கருத்து மாறுபட்டாலும் மாறாதிருந்த நட்புணர்வு!

கொஞ்சம் சூடு கொஞ்சம் கனிவு – 17

‘அரசியலிலோ, கருத்தியலிலோ நம்முடன் முரண்பட்டவர்களிடம் நாம் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை’ என்று அரசியலிலோ சமூக செயல்பாட்டு இயக்கங்களிலோ இருக்கிறவர்கள் வேண்டுமானால் நினைக்கலாம்.

ஆனால், ஊடகத்துறைக்குள் வந்து பல்வேறு அரசியல் நிலைப்பாடு கொண்டவர்களைச் சந்திக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிற எந்த ஒரு ஊடகவியலாளரும் அப்படி நினைக்க முடியாது.

அப்படி நினைத்து யாருடனும் பெரும் இடைவெளியையும் உருவாக்கிக் கொள்ள முடியாது.

45 ஆண்டுகளுக்கும் மேலான என்னுடைய ஊடக அனுபவத்தில், எனக்கென்று தனித்த அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த பார்வை இருந்தாலும் கூட, முழுக்க முழுக்க என்னுடைய கருத்திலிருந்து மாறுபட்ட அரசியல் தலைவர்களுடனும், மதம் சார்ந்த இயக்கங்களை நடத்தியவர்களுடனும்,  ஒரு நட்பைப் பேண வேண்டிய அவசியத்தை நான் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன்.

அப்படி நான் சந்தித்த ஒருவர் – இந்து முன்னிணி அமைப்பின் மாநிலத் தலைமைப் பொறுப்பில் இருந்தவரான ராம.கோபாலன்.

அவருடனான சில அனுபவங்களை இங்கு பகிரும்போது, பலருக்கு ஆச்சர்யமாகக் கூட இருக்கும். ஆனாலும், கீழே நான் குறிப்பிடுவது நான் சந்தித்த நிஜம்.

80-களின் துவக்கத்தில் கோவையிலிருந்து, மதுரைக்கு ரயிலில் ராமகோபாலன் திரும்பிக் கொண்டிருந்தபோது, அரிவாளால் வெட்டப்பட்டு சீரியஸான நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவர் இருந்த அறைக்கு முன்னால், காவல்துறை பாதுகாப்பு அதிகப்பட்டிருந்தது.

சில இந்து முன்னணித் தலைவர்களின் முன்னால் நின்றிருந்தார்கள். அவர்களில் எனக்குத் தெரிந்தவரான அப்போதைய இந்து முன்னணி மதுரை மாவட்டத் தலைவரான ராஜகோபாலன் அங்கிருந்தார்.

பத்திரிகை பேட்டிக்காக ராமகோபாலனைச் சந்திக்க வேண்டும் என்றபோது, உள்ளேயிருந்த ராமகோபாலனின் உடல்நிலையைப் பற்றிச் சொன்னார்.

அங்கிருந்த காவல்துறை யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அறைக்கு வெளியே என்னை காத்திருக்கச் சொன்ன ராஜகோபாலன் உள்ளே போய் ஜி-யைப் பார்த்து கேட்டுவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு உள்ளே போனார்.

கால்மணி நேரம் கழிந்திருக்கும். உள்ளே போன ராஜகோபாலன் என்னிடம் வந்து, “ஜி பேச மிகவும் சிரமப்படுகிறார், இருந்தாலும், உங்களை உள்ளே அழைச்சிட்டு வரச் சொன்னார்.

காவல்துறையின் தீவிர சோதனைக்குப் பிறகுதான் என்னால் உள்ளே நுழைய முடிந்தது.

அறையின் உள்ளே கட்டிலில் வெள்ளை நிறத்திலான கட்டுடன் படுத்திருந்தார் ராமகோபாலன். அவரது முகத்தின் ஒருபகுதி மட்டும் வெளியே தெரிந்தது.

எந்தச் சலனமுமின்றி என்னைப் பார்த்த ராமகோபாலன், அவர் படுத்திருந்த கட்டிலுக்கு அருகே வரச்சொன்னார்.

