மின்வெட்டு, கேஸ் தட்டுப்பாடு: எப்படி சமாளிக்கப் போகிறார் விஜய்?

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் கிராமப் புறங்களிலும், பலர் இந்தக் கடும் வெப்பத்திலும் எதிர் கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சனை – ‘திடீர் மின்வெட்டு’.

சென்னையில் அதிலும் குறிப்பாக ஸ்டாலின் வெற்றியைத் தவிரவிட்ட கொளத்தூர் தொகுதியில், 3 தினங்களுக்கு முன்பு, இரவு வேளையில் மின்சாரம் தடைபட்டு அதே நிலை காலை வரை நீடித்தது.

இதுதவிர சென்னையின் மையப்பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் இத்தகைய மின்வெட்டுக்கள் தொடர்ந்து நடக்கின்றன.

இங்கு மட்டுமல்ல தமிழகத்தின் தென்கோடியில் உள்ள நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களிலும் இப்படிப்பட்ட தொடர் மின்வெட்டு நடந்து கொண்டிருக்கும் வேளையில் தான், சென்னையில் தான் பதவியேற்ற நிகழ்வில், கையெழுத்திட்ட முதல் கோப்பில், 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்கின்ற திட்டத்தைத் துவக்கி இருக்கிறார்.

விஜய்யின் முதல் அறிவிப்பும் கையெழுத்திட்ட முதல் ஆணையும் வரவேற்கத்தக்கதுதான்.

ஆனால், தற்போது, அக்னி நட்சத்திர வெயில், தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் மின்சாரப் பற்றாக்குறையை தமிழகம் ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, தற்போது பதவியேற்றியருக்கிற விஜய் இந்தப் பற்றாக்குறையை எப்படி சரிசெய்யப் போகிறார்?

அதிலும், மின்சாரத் தேவை அதிகரிக்கும் ஒரு காலக்கட்டத்தில், ஏற்கனவே இருந்துவரும் மின்வெட்டை தவிர்த்து, தான் அறிவித்தபடி 200 யூனிட் மின்சாரத்தை எப்படி இலவசமாக வழங்கப் போகிறார்?

உண்மையிலேயே ஒரு சாக் அடிக்க வைக்கும் கேள்வியைப் போலத்தான் இருக்கிறது.

அதைப்போலத்தான் எரிவாயு சிலிண்டர் பிரச்சனையும்.

இரண்டு மாதங்களுக்கு மேல், இன்னும் முற்று பெறாமல் தொடர்ந்து நடந்து வரும் மேற்காசியப் போரின் விளைவாக கச்சா எண்ணெயின் விலையும், சிலிண்டர் வாயுவின் விலையும் வெகுவாக ஏறியிருக்கிறது.

தமிழகம் முழுக்க இருக்கிற ஓட்டல்களில் மட்டுமல்ல, டீக்கடைகளிலும் கூட சிலிண்டர் பற்றாக்குறை ஒரு நெருக்கடியை உருவாக்கி, விலையேற்றத்தைக் கட்டாயப்படுத்தியிருக்கிறது.

போதாக்குறைக்கு, அமெரிக்க அதிபரான டிரம்ப் தொடர்ந்து கடைப்பிடிக்கும் ஈரானிய எதிர்ப்பு மனநிலை கச்சா எண்ணெயின் விலையை அதிகப்படுத்தி இருக்கிறது.

அதன் விளைவாக அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட கூட்டத்தில், வரும் 15-ம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு போன்றவற்றில் விலையேற்றம் நிகழலாம் என்று சூசகமாக உணர்த்தியிருக்கிறார்.

அப்படி எரிபொருள் விலை உயர்த்தப்பட்டால், அதையொட்டி பல்வேறு வணிகப் பொருட்களின் விலையும் கூடலாம். தற்போது விநியோப்பட்டுக் கொண்டிருக்கும் சிலிண்டரின் விலையும் கூடலாம்.

அப்படியொரு நிலை உருவாகும்போது, விஜய் அறிவித்திருக்கிற ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் என்கின்ற செயல் திட்டத்தை எப்படி நிறைவேற்ற முடியும்?

உலகளாவிய அளவில், எழுந்திருக்கிற பொருளாதாரம் சார்ந்த சிக்கல்களுக்கு இடையே தமிழ்நாடு போன்ற மாநிலம், அதனால் பாதிக்கப்படாமல் தனித்து இருக்க முடியுமா?

சிலிண்டரை விநியோகிப்பதில், எதாவது பிரச்சனையோ தாமதமோ ஏற்பட்டால், அதை தமிழகத்திலுள்ள வாக்காளப் பெருமக்களும் எதிர்க்கட்சிகளும் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? என்பது தான் கேள்வி.

– அரவிந்தன்

You might also like