாதிரி அங்க கொண்டுவர்ற பெண்களை நானும் தொட்டுருக்கேன். என் கூட்டாளிகளும் தொட்ருக்காங்க. அங்க நடக்கிற கொடுமை தாங்காமல் அந்தப் பெண்கள் ஒரு வாரத்துல தூக்குப் போடக் கூட முயற்சி பண்ணியிருக்காங்க.
இரண்டு வாரத்திலயோ அல்லது ஒரு மாசத்திலயோ அவுங்கள அவுங்க வீட்ல கொண்டு விட்டிருக்கோம்” என்று அவர் சொல்லிக் கொண்டு வந்தபோதே, கேட்டுக் கொண்டிருந்தவர்களின் மனம் கனத்துப்போனது.
“இதெல்லாம் எப்ப முடிவுக்கு வந்துச்சு?”
“இருப்பா சொல்றேன்” என்றவர், அந்த அனுபவத்தைச் சொன்னார்.
“நமக்கு நல்லாத் தெரிஞ்ச குடும்பம் அது. இருந்தாலும் என்கிட்ட வட்டிக்கு வாங்கி அந்தப் பொண்ணோட தகப்பன் ஒரு கிட்னியை ஏற்கனவே பறிகொடுத்திருக்கான்.
அவனுக்கு ஒரே பொண்ணு. ஒல்லியா நல்லா அழகா இருக்கும். அந்தப் பொண்ணுக்கு கல்யாணம்னு சொல்லி, என்கிட்ட அதேமாதிரி வட்டிக்குப் பணம் கேட்டான். நானும் அவன் கேட்டப் பணத்தைக் கொடுத்தேன்.
ஆனால், என்ன நடந்துச்சோ தெரியல, அந்தக் கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடியே ஏதோ பிரச்சனை வந்து நின்னுப்போச்சு.
தகப்பனும் வட்டிக் கொடுக்கல. இரண்டு மாசம் பொறுத்த நான், என்னுடைய குணத்தைக் காட்டிட்டேன். அவன் வீட்டுக்குள்ளப் புகுந்து அவனோட மகளைத் தூக்கிட்டு என்னுடைய தோட்டத்து வீட்டுக்குக் கொண்டு போயிட்டேன்.
அப்போ தொடர்ச்சியா மழை பெஞ்சிட்டு இருந்த நேரம். அங்கக் கூட்டிட்டுப் போய், அந்தப் பெண் இருந்த ஒவ்வொரு நாள்லயும் பல சித்ரவதைகளை அந்தப் பொண்ணு அனுபவிச்சுச்சு.
ஒரு வாரத்திலேயே சித்த பிரமை பிடிச்ச மாதிரி ஆகிடுச்சு. எதுவுமே பேச முடியாத நிலைக்குப் போயிடுச்சு.
பாத்துக்கிட்டிருந்த எங்களுக்கே மனசு தாங்கலை. அந்தப் பொண்ண அழைச்சிக்கிட்டு அவுங்க வீட்ல விடப்போனப்போ கடன் வாங்கியிருந்த அவுங்க அப்பா 8 நாளைக்கு முன்னாடி தற்கொலை பண்ணியிருக்காரு.
அவரோட 8-ம் நாள் திதி நடந்திட்டு இருந்துச்சு. ரொம்ப கத்தல் கத்தி அந்தப் பொண்ணு வீட்டுக்குள்ள அழைச்சிட்டுப் போனாங்க.”
பெருமூச்சுடன் இதைச் சொன்னவர், நிறைவாக இன்னொன்றையும் சொன்னார்.
“ஆனா, மத்தவங்களுக்குத் தெரியாதுன்னு நாம செய்ற கொடுமையெல்லாம் ஒருவன் பார்த்துக்கிட்டே இருக்கான்பா. அதுக்கான தண்டனையும் அவன் கொடுக்குறான்.
நான் பண்ணிக்கிட்டிருந்த தொழிலுக்கு முழுக்குப் போட்ட ஒரு வாரத்திலேயே எனக்கு என்ன ஆச்சுத் தெரியுமா?”
“சொல்லுங்க” என்றதும் தொடர்ந்தார்.
“அவ்வளவு பேரோட கிட்னியைப் புடுங்கி பல பெண்களைப் பாடாய்ப்படுத்தினேன். இப்ப, என்னோட ரெண்டு கிட்னியும் செயலிழந்துப் போயிடுச்சு. டயாலிசஸ் பண்ணிட்டு இருக்கேன். என்ன.. மத்தவங்களோட வலி இவ்ளோ லேட்டா தெரியுது.” என்று சொல்லிமுடித்தார்.
முற்பகல் செய்யின் பிற்பகல் எப்படி விளைந்திருக்கிறது?