சைகை காட்டி காதுக்கருகே பேசச் சொன்னார். மிகவும் மெதுவாகத்தான் அவரால் பேசமுடிந்தது.

பேச்சின் ஒவ்வொரு சொல்லுக்கும் அடுத்த சொல்லுக்குமான இடைவெளி நீண்டிருந்தது. அவ்வளவு சிரமப்பட்ட நிலையிலும், பேச விருப்பப்பட்டார்.

நான் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் மிகவும் நிதானமாக பதில் சொன்னார். தான் தாக்கப்பட்ட விதம் குறித்து, விவரித்து தன்னுடைய தலையின் மேல் பாகத்தைப் பார்க்கச் சொன்னார்.

பக்கத்திலிருந்த ராஜகோபாலன், “ஜி-க்கு கஷ்டமா இருந்தா விட்ருங்க” என்று என்னிடம் சொன்னபோது கூட, “இல்லை அவர் கேட்கட்டும்“ என்கிற மாதிரி கை அசைவிலேயே தொடரச் சொன்னார்.

“இவ்வளவு தூரம் தாக்கப்பட்டிருக்கிற உங்களிடம் முக்கியமான ஒரு கேள்வி கேட்கலாமா?” என்று கேட்டதும், கண் பார்வையிலேயே இசைவுக் கொடுத்தார்.

“குறிப்பிட்ட சமூகத்தினரை இந்த அளவிற்கு நீங்கள் தாக்கிப் பேசியிருப்பது, சரியா?” என்று கேட்டபோது, பக்கத்திலிருந்தவர் அதை விரும்பாத நிலையிலும், ஒவ்வொரு சொல்லாக நிதானமாகச் சொல்லி அதற்கான பதிலைச் சொல்வதற்கு மட்டும் பத்து நிமிடத்திற்கு மேலே எடுத்துக் கொண்டார்.

அவர் சொல்லி முடித்ததும் அவர் சொன்னதை மறுத்து, துணைக் கேள்வி ஒன்றை நான் கேட்டபோது, “அது உங்கள் கருத்து, இது என்னுடைய கருத்து. நான் சொன்னதை அப்படியே வெளியிடுங்க” என்றார்.

சந்திப்பு முடிந்து நான் விடைபெற்றபோது, சிறு தலையசைப்புடன் விடை கொடுத்தார் ராமகோபாலன்.

அடுத்த வாரம் வெளிவந்த ஜுனியர் விகடன் வார இதழில் அட்டைப்படக் கட்டுரையில் ஒன்றாக இடம்பெற்றிருந்தது ராமகோபாலனிடம் நான் எடுத்த பேட்டி.

அடுத்து நான் சென்னைக்கு வந்து குமுதம் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தமிழகத்தையே பரபரப்பாக்கிய கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து பலர் பலியாகி இருந்தார்கள்.

அந்த சந்தர்ப்பத்தில், கோவைக்குச் சென்று அந்த சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு இரு தரப்பினரையும் சந்தித்து, எழுதியிருந்தேன்.

அந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக, பேசப்பட்ட அல் உம்மா அமைப்பின் தலைவரான பாஷா சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவருடைய தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்பதை, பல சிரமங்களுக்கிடையில் அவருடன் நான் எடுத்த பேட்டி குமுதம் வார இதழில் வெளிவந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

குறிப்பாக, இந்து முன்னணி தரப்பிலிருந்து கடுமையான தொலைபேசி அழைப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அதன்விளைவாக நானே இந்து முன்னணி அலுவலகத்திற்கு சென்று ராமகோபாலனை சந்திக்க  சென்றிருந்தேன்.

அலுவலகத்தின் மாடி அறைக்குச் சென்றபோது உற்சாகத்துடன் என்னை வரவேற்றார். 

அதற்கு முன்பே மதுரையில், அவர் மருத்துவமனையில் இருந்தபோது, நான் எடுத்த பேட்டியைப் பற்றிக் குறிப்பிட்டேன்.