அதேமாதிரி எதாவது காரணத்தை முன்வைத்து வீட்டைக் காலி செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்களையும் இந்தத் தொடருக்காக சந்திக்க நேர்ந்தது.
ஒல்லியான உடம்புடன் தாதா என்கின்ற அடைமொழிக்கு சற்றும் பொருந்தாத தோற்றத்துடன் இருந்தார் நான் சந்தித்த 55 வயதான அந்த நபர் குருசாமி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது).
வாடகை வீட்டில் இருந்து கொண்டு, பிடிவாதமாக வெளியேறாமல் இருப்பவர்களையும், சொத்தாசைக்காக அந்த வீட்டைவிட்டு நகராதவர்களையும் எப்படியாவது வீட்டைவிட்டு வெளியேற்ற வைப்பதே, இவருடைய தொழிலாக இருந்திருக்கிறது.
இதற்காக அட்வான்ஸ் வாங்கிய பின் இவர்கள் செய்யும் வில்லத்தனங்கள் அதீதமானவை. நள்ளிரவில் ஓடு வேய்ந்த வீட்டின் மேலே சில ஓடுகளை அகற்றி மனிதக் கழிவுகளை கொட்டுவதும் அதில் ஒரு வகை.
பல்வேறு மிரட்டல்கள் விடுத்தும் வீட்டைவிட்டு நகராதவர்களை வீடுகளுக்குள் சில விஷ ஜந்துக்களை விடுவது இன்னொரு வகை.
இதைவிடக் கொடுமையாக ஒரு அனுபவத்தைச் சொன்னார் நமக்கு முன் பேசிக் கொண்டிருந்தவரான குருசாமி.
“ஏறத்தாழ 2 மாதங்களாக என்னென்னமோ முயற்சி பண்ணியும் அந்த வீட்டுக்காரங்க அந்த வீட்டை விட்டு போகல.
இவ்வளவுக்கும் அவர்களை அந்த வீட்டைவிட்டு போக வைக்க எங்களுக்கு பணம் கொடுத்தவரே அவருடைய சொந்த உறவினர்தான்.
இதற்காக அதிரடியான ஒரு அனுபவத்தை அந்த வீட்டிற்குள் செய்தோம்.
ஒரு பாம்பு பிடிப்பவரைச் சந்தித்து, 5 பாம்புகளை எடுத்து வரச்சொன்னேன். அதில், 4 தண்ணீர் பாம்புகள். ஒரு பாம்பு கொடிய விஷமுள்ள நல்ல பாம்பு.
காலை பத்தரை மணி இருக்கும். கனத்த தோல் பையில் பாம்புகளைக் கொண்டு வந்திருந்தார் அந்த பிடாரன்.
அந்த வீட்டுக் கதவைத் தட்டி அவர்கள் கதவைத் திறந்ததும், அந்தப் பாம்புகளை விட்டுவிட்டு நாங்கள் ஓடிவிடுவது என்பதுதான் திட்டம்.
ஆனால், நாங்கள் எதிர்பார்த்தற்கு மாறாக நாங்கள் போன வேளை, அந்தக் கதவு லேசாகத் திறந்திருந்தது. மேலே கட்டியிருந்த கயிற்றை கழட்டிவிட்டு அந்தத் கனத்த தோள் பையிலிருந்த பாம்புகளை வீட்டிற்குள் கொட்டினார் பிடாரன்.
அவ்வளவுதான். நாங்கள் வெளியே வந்துவிட்டோம். அந்த வீட்டிற்குள் மொத்தம் 5 பேர் இருப்பதாக எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது.
ஆனால், அன்றைக்குப் பார்த்து யாரோ கைக்குழந்தையுடன் கூடிய ஒரு பெண்ணும் அங்கு வந்திருக்கிறார்.
சற்று நேரம் கழித்து, கம்பி போட்ட ஜன்னல் வழியாக நான் உள்ளே பார்த்தபோது, நடுக்கூடத்தில், ஒரு பெண் குழந்தை உள்ளாடையும் கொலுசுமாக உட்கார்ந்திருந்தது.
அதன் பக்கத்தில் நெளிந்த பாம்பை குழந்தைத் தனத்துடன் தொட்டுப் பார்க்க முயற்சித்தது. அது விஷமுள்ள பாம்பா? அல்லது விஷமற்ற பாம்பா என எனக்குத் தெரியவில்லை.
மின்னல் வெட்டியதைப் போல சட்டென்று உடம்பு முழுக்க ஒருவித அதிர்ச்சியாக இருந்தது.
ஒரு வாரத்திற்கு முன்புதான் என்னுடைய மகள் வயிற்று பேத்தியை பழனிக்கு அழைத்துச் சென்று மொட்டைப் போட்டு வந்திருந்தேன்.