பதிலுக்கு அவர், “துக்ளக் அலுவலகத்தில் நீண்ட காலமாக வேலை பார்த்து இருக்கிறீங்க. ஆசிரியர் சோ-விடம் உங்களைப் பற்றிக் கேட்டேன். உங்களைப் பற்றி நல்ல விதமாகத்தான் சொன்னார்.

ஆமா, உங்க சொந்தப் பெயர் லக்ஷ்மணன்-ஆமே என்று புன்னகையுடன் அவர் கேட்டபோது, “ஆம் அதைத்தான் சுருக்கி மணா என்று மாற்றிவிட்டேன்” என்று சொன்னதும், இன்னும் பலமாகச் சிரித்தார்.

“முதலில் உங்க பேட்டியை குமுதம் இதழ்ல பார்த்தப்போ, எனக்குள்ள இருந்த பார்வை இப்ப இல்லை.

ஒன்னு சொல்லட்டுமா, ராமாயணப்படி பார்த்தா, நான் உங்களுக்கு அண்ணன், என் பெயர்லயே ராமர் இருக்கார். உங்க பெயர்ல லக்ஷ்மணன் இருக்கார். அப்படினு பார்த்தா நீங்க எனக்கு தம்பி” என்றுச் சொல்லிவிட்டு கடவுள் நம்பிக்கையெல்லாம் உங்களுக்குக் கிடையாதாமே?” என்று என்னைப் பற்றியே துழாவிக் கொண்டிருந்தவரிடம் ஒரு வழியாக பேட்டி எடுத்தேன்.

அந்தப் பேட்டியும் குமுதம் வார இதழில் கவர் ஸ்டோரியாக வெளிவந்தது.

அதன்பிறகு அவருடன் பல சந்திப்புகள்.

ஒருமுறை கலைஞரை அவருடைய வீட்டில் பார்த்துவிட்டுவந்த அனுபவத்தைப் பற்றி படு உற்சாகமான குரலில், என்னிடம் பகிர்ந்து கொண்டபோது, இப்படிச் சொன்னார்,

“அவர் அவருடைய கருத்தில் தெளிவா இருக்கார். நா என்னுடைய கருத்துல தெளிவா இருக்கேன். அதனால, எந்த உருத்தலும் இல்லாம பேசிக்கிட்டு இருந்தோம்” என்று சொல்லிக் கொண்டு போனார்.

குமுதம் அலுவலகத்தில் மூன்று மதத் தலைவர்களை ஒன்றாக சந்திக்க வைத்து அந்த காரசாரமான சந்திப்பு நிகழ்ந்தபோது, அலுவலக வளாகத்தில் ஓங்கி ஒலித்தது அவருடைய குரல்.

வீல்சேரில் சிரமத்துடன் அந்த அலுவலகத்திற்கு வந்து விடைபெறும்போது, என்னுடைய கையைப் பற்றியபடி நன்றி தெரிவித்துவிட்டுப் போனார் ராமகோபாலன்.

எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் முரண்பட்ட எதிர்க்கருத்துக்கள் இருந்தாலும் கூட, ஒருவருடன் இணக்கமான நட்பைப் பேண முடியும் என்பதற்கு, எடுத்துக்காட்டாக அவர் மறையும்வரை அந்த நட்பும் தொடர்ந்தது.

இதேமாதிரி…

மாறுபட்ட கருத்து நிலையில் இருந்தாலும் என்னிடம் நட்புப் பாராட்டியவர்களில் ஒருவர் பாஜகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான இல.கணேசன்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் பாஜக அலுவலகமான கமலாலயத்திலும் சென்னை தி.நகரில் உள்ள அவருடைய வீட்டிலும், பல தடவைகள் சந்தித்து அவரைப் பேட்டி எடுத்திருக்கிறேன்.

அப்போது, நான் குமுதம் இதழில் வெளிவந்த ஊர்மணம் என்ற தொடரில், தஞ்சாவூரைப் பற்றி சொல்வதற்காக அவரைச் சந்தித்தேன்.

தஞ்சையிலேயே பிறந்து வளர்ந்த அவர், தஞ்சாவூர் கோவிலில் மட்டுமல்ல, அதிலுள்ள ஒவ்வொரு தெருக்களைப் பற்றியும் மிகவும் நெருக்கமான உணர்வுடன் சொல்லிக் கொண்டே வந்தார்.

உலகிலேயே எனக்குப் பிடித்த ஊர் தஞ்சாவூர்தான் என்று பலமான சிரிப்புடன் அவர் சொன்னது, தற்போதும் நினைவின் பதிவாக இருக்கிறது.

தமிழக பாஜக தலைவராக இருந்தபோது, அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாயிடம் பேட்டி எடுக்க வேண்டும் என்று சொன்னபோது, வழக்கமான சிரிப்புடன், “இன்னைக்கே கேள்விகளை குடுங்க, இந்தியில அதை மொழிமாற்றம் செஞ்சு மதியம் 2 மணிக்குள்ள கேள்விகளை தயார் பண்ணி எடுத்துட்டு வந்துடுங்க” என்றார்.

புரசைவாக்கத்தில உள்ள குமுதம் அலுவலகத்திற்கு நான் திரும்பி வந்து வாஜ்பாயிடம் கேட்க வேண்டிய கேள்விகளை நண்பர் கிருஷ்ணா டாவின்சியுடன் இணைந்து தயாரித்து அலுவலகத்திலிருந்த இன்னொருவர் மூலம் இந்தி மொழிக்கு மாற்றம் செய்து, ஒரு வழியாக இல.கணேசன் குறிப்பிட்டபடி 2 மணிக்குள் கமலாலயம் அலுவலகத்திற்குச் சென்று கொடுத்தோம்.

அப்போது, “கரெக்டா கொடுத்துட்டீங்க,  நீங்க கிளம்புங்க நான் என் வேலையைச் செய்றேன்” என்று சொல்லி அனுப்பியபோது அலுவலகத்திற்கான ஃபேக்ஸ் எண்ணை கொடுத்துட்டுவிட்டுப் போகச்சொன்னார்.

அன்றைக்கு இரவு 9 மணி இருக்கும். என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசிய இல.கணேசன், “உடனே அலுவலகத்திற்குப் போய் உங்கள் அலுவலக ஃபேக்சை சரிபாருங்கள்“ என்றார்.

உடனே நான் அலுவலகத்திற்குப் போய் பார்த்தபோது ஃபேக்ஸ் பிரதமர் வாஜ்பாய் அலுவலகத்திலிருந்து வந்திருந்தது. நாங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் தெளிவான பதிலை இந்தி மொழியில் பதிலளித்திருந்தார் பிரதமரான வாஜ்பாய்.

அந்தப் பேட்டியை அப்படியே தமிழில் மொழி மாற்றம் செய்தபோது, அதுவே அடுத்த வார குமுதம் இதழின் கவர் ஸ்டோரியாக வெளிவந்து, பரபரப்பைக் கிளப்பியது.

அந்தப் பேட்டி வெளிவந்ததும் இல.கணேசனின் துரித செயல்பாட்டிற்காக அவரிடம் தொலைபேசியில் நன்றி தெரிவித்தபோது, வழக்கம்போல, நட்புடன் கூடிய சிரிப்பு வெளிப்பட்டது அவரிடமிருந்து.

எந்தக் கட்சியாக இருந்தாலும், நம்மிடமிருந்து கருத்து ரீதியாக மாறுபட்டிருந்தாலும் கூட பரஸ்பரம் இருவரும் வைத்திருக்க வேண்டிய நம்பிக்கை முதன்மையானது.

இதழியல் துறையில் நான் கற்றுக்கொண்ட அனுபவப் பாடங்களில் கருத்து நிலையில் மாறுபட்டாலும் நட்புணர்வோடு இயங்க முடியும் என்கிற உணர்வு இப்போதும் நீடிக்கிறது.

மணா

You might also like