இந்தக் குழந்தையைப் பார்த்ததும் சட்டென்று எனது பேத்திதான் நினைவுக்கு வந்தாள்.
உடனே பக்கத்து டீக்கடையில் டீக் குடித்துக் கொண்டிருந்த பாம்பு பிடாரனையும் என்னுடைய சகாக்கள் ரெண்டு பேரையும், “உடனே வாங்க, அந்த வீட்டுக்குள்ள போய் பாம்புகளை பிடிச்சாகணும். அதுக்கான காரணத்தை நான் பிறகு சொல்றேன்” என்றதும் அவர்களும் ஓடி வந்தார்கள், பிடாரனும் வந்தார்.
வீட்டுக் கதவைத் தட்டினோம். “கார்ப்பரேஷன்ல இருந்து வந்துருக்கோம். உங்க வீட்ல பாம்பு புகுந்துருக்கானு பார்க்கணும்” என்று நாங்கள் சொன்னோம்.
அன்னைக்கு காலையில தான் அடைமழை பேஞ்சு ஓஞ்சதுனால நாங்க சொன்னதும் நாங்க சொன்னதை எந்தக் கேள்வியும் கேட்காமல் நம்புனாங்க.
வீட்டிலிருந்த அவர்கள் பதறிப்போய் வெளியே ஓடி வந்தாங்க. நடுக்கூடத்திலிருந்த அந்தக் குழந்தையை நான்போய் தூக்கிக் கொண்டேன்.
அதற்குள், நான்கு பாம்புகளை பிடித்து அந்தத் தோல் பையிற்குள் போட்டுவிட்டார்கள். விஷமுள்ள பாம்பு மட்டும் காணவில்லை.
சமையலறையின் ஓரத்தில் ஒரு பாத்திரத்திற்குப் பின்னால், மறைந்திருந்த அந்தப் பாம்பைப் பிடித்துப் பையில் போட்டார் பிடாரன்.
ஒரு வழியாக வீட்டைவிட்டு வெளியே வந்தோம். அவர்கள் வீட்டிற்குப் பக்கத்திலிருந்த சாக்கடைக் கால்வாயிலிருந்து 2 பாம்புகள் அங்கே நுழைந்திருப்பதாகவும், அதைப் பிடிக்கத்தான் வந்திருப்பதாகப் பொய்யைச் சொல்லி என் கையிலிருந்த குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தப் பிறகுதான் எனக்குள் அதுவரை இருந்த பரபரப்பு அடங்கியது.
வெளியே வந்ததும் என் சகாக்களுக்கும், பிடாரனுக்கும் உரிய பணத்தைக் கொடுத்தேன்.
அந்த வீட்டிற்குள் நுழைய எங்களை அனுப்பியவரையும் அன்று மாலை சந்தித்து அவர் கொடுத்தப் பணத்தை திருப்பிக் கொடுத்தேன்.
அவர் காரணம் கேட்டபோது, “இனி ஒருபோதும், இந்த மாதிரி வேலையில் ஈடுபட மாட்டேன். நீங்களும் இதுமாதிரி செய்யாதீர்கள்” என்று மட்டும் சொல்லிவிட்டு மறுநாள் அடுத்த மாவட்டத்திலிருக்கிற என் குலதெய்வக் கோவிலுக்குப் போனேன்.
அங்கு கையில் நெய் ஊற்றி, அதில் திரியைக் கொளுத்தி அவ்வளவுக் கைச்சூட்டையும் தாங்கிக்கொண்டு இனிமேல் இம்மாதிரி தொழில்ல ஈடுபட மாட்டேன்னு சத்தியம் செய்தேன்.
இப்போது, ஒரு பாத்திரக்கடையில் வேலை பார்க்கிறேன்.” என்று சொன்னவர், தன்னுடைய உள்ளங்கையில் சூடுபட்ட காயத்தைக் காண்பித்தார்.
மெல்லிய மெழுகுப் படர்ந்தைப் போல வட்டமாய் ஒட்டியிருந்தது அந்த வடு.
குற்றத்தை எதோ ஒரு காரணத்திற்காக செய்யலாம். அந்தக் குற்றத்திற்கு நீதிமன்றம்கூட தண்டிக்காமல் போகலாம்.
ஆனால், அதில் ஈடுபடுகிறவர்களின் மனம் காலம் தவறியாவது அவரைத் தண்டிக்கிறது அல்லது நெய் விளக்கால் சூடான வடுவைப் போல் தனக்குத்தானே தண்டனை விதித்துக் கொள்கிறது.
இப்படியும் மனதால் சுட்ட சில வடுக்கள் இருக்கத்தான் செய்கின்றன!